

தமிழ்த் திரையிசையின் நீண்ட ராஜபாட்டையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓர் இசைமொழி ரசிகர்களை மயக்கும். அந்த மொழியைச் சில இசையமைப்பாளர்கள் தங்கள் மெட்டுகளைக் கொண்டு படைக்கிறார்கள். சிலர் பின்னணி இசையைக் கதை சொல்லும் கருவியாகக் கையாண்டு பெயர் பெறுகிறார்கள்.
இந்த இரண்டு தளங்களையும் தன் நவீன இசையால் நிறைத்துவருகிறார் சாம் சி.எஸ். தனித்துவமாக உருவாக்கும் ஒலிகளாலும், கதை சொல்லும் பாடல்களைத் தனித்த சாயலுடன் உருவாக்குவதாலும் பார்வையாளர்களின் அங்கீகாரத்தை ஒவ்வொரு படத்திலும் பெற்று விடுகிறார் பின்னணி இசை என்கிற பெயரில் அது தேவைப்படாத இடத்திலும்கூட, ஏதோவொரு வாத்தியக் கருவியின் இசையைத் திணிக்கும் இசையமைப் பாளர்கள் இன்னும் கோலிவுட்டில் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால், சாம்.சி.எஸ். அசலான ‘லைவ்’ கருவிகளின் இசையையும் நவீன ஒலிகளையும் இணைத்து உருவாக்கும் பின்னணி இசையை, திரைக்கதையின் மிக முக்கியக் கதாபாத்திரமாக மாற்றுவதில் கில்லாடி எனப் பெயர் பெற்று விட்டார்.