

இயக்குநர், தயாரிப்பாளர் சுந்தர்.சி. சமீபத்தில் ‘மாய பிம்பம்’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு இயக்குநரைப் பாராட்டியிருந்தார். அந்தப் படத்தை எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் கே.ஜே.சுரேந்தருடன் உரையாடியதிலிருந்து…
அறிமுகப் படத்தை நீங்களே தயாரித்தது ஏன்?
சொந்தப் படம் தயாரிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அம்மா அப்பாவுக்காக இளங்கலை வேளாண் அறிவியல் படித்துவிட்டு, எனக்குப் பிடித்த சினிமாவில் நுழைந்தேன். 5 படங்களில் உதவி இயக்குநர், 1 படத்தில் இணை இயக்குநர் என முறையாகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்துடன் முதல் படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து, பல தயாரிப் பாளர்களைச் சந்தித்துக் கதை சொல்லத் தொடங்கினேன்.
கதையைக் கேட்டு முடித்துப் பாராட்டினார்கள். ஆனால், சொல்லிவைத்த மாதிரி அனைவரும், ‘இதைப் பிரபலமான நடிகர்களைக் கொண்டு படமாக்குவோம்’ என்றார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. ‘இதுவரை அறியாத புதுமுகங்களைக் கொண்டு இந்தக் கதையைப் படமாக்கினால்தான், கதைக்களத்தில் இருக்கும் ஃபிரெஷ் உணர்வும் முக்கியச் சம்பவமும் ரசிகர்களுக்குத் திரை அனுபவமாக மாறும்’ என்றேன்.
ஆனால், அதையாரும் புரிந்துகொள்ளவில்லை. இனி போராடிப் பயன் இல்லை என்றுதான், பெற்றோரின் பணிக் கொடை சேமிப்பு, உறவினர், நண்பர்களின் நிதி உதவியுடன் படத்தை நானே தயாரித்தேன். செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெயர் வைத்த காரணம்கூட, நாம் நேசிக்கும் ஒன்றுக்கு நேர்மையாக இருந்து, ரசிகர்களுக்குத் தரமான ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான்.