நளி நாட்டியம்: சும்மா சிரிக்கத்தான்| ஃபுட் விளாகர் எனும் புதிய பகாசுரன்கள்

நளி நாட்டியம்: சும்மா சிரிக்கத்தான்| ஃபுட் விளாகர் எனும் புதிய பகாசுரன்கள்
Updated on
3 min read

அண்மையில் ஓ.டி.டி.யில் வெளியான சென்னை ஆந்தாலஜியின் ‘மாடர்ன் லவ்’முதல் பகுதியான ‘லாலாகுண்டா பொம்மைக’ளில், பானிபூரி கடையைப் பற்றி ஒரு ஃபுட் விளாகர் (Food Vlogger) ஒருவர் லைக்ஸ், கமென்ட், ஷேருக்காக அடித்துவிடும் பொய்யால் அந்த ஏரியாவே ரகளையாகிவிடும். ஃபுட் விளாகர்கள் பலர் சுடும் ‘வடை’கள் எல்லாமே அப்படிப்பட்ட ரகங்கள்தான்.

மனிதனின் மிகப்பெரிய எதிரியும் நண்பனும் நாக்குகள்தாம். ஓர் உணவின் சுவையை வரவேற்பதில் நாக்குகளே முதன்மையானவை. ஒருவர் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ செல்லும் முன் அந்தந்த ஊர்களின் முக்கியமான உணவு வகைகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்.

அதன் சுவை தொடங்கி பின்விளைவுகள் வரை ஆராய்ந்துகொள்கிறார். குறிப்பிட்ட உணவு வகைகள் எந்தக் கடைகளில் சுவையாக இருக்கும் என்று அறிய தன்முனைப்பு காட்டத் தொடங்கியதில் உதித்தவர்கள்தாம் இந்த ஃபுட் விளாகர்கள் என்னும் ‘பல்லுணவு சுவையறிவிப்புக் குழு’.

இல்லாத பொல்லாத சவடால்களை அசராமல் உளறுதல், உலகில் இல்லாத அரிய பொய்களைப் பல முக சேட்டைகளோடு கூகுளிலிருந்து எடுக்கப்பட்ட படங்களோடு சேர்த்துச் சொல்லுதல், சினிமாக்களில் இடம்பெறாத காட்சிகளை எங்கிருந்தாவது வெட்டி ஒட்டி வெளியிடுதல், ஒரு சினிமா அல்லது அது சம்பந்தப்பட்ட நடிகர்கள் குறித்து வன்மத்தைக் கக்கி வீடியோ வெளியிடுதல், அரசியல் ஆலாபனைகள், கிசுகிசுக்கள், உலகச் செய்திகள், ஸ்டிங் அறுவைசிகிச்சைகள் என சகல காரியங்களுக்கும் துணைபோகும் உலகளாவியத் தளமான யூடியூப், இந்த ஃபுட் விளாகர்களை ‘வாங்கய்யா ராசாக்களா!’ என்று அள்ளி எடுத்துக்கொண்டது.

யூடியூபில் வீடியோ வெளியிட்டு அந்தக் காணொளிகளை நிறைய பேர் பார்க்கப் பார்க்க யூடியூபர்களுக்கு யூடியூப் நிறுவனம் காசை அள்ளி வீசவே லைக், பெல் பட்டன், ஷேர், சப்ஸ்கிரைப் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உலகெங்கும் சப்தமாக இளிக்கத் தொடங்கின.

யம்மி, எம்மோ: வீடுகளில் சமைத்து, அதன் ரெசிபியை உதிர்த்து ஒரு குழுவாக உலகெங்கிலும் உள்ள அடுப்பங்கரையை ஆக்கிரமித்த நளபாகர்கள் ஒரு பக்கமிருக்க இந்த ஃபுட் விளாகர்கள் குழு ஒவ்வொரு ஹோட்டல்களாக ஏறி இறங்கி அங்குள்ள உணவு வகைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்.

“இந்த ஹோட்டல்ல புளிக்குழம்பு செம்மையா இருக்கும்! அதுலயும் கொஞ்சம் ஐஸ்கிரீம் சேத்துத் தருவாங்க பாருங்க, அந்த டேஸ்டுக்காகவே செத்துறலாம் சார். இப்ப நாம அதத்தான் டேஸ்ட் பண்ணப் போறோம்” என்று சொல்லிவிட்டு, அந்தக் குறிப்பிட்ட உணவு டேபிளுக்கு வந்த பிறகு, அதைத் தொட்டு ருசித்துவிட்டு அந்தச் சுவை நாக்கின் நாலாம் சுவையரும்பின் மீது படும் முன்னரே “ஆஸம், ரிடிகுலஸ், எக்ஸெம்ப்ளரி, ஃபெண்டாபுலஸ், யம்மி, எம்மோ!” என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள்.

அதை அப்படியே வீடியோவாக்கி அந்தக் குறிப்பிட்ட உணவு விடுதிகளின் பூகோளவியல் அடையாளம் முதற்கொண்டு அந்த உணவகத்தின் வெளியே பிச்சை கேட்கும் தாத்தாவின் அங்க அடையாளம் வரைக்கும் டீடெயிலாகக் கொடுத்துவிட்டு அடுத்த ஹோட்டலை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள்.

