தேவா: வைராக்கியத்தின் வெற்றி | அஞ்சலி

தேவா: வைராக்கியத்தின் வெற்றி | அஞ்சலி
Updated on: 
3 min read

தொண்ணூறுகளின் மத்தியில், ஒரு வார இதழில் இசை விமர்சகர் சுப்புடுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “இன்றைய காலக்கட்டத்தில் சிறப்பாக இசையமைக்கும் இசையமைப்பாளர் யார்?” அவர் சொன்ன பதில் - ‘தேவா’.

ஏ.ஆர்.ரஹ்மான் வரவால் தமிழ்த் திரையிசைப் போக்கில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டிருந்த நேரம் அது. ரஹ்மானுக்கு முன்பே திரையுலகுக்கு வந்து தன்னளவில் சிறப்பான பாடல்களை வழங்கிக்கொண்டிருந்த தேவா, புதிய போக்குக்கு முகங்கொடுத்துத் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருந்தார்.

எதிர்மறை விமர்சனங்கள், புறக்கணிப்பு களுக்கு மத்தியில் சுப்புடு போன்ற கறார் விமர்சகர்களின் கவனத்தையும் அவரால் ஈர்க்க முடிந்தது. அதற்குக் காரணம் அவரது அயராத அர்ப்பணிப்பு!

உழைப்பின் வெற்றி

“இவருக்குப் பட்டம் எதற்கு? படம் கொடுங்கள்” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனே தேவாவுக்கு வாய்ப்பு கேட்டு, பொது மேடையில் சிபாரிசு செய்த காலம் இருந்தது. ஏமாற் றங்கள், புறக்கணிப்புகளைத் தாங்கிக் கொண்டுப் பெரும் பசியுடன் காத்திருந்த தேவா, வாய்ப்புகள் கிடைத்ததும் வெவ்வேறு கதைக்களங்களுக்குப் பொருத்த மான இசையை வழங்கி, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

‘சின்ன பொண்ணு தான் வெட்கப்படுது’, ‘செம்பருத்தி செம்பருத்தி’, ‘எனக்கெனப் பிறந்தவ’, ‘கண்ணதாசனே கண்ணதாசனே’ போன்ற பாடல்கள் மூலம் இசை ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேவா, கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஒட்டுமொத்தமாகத் திரை ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார்.

அதன் பின்னர் ரஜினியின் ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்து மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்தார். இதற்கிடையே, தேவாவின் இசையில் வெளியான ‘ப்ரியா… ப்ரியா ஓ ப்ரியா’ (கட்டபொம்மன்) பாடலின் இனிமையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம், தான் தயாரித்த ‘ஆசை’ படத்தில் அவரையே இசையமைக்க வைத்தார்.

மேற்கத்திய இசை ஆல்பங்களின் பாணியில் அமைந்த ‘ஆசை’ படத்தின் பாடல்கள் அன்றைய காலக்கட்டத்தில் அனைவரையும் புருவம் உயர்த்தவைத்தன. ‘ஆசை’ இயக்குநர் வஸந்த்தின் ‘நேருக்கு நேர்’ பாடல்களும் இளைஞர்களை வசீகரித்தன.

குறிப்பாக, ‘அவள் வருவாளா’ பாடலில் தெறிக்கும் இளமைத் துடிப்பு அன்றைக்கு மிகப் புதியது. ஒரு படத்துக்குப் பாடல்களுக்கு இணை யான முக்கியத்துவம் பின்னணி இசைக்கு உண்டு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in