

எந்தவொரு கதையிலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் இறுதியாகச் சொல்லும் வசனம் மிகவும் முக்கியமானது. பெரும்பாலும், அது அக்கதாபாத்திரம் இறக்கும் தறுவாயில் அல்லது கைது செய்து அழைத்துச் செல்லப்படும் தருணத்தில் வெளிப்படும். உதாரணமாக, ‘தனி ஒருவன்’ சித்தார்த் அபிமன்யு இறக்கும் முன்னர் சொல்லும் வசனம் “நீ கேட்ட வாழ்க்கை நான் கொடுத்துவிட்டேன்... நாட்டுக்கெதிரா இல்ல... நீ கேட்ட... உனக்காக”. இப்படி எத்தனையோ வசனங்கள் இருந்தாலும், எந்தவொரு எதிர்மறை கதாபாத்திரமும் நாயகனோடு நிகழ்ந்த ஒரு நேர்காணலை நினைவுகூர்ந்தபடி திரையில் இறந்ததாக, அதற்கு முன்னரும் பின்னரும் வந்ததேயில்லை. 25 ஆண்டுகளுக்கு முன், ஊடகவியலாளர் புகழேந்தி, முதலமைச்சர் அரங்கநாதனை ‘நேருக்கு நேராக’ நிகழ்ச்சியில் எடுத்த நேர்காணல் தான் அது. நவம்பர் 1999-இல் வெளிவந்த அந்த புகழ் பெற்ற நேர்காணலுக்கு இப்போது வயது 25.
தமிழ்த் திரையுலகில் நீளமாக நேர்காணல் எடுக்கும் காட்சிகள் வெகு அபூர்வம். இது பெரும்பாலும் பாடல் காட்சியாகவோ அல்லது சிறிய காட்சியமைப்பாகவோ அமைந்திருக்கும். இதன் தொடக்கம் என்பது ‘சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படத்தில் என்எஸ் கிருஷ்ணனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் நிகழும் போட்டி பாடல் [பேட்டி பாடல்!] என்று கூறலாம்.
அதேபோல, கந்தன் கருணையில் “அவ்வையே... அரியது என்ன” என முருகரின் கேள்விகளுக்கு அவ்வையாராக வரும் கே.பி.சுந்தராம்பாள் பாடலாகப் பதிலளிப்பார். உரையாடல் வடிவங்கள் என்று எடுத்துக்கொண்டால், திருவிளையாடலில் தருமிக்கும் இறையனாருக்கும் இடையே நிகழும் கேள்வி பதிலும், வீரபாண்டிய கட்ட பொம்மனில் ஆங்கில அதிகாரி ஜாக்சனை பேட்டி காண்பதையும் முக்கியமாகச் சொல்லவேண்டும். ஆனாலும் இவை யாவுமே 5 நிடங்களுக்கும் மேல் நீடிக்காத, வடிவமற்ற நேர்காணல்கள். இந்த வரிசையிலிருந்து விலகி, நூறு வருடத் தமிழ் சினிமா சரித்திரத்தில் ‘முதல்வன்’ திரைப்படத்தில் மறக்கவே முடியாத அப்படியொரு 13 நிமிடப் புகழ் பெற்ற நேர்காணல் ஒன்று நிகழ்ந்தது.
நேர்காணல்களை மையமாக வைத்து வெளிவந்த ஆங்கிலப் படங்கள் அனேகம் உண்டு. ‘தி யூஷுவல் சஸ்பெக்ட்ஸ்’, ‘ஜாக்கி’, ‘ஃப்ராஸ்ட் நிக்ஸன்’ ஆகிய சில படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால். தமிழ் சினிமாவில் அப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி உரையாடுவதை, அதுவும் ஒரு வணிக திரைப்படத்தில் 13 நிமிடத்திற்குச் சுவாரசியம் குறையாமல் காட்சியாக வைப்பது மிகவும் சவாலான சோதனை. இந்த கற்பிதத்தை வசனங்களின் மன்னர் எழுத்தாளர் சுஜாதாவும் இயக்குநர் ஷங்கரும் படத்தொகுப்பாளர்கள் லெனினும் வி.டி.விஜயனும், பின்னணி இசையில் ஏ ஆர் ரஹ்மானும் சேர்ந்து உடைக்கின்றனர்.
