

‘திரையரங்க உரிமையாளர்களைக் கண்டித்து செப்டம்பர் 1 படப்பிடிப்பு நடத்தாமல் வேலைநிறுத்தம்’ என்று இரண்டு முக்கியத் தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவித் திருக்கின்றன.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்களை நோக்கி ‘மைத்ரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனல் பறக்கப் பேசியிருக்கிறார் ‘ஹபீபி’ படத்துக்காகப் பாராட்டப்பட்டு வரும் இயக்குநர் மீரா கதிரவன்.
பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் சார்பில் தருண் குமார் பாப்னா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பரத் ஜே.எஸ். இயக்கியிருக்கும் ‘மைத்ரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசும்போது: “தரமான சிறிய படங்களுக்குப் பத்திரிகைகளும் ஊடகங்களும் எல்லாக் காலத்திலும் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், திரையரங்க உரிமையாளர்கள்தான் ஆதரிப்பதில்லை.
திரையரங்குகளில் சிறிய படங்களை மூன்று நாள்களுக்கு மேல் திரையிடுவதில்லை. முன்பெல்லாம் ‘லேட் பிக்கப்’ என்று பல படங்கள் ஒரு வாரத்துக்குப் பிறகே திரையரங்கில் வெற்றிப்படங்களாக மாறியிருக்கின்றன. இன்று அதற்கான சாத்தியங்கள் இல்லை.
இந்த வேளையில் ‘மைத்ரி’ போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வெற்றிபெற வேண்டியது அவசியம்” என்றார். பரத் ஜே.எஸ்.- காயத்ரி ஷான் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு மல்லுவுட்டிலிருந்து ஜோயல் ஜான்ஸ் இசையமைக்கிறார்.