The Measure of a Man: வேலையில்லாத வேதனையும் வேதனையான வேலையும் | சினிமாவும் அரசியலும் 25

The Measure of a Man: வேலையில்லாத வேதனையும் வேதனையான வேலையும் | சினிமாவும் அரசியலும் 25
Updated on
4 min read

வேலையிழந்த ஒரு நடுத்தரவர்க்கத்து மனிதன் வேறு வேலையைத் தேடி அலைந்து திரிவதையும், சந்திக்கும் அவமானங்களையும் எதார்த்தமாகப் பிரதிபலிக்கும் இந்தத் திரைப்படத்தையும், உலகத் தொழிலாளர்களின் இதயத்தில் ஒரு சிறிய அளவிலான நடுக்கத்தை ஏற்படுத்திய சமீபத்திய செய்தியையும் என்னால் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அப்படி என்ன செய்தி என்கிறீர்களா?

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஆரக்கிள் என்கிற மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் நாள் காலையிலேயே தன்னுடைய 30,000 ஊழியர்களை ஒரு மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் செய்திருக்கிறது. அதில் 12,000 ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நினைத்துப் பாருங்களேன், நிறுவனத்திற்கு இதுவொரு செய்திதான். ஊழியர்களுக்கு?

முப்பதாயிரம் இதயங்களில் எத்தனை கனவுகள் நிறைந்திருக்கும்? இன்னும் முடிக்க வேண்டிய எத்தனை கடமைகள் மிச்சமிருக்கும்? துயரம் நிறைந்த முப்பதாயிரம் கதைகள் இருக்கத்தான் செய்யுமல்லவா? ஒரு மின்னஞ்சலில் ஆயிரமாயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிடலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

அப்படியென்றால், இந்த உலகம் யாருக்காக? யாருடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்கிறது. இந்தத் திரைப்படமும்கூட அப்படிப்பட்ட ஒரு கேள்வியை மிக மெல்லிய குரலில் ஆனால், அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தங்களுடைய புகழ்பெற்ற படைப்பான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள்.

‘முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலைபெற்ற எல்லா இடங்களிலும் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் அப்பட்டமான பணப்பட்டுவாடாவைத் தவிர வேறெந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று மாற்றியது. மிக முக்கியமாக அதுவரையிலும் மறைவாக இருந்த சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.’

இந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரணத் தொழிலாளியாக இருந்தால் போதுமானது. இந்த முதலாளித்துவச் சமூகமைப்பில் சதா இருபத்தி நான்கு மணிநேரமும் ஒரு தொழிலாளி சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தன்னுடைய ஓயாத உழைப்பின் மூலம் ஒவ்வொரு பொருளுக்கும் சந்தை மதிப்பு உருவாகக் காரணமாக இருக்கும் தொழிலாளி, கடைசியில் தானும் ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்படுவது கொடுமையல்லாமல் வேறென்ன?

அந்தக் கொடுமையை மெல்லிய, அமைதியான முறையில் இந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஸ்டீபன் பிரைஸ். பொய்யான காரணங்களைச் சொல்லி வேலையிலிருந்து நீக்கப்படும் ஒரு தொழிலாளியின் அகம், புறம் இரண்டையும் மிகுந்த நேர்மையோடும், உண்மையோடும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

பெரும்பாலும் கேமரா நாயகன் தியெரி மேல்தான் நிலைகுத்தி நிற்கிறதே ஏன் என்கிற கேள்விக்கு, ‘தியெரி அனுபவிப்பதைப் பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே கேமரா எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்’ என்கிறார் இயக்குநர்.

மேலும், இந்தத் திரைப்படத்தில் நாயகனாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் வின்செண்ட் லிண்டனுக்கு 75 ஆவது கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

விருதைப்பெற்றுக்கொண்டு பேசும்போது, மீண்டும் தான் ஓர் அற்புதமான கலைஞன் என்பதை நிரூபித்தார். ”கலைஞர்கள் எடுக்கக்கூடிய உறுதியான நிலைப்பாடு அவர்களுடைய படைப்புகளில்தான் இருக்கிறது. நாடுகளும் அரசியல்வாதிகளும் வரலாற்றில் நிலைத்து நிற்பது கலைஞர்களின் படைப்புகளில்தான். இப்போது கலைஞர்களின் காலம். அவர்கள் மனிதர்களை உயர்த்த வேண்டும். கற்பனையை வளர்க்க வேண்டும். எப்போதும் நினைவூட்ட வேண்டும் என்று பேசினார் நடிகர் வின்செண்ட் லிண்டன். இந்தத் திரைப்படத்தை அவருக்காகவும் அலட்டிக்கொள்ளாத அவருடைய உடல்மொழிக்காகவும் கண்டிப்பாகப் பார்க்கத்தான் வேண்டும்.

நன்றாக லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும் நிறுவனமொன்று போலியான பொருளாதாரக் காரணங்களைச் சொல்லி பல தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது. வேலையிழந்தவர்களில் நாயகன் தியெரியும் ஒருவர். வேலையில்லாமல் இன்னும் ஒன்பது மாதங்கள் நீடித்தால் உதவித்தொகை 500 ஆகக் குறைந்துவிடும்.