“ஒரு முக்கியமான ஆளைப் பேட்டியெடுக்க போறீங்க” என Q டிவி ஊடக அதிகாரி, புகழேந்தியிடம் சொல்வதில் துவங்கிவிடுகிறது அந்த நீண்ட காட்சியின் மொத்தப் பரபரப்பு. முதல்வர் அரங்கநாதனின் வருகையும் புகழேந்தியின் தயார்ப்படுத்துதலும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. உலக வங்கி, மனித உரிமை ஆணையம் புள்ளிவிவரங்கள், சொத்துக் குவிப்பு, தேர்தல் அறிக்கை, சாதி அரசியல், ‘அகலாது அணுகாது’ திருக்குறள் மேற்கோள் என கலந்து கட்டி உரையாடலில் அதகளம் செய்திருப்பார்கள்.
வெகு நேர்த்தியான கேள்வியும் அதற்கு ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் பதிலடியும் என ஒரு சண்டைக்குக் கட்சி போலவே அந்த நேர்காணல் சூடு பிடிக்கும். இதில் சுவாரஸ்யம் கூட்ட அவ்வப்போது ஷங்கர் திரைப் படைகளுக்கே உரித்தான “எப்படிக் கேட்டான் பாரு”, “மாட்னான்டா மானஸ்தன்” போன்ற வெகுஜன வசன எதிர்வினைகளும் சேர்ந்தன.
கூடுதலாக, முதல்வரின் நாக்கில் கொக்கி போடும் கார்ட்டூன் எதிர்வினை எனக் காட்சித் தொகுப்பில் பதற்றம் கூட்டின. கிட்டத்தட்ட ஒரு குத்துச்சண்டை போலவே சரிசமமாகவே அந்த உரையாடல் யுத்தம் நிகழும். ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் ஒற்றை வரியாகிய “நீ ஒரு நாள் முதல்வனாக இருந்து பாரேன்” என்று அரங்கநாதனின் சவாலுக்குப் புகழேந்தி ஒப்புக்கொள்வதில் அந்த நேர்காணல் முடிவடையும்.
அந்தக் காட்சி அவ்வளவு வலுவாக அமைந்ததனால் மட்டுமே அத்திரைப்படம் இன்றளவும் நமக்கு நினைவில் உள்ளத்து. மேலும், எந்த ஆயுதங்களுமின்றி ஒரு கதாநாயகனும் வில்லனும் மோதிக்கொள்ளும் ஓர் உரையாடலை, யுத்தமாக மாற்றியதில் நடிகர் அர்ஜுனுக்கும், ரகுவரனுக்கும், அவரின் பிரத்தியேகக் குரலுக்கும் பெரும்பங்கு உண்டு. இன்றளவும் ஒரு வெகுஜன சினிமாவின் இவ்வளவு நீண்ட நெடிய காட்சியமைப்பை இவ்வளவு நேர்த்தியாக யாரும் வடிவமைத்ததும், இயக்கியதும், தொகுத்ததும் இல்லை.
இதன் நீட்சியாக 2021-இல் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிரிஷ்டி கோஸ்சுவாமி என்கிற 19 வயது சிறுமி தேசியப் பெண் குழந்தை தினமான ஜனவரி 24-இல், ஒரு நாள் முதல்வராக நிஜ வாழ்வில் இருந்துள்ளார். இன்னொரு திரைப்படமான கேவி ஆனந்த் இயக்கத்தில் 2017-இல் வெளிவந்த ‘கவண்’ திரைப்படத்திலும் இப்படி ஒரு நேர்காணல் வந்துள்ளது. எனினும், அது சுவாரசியம் குறைந்த மலினமான பிரதியாக இருந்ததும் மட்டுமல்லாமல் ‘முதல்வன்’ அளவுக்குத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
முதல்வன் திரைப்படத்தில், அரங்கநாதன் சுடப்பட்டு இறக்கும் தறுவாயில் தன்னுடைய கடைசி வசனமாக எல்லாவற்றுக்கும் காரணமான அந்த நிகழ்வை ஒரு கணம் நினைத்து “அது ஓர் அழகிய நேர்காணல்” என ஆங்கிலத்தில் சொல்லி முடித்திருந்தது சிறப்பு. அந்த வசனம் மிகவும் உண்மையும் கூட!