நீருக்குள் பதுங்கியிருந்து வீடியோ எடுத்த டிராவல் விளாகர்ஸ், தெருவுக்குள் தேமே என்று சென்றுகொண்டிருக்கும் ஆட்களை வம்புக்கிழுத்து வசவு பேசி, சமயத்தில் கத்திக்குத்து வரைக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டு நிகழ்ச்சியின் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியோடு கூடிய முகபாவனையில் பரிசு வழங்கிய ‘Pranksters’, சமூக நன்னடத்தை முன்னெடுப்புக்காக காவல் துறையின் முன்பாக யுத்தங்களை ஏறெடுத்த ‘Rebels’, வாகனங்களை அதிவேகத்தில் ஒட்டி மற்ற வாகன ஓட்டிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து தங்களைப் பெற்றவர்களுக்கு முன்பே முன்னோடியாக மரித்துக் காட்டிய ‘Cannibals’ குழு... இப்படி அநேகக் குழுக்களை ஓரங்கட்டிய பெருமை இந்த ஃபுட் விளாகர்களையே சாரும்.

ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களைவிடவும் ஃபுட் விளாகர்கள் அதிகம் அமர்ந்திருப்பதை அறிந்து ஹோட்டல் உரிமையாளர்கள் ஸ்தம்பித்துப் போனதும் உண்டு. ஒரு கையில் கேமரா, இன்னொரு கையில் மைக்கோடு வருகிறவர்களைப் பார்த்தவுடன் ‘Evil Dead’ பேயைக் கண்டவர்கள் போல ஓடத் தொடங்கிவிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு, “என்ன சார்! உங்க ஹோட்டலைப் பற்றி பெருமையாகப் பேசப் போற எங்ககிட்டயே மனசாட்சி இல்லாம பில்ல நீட்டறீங்க?” என்பது போன்ற குரல்கள் ஒலிக்கும் முன்னரே நிறைய பேர் கடையைச் சாத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.

களேபர கன்டென்ட்: ஒரு ஹோட்டலில் ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் நன்றாக இருக்குமென்று ஒரு ஃபுட் விளாகர் வீடியோவைப் பார்த்து அந்த ஹோட்டலுக்குப் போயிருக்கிறார் நண்பர் ஒருவர். அங்கு போய்ப் பார்த்தால், அந்தக் கடை இருந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் ஒரு காயலான் கடை.

அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அந்தக் கடை தன்னுடைய ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சம்பாத்தியத்தை மொத்தமாகக் கொட்டி ஆரம்பிக்கப்பட்ட கடை என்றும், ஒரு யூடியூபர் அங்கு வந்து ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் அட்டகாசமாக இருக்குமென்று புரளியொன்றைப் பரப்பிவிட்டதாகவும், அந்தக் கடையில் ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் நிஜத்தில் கேவலமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஏதோ ஒரு பயல் அங்கு வந்து பரோட்டா சாப்பிட்டு விட்டு காசில்லாமல் நிற்கவே, கடையின் முதலாளி அவனைத் திட்டியிருக்கிறார். அதற்குப் பரிகாரமாகத்தான் அந்தப் பொய்ப் புரளியைப் பரப்பியிருக்கிறான் அந்த விஷமி. அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு நிறைய வாடிக்கையாளர்கள் ஆப்பத்துக்கும் ஆட்டுக்கால் பாயாவுக்கும் வந்து வரிசையில் நின்று தின்றிருக்கிறார்கள்.

அதன் பலனாக முகத்தில் காறித் துப்பிவிட்டுப் போகவே, பலப் பல சமையல்காரர்களைக் கொண்டு வந்து நிறுத்தியும்கூட அவரால் அந்தப் பயல் சொன்ன சுவையில் ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் சமைக்க முடியவில்லை. அதனால், ஷட்டரைச் சாத்திவிட்டு மீண்டும் பிளம்பிங் வேலைக்கே வெளிநாடு போய்விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘இப்படியும் பழிவாங்க முடியுமா?’ என்கிற ரீதியில் ஒரு வீடியோ போட்டு லட்சங்களில் லைக்ஸ் வாங்குமளவுக்கான கன்டென்ட் அது. மொத்தத்தில் ஃபுட் விளாகர்கள் குழுவினர் சிலோன் சிக்கன் குழம்பிலிருந்து சிலி நாட்டு எரிமலைக்குழம்பு வரைக்கும் நக்கிப் பார்த்துவிட்டு அதன் சுவையை ஆராய்ந்து பீராய்ந்து வீடியோ போட்டாகிவிட்டது. டைனசோர் முட்டைக் கொத்து அல்லது இந்திரலோகத்துப் பாற்கடல் அமுது ஆகியவைதான் இவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்கின்றன என்பதுதான் ஆறுதலான உண்மை.

பிரபு தர்மராஜ்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். ‘அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்’ என்கிற குறுநாவலையும் ‘ஆதிகுடி மக்களும் ஆல்கஹாலும்’, ‘ழ்’, ‘கோலப்பனின் அடவுகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் ‘கசவாளி காவியம்’, ‘ராணி இல்லம்’ ஆகிய நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய ‘சக்ரவர்த்தி திரையரங்கம்’ என்னும் சினிமா விமர்சனப் புத்தகம் குறிப்பிடத்தகுந்தது.

- writerprabhudharmaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in