

இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்த ஐ.பி.எல். சீசன் முடிந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துவிட்டது. என்னதான் சென்னை அணி கோப்பையை வென்றாலும், அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. சென்னை அணியில் தமிழர்கள் இடம்பெறாமல் போனாலும், பிற அணிகளில் இடம்பெற்ற தமிழர்கள் சிலர் லைம்லைட்டில் இருந்தனர். தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், சாய் கிஷோர் தவிர்த்து மற்ற வீரர்களின் பங்களிப்பைப் பார்ப்போம்.
சாய் சுதர்சன்: சென்னையைச் சேர்ந்த 21 வயதான வளர்ந்துவரும் கிரிக்கெட்டர். குஜராத் அணிக்காக வெறும் ரூ.20 லட்சம் என்ற அடிப்படை விலையில் தேர்வானவர். கேன் வில்லியம்சன் அடைந்த காயத்தால் குஜராத் ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், கொடுத்த காசுக்கு மேலேயே குஜராத்துக்காக வியர்வையைச் சிந்தினார். குறிப்பாக சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் விளாசிய 96 ரன்களால்தான் குஜராத் அணி சவாலான இலக்கை எட்ட முடிந்தது. மேலும் டாப் ஆர்டரில் குஜராத் அணிக்காகப் பக்கபலமாக விளையாடினார்.
முருகன் அஸ்வின்: இவரும் சென்னையைச் சேர்ந்தவர்தான். 30 வயதான அஸ்வின், ஏற்கெனவே பல ஐபிஎல் அணிகளில் விளையாடிவர்தான். இந்த முறை ராஜஸ்தான் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
என். ஜெகதீசன்: கோவையைச் சேர்ந்த 28 வயதான மட்டை வீரர். கடந்த சீசன் வரை சென்னை அணியில் இருந்தவர். இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ரூ.90 லட்சத்தில் தேர்வானார். இந்த சீசனில் 6 போட்டிகளில் ஜெகதீசன் விளையாடினார். ஆனால், இதில் ஹைதராபாத் அணிக்காக எடுத்த 36 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகப் பதிவானது.
விஜய் சங்கர்: திருநெல்வேலியைச் சேர்ந்த 31 வயதான இவர், ஆல் ரவுண்டர். 2012ஆம் ஆண்டு முதலே பல அணிகளுக்காக ஐபிஎல்லில் விளையாடி வருபவர். கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக ரூ.1.4 கோடியில் வாங்கப்பட்டார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். பெங்களூரு, கொல்கத்தா அணிக்கு எதிராக அரை சதம் விளாசிய விஜய்சங்கர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்று கொடுத்தார். இந்த சீசனில் குஜராத் அணியும் அவரை நன்றாகப் பயன்படுத்தியது.
டி. நடராஜன்: சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ‘யார்க்கர்’ மன்னன். 32 வயதான இவர், தொடர்ந்து ஹைதராபாத் அணியின் ஹீரோ. அந்த அணி நிர்வாகம் ரூ.4 கோடிக்கு நடராஜனைத் தக்கவைத்தது. இந்த சீசனில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பெரும்பாலான போட்டிகளில் நடராஜன் களமிறங்கினார். ஆனால், விக்கெட்டுகளைக் குறைவாக வீழ்த்தியபோதும், அவருடைய ரன் சிக்கனப் பந்துவீச்சு வழக்கம்போல சிறப்பாகவே இருந்தது. இவருடைய திறமையைக் கண்டு அந்த அணியின் பயிற்சியாளரும் ஜாம்பவானுமான பிரையன் லாரா, அவருடைய தொப்பியை நடராஜனுக்குப் பரிசளித்தது நெகிழ்ச்சியாக அமைந்தது.
வருண் சக்கரவர்த்தி: சென்னையில் வளர்ந்த வருண் சக்கரவர்த்தியும் கொல்கத்தா அணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் வீரர். ரூ.8 கோடிக்கு அந்த அணியால் தக்கவைக்கப்பட்டவர். கொல்கத்தா அணியின் முக்கிய துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படும் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, அந்த அணிக்காக ‘டெத்’ ஓவர்களையும் அற்புதமாக வீசினார். இந்த சீசனில் கொல்கத்தா அணி ஜொலிக்காதபோதும் வருண் சக்கரவர்த்தி ஜொலித்தார். சிக்கனமாகப் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷாருக்கான்: சென்னையைச் சேர்ந்த 28 வயதான அதிரடி ஆட்டக்காரர். பஞ்சாப் அணிக்காக ரூ.9 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். சிறந்த ஃபினிஷர் என்ற பெயரெடுத்த ஷாருக்கான், இந்த சீசனில் எல்லாப் போட்டிகளிலும் விளையாடினார். லக்னோ அணிக்கு எதிராக 10 பந்துகளில் எடுத்த 23 ரன்கள், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பெங்களூரூவுக்கு எதிரான கடைசி சுற்றுப் போட்டியில் 41 ரன்களை விளாசினார். தன்னுடைய ஃபினிஷர் பணியை ஓரளவுக்கு நிறைவேற்றினார்.
வாஷிங்டன் சுந்தர்: சென்னையைச் சேர்ந்த 23 வயதான ஆல்ரவுண்டர். புனே, பெங்களூரு அணிக்காக முன்பு விளையாடியவர். ஹைதராபாத் அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் சுந்தர், ரூ. 9 கோடிக்கு தக்கவைக்கப்பட்டவர். இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள், 24 ரன்களை விளாசி, ஆல்ரவுண்டருக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்தார். ஆனால், காயம் காரணமாக இடையிலேயே வாஷிங்டன் சுந்தர் விலக நேர்ந்தது.