

கதாநாயகனாக நடிக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு எவ்வளவு கனமான கதாபாத்திரத்தையும் இவரால் சுமக்க முடியும் என்று தூக்கிக் கொடுத்துவிடுகிறது தமிழ் சினிமா. இப்போது அவர் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘விடியும் காத்திரு’.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆர்.அரவிந்த ராஜன். திருச்சியைச் சேர்ந்த இவர், இளங்கலை ஆங்கில இலக்கியப் பட்டதாரி. இயக்குநர்கள் மிஷ்கின், பாலா ஆகியோரின் கதை விவாதங்களில் பங்குபெற்று, அவர்களிடம் பாராட்டும் பெற்று வளர்ந்தவர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த ராஜன் இயக்கிய முதல் குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தாமோதரன், அதில் நடித்த அம்ஜிதா ஷெரின் உள்பட ஏழு பேர் ஒரு குழுவாக, சென்னையில் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். இந்தக் குழு, தங்களின் ஒட்டுமொத்த கனவாக ‘விடியும் காத்திரு’ படத்தை முதல் படைப்பாக எடுத்து முடித்திருக்கிறது. கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்று எழுதிய கதையே ‘விடியும் காத்திரு’.