500இல் எப்படி வாழ்வது. வீட்டுக் கடனுக்கான தவணையைக் கட்ட வேண்டும். குடும்பத்தை நடத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறப்புக் குழந்தையாக இருக்கும் மகனை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இதயம் படபடத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் நிறைந்திருப்பதால், வேலையிழந்த சக தொழிலாளர்கள் போராட்டம் செய்யலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று சொல்லும்போது மெல்ல விலகிக்கொள்கிறான்.

வேலை தேடி அலையத் தொடங்குகிறான். வேலைக்கான நேர்காணல்கள் அவனுடைய ஆன்மாவைச் சோதிப்பதாக அமைகின்றன. விண்ணப்பத்தை இன்னும் நன்றாகத் தயார் செய்திருக்கலாம், கொஞ்சம் வயதாகிவிட்டது, என்று வேலை கொடுக்கிறோம் என்பதைத் தவிர வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள் நேர்காணல் செய்கிறவர்கள். வேலை அவசியம் என்பதற்காக அமைதியாக, பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிறான் தியெரி.

மகனுக்கான மருத்துவச் செலவிற்கும் கல்விக்குமே மாதம் 300 யூரோ தேவைப்படுகிறது. என்ன செய்யலாம் என்று யோசித்த கணவனும் மனைவியும் வீட்டை விற்றுவிடலாம் என்கிற முடிவிற்கு வருகிறார்கள். 16 வருடம் பழைய வீடு, 7000 யூரோவிற்கு விற்கலாம், வங்கிக்கடனை அடைத்துவிட்டு மீதியை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறார்கள்.

வீடு பார்க்க ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். 6000 யூரோவிற்குக் கேட்க, முடியாது என்கிறான் தியெரி. நிலைமையைப் புரிந்துகொண்டு குறைத்துக் கேட்கிறார் வந்தவர். அதிகபட்சமாக 100 அல்லது 200 யூரோ குறைக்கலாம் அதற்குமேல் முடியாது என்கிறான் தியெரி. போதாத காலம் வீட்டை விற்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அதிகமாகப் பேச, வீட்டை விற்பதில்லை என்கிற உறுதியான முடிவிற்கு வருகிறான் தியெரி.

மீண்டும் வேலைக்காக ஒரு நேர்காணலுக்குச் செல்கிறான். அங்கு குழு நேர்காணல் நடக்கத் தொடங்குகிறது. தியெரியை மதிப்பிடச் சொல்கிறது நிர்வாகம். எப்படி உட்கார்ந்திருக்கிறார்? எப்படிச் சாய்கிறார்? எப்படிப் பேசுகிறார் என்று கருத்துச் சொல்கிறார்கள். மெதுவாகப் பேசுகிறார். அதிகம் சிந்தித்துப் பதில் சொல்கிறார். சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கிறார் என்று அவரைப் பற்றிய கருத்துகள் நீண்டுகொண்டே போகின்றன. அந்த வேலையும் கிடைக்காமல் போகிறது. வேலையில்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பதட்டம் கூடிக்கொண்டே போகிறது. கடைசியில் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியில் காவலாளியாக வேலை கிடைக்கிறது.

கடை முழுக்கப் பொருத்தப்பட்டிருக்கும் சுமார் 80 கண்காணிப்புக் கேமராக்களையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். சொல்லப்பட்டிருக்கும் வேலை ஒன்றுதான், வாடிக்கையாளர்கள் பொருள்களைத் திருடுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். ‘ஒரு திருடனுக்கு வயதும் நிறமும் கிடையாது. எவனும் திருடனாக இருக்கலாம். பெரியவர்கள், குழந்தைகள் என எவரும்’ என்பதுதான் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே சென்று கொண்டிருக்கும் அந்த வேலையும்கூட ஒரு கட்டத்தில் அவர் மனசாட்சியை உறுத்தத் தொடங்குகிறது.

பசிக்குத் திருடியவனைப் பிடித்துக் கொடுத்ததில் தொடங்கி, தன்னுடைய சக ஊழியர்களையே கண்காணிக்க நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்படுகிறார். நீண்டகாலம் அங்கே வேலை செய்த பெண்மணியின் சிறிய தவறை கேமராவின் வழியாகக் கண்டறிய, அவரை மோசமாகப் பேசுகிறார்கள் நிர்வாகத்தார். அந்தப் பெண்மனி அங்கேயே தற்கொலை செய்துகொள்கிறார். அந்த இறுதிச் சடங்கை வெறும் சடங்காக நடத்தியது மட்டுமல்லாமல், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்று மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள் நிர்வாகத்தினர். தியெரியின் மனசாட்சியோ அறுக்கத் தொடங்குகிறது.

இப்படிப்பட்ட சூழலில், இந்த மாதிரி ஓர் இடத்தில் வேலை செய்ய வேண்டுமா என்று யோசித்த தியெரி கண்காணிப்பு கேமரா, காவலாளி உடை என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்கிறார்.

பின்னணியில் ’முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலைபெற்ற எல்லா இடங்களிலும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் அப்பட்டமான பணப்பட்டுவாடாவைத் தவிர வேறெந்த ஒட்டுமில்லை உறவுமில்லை என்று மாற்றியது’ என்கிற வார்த்தைகளை ஒலிக்க விட்டுக்கொள்ளலாம்.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

The Measure of a Man: வேலையில்லாத வேதனையும் வேதனையான வேலையும் | சினிமாவும் அரசியலும் 25
The Old Oak: அன்புக்காக அலைந்து திரியும் அகதிகள் | சினிமாவும் அரசியலும் 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in