

“ஏதோவொரு விதத்தில் இவ்வுலகம் என்னை மைய அச்சாக வைத்துக்கொண்டு சுழல்கிறது என்றே நினைக்கிறேன்”. - இது 1998 ‘தி ட்ரூமேன் ஷோ’ திரைப்பட கதாநாயகன் தன்னை பற்றிச் சொல்லும் ஒரு சுய விமர்சனம்.
வானொலி காலத்தில் இருந்து காணொலி காலத்துக்கு அடி வைத்த அன்றிலிருந்தே தனி மனித சுதந்திரத்தின் சிக்கல்கள் தொடங்கிவிட்டது. இந்தச் சிக்கலை மையத்தில் வைத்து, ஒரு வங்கிக் கொள்ளை பின்புலத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு சாமானியனின் கதையே மலையாளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘ஐ, நோபடி’ (I, Nobody).
ஒரு சாதாரண அரசு ஊழியரான ராஜீவன் தற்செயலாக வங்கிக் கொள்ளை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அந்தக் கொள்ளை சம்பவம், மனைவி மீரா மற்றும் இரு பெண் குழந்தைகள் கொண்ட அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி, விருப்பமில்லாத திருப்பங்களின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. பின்னர் அவரது வாழ்வும், குடும்பமும், கொள்ளை போன பணமும் என்ன ஆனது என்பதே கதை.
மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ‘த்ரிஷ்யம்’ ஜார்ஜ் குட்டி போலவே தன் குடும்பம், மகள்களைக் காக்க எல்லா எல்லைகளுக்கும் செல்லும் ஒரு சாமானியனின் கதை இது.
‘ஆடு ஜீவிதம்’, ‘எம்புரான்’ போன்ற பெரிய திரைப்படங்கள் முடித்த பிரருத்விராஜ் சுகுமாரனின் தயாரிப்பில். ‘ரோஸ்சார்ச்’ வெற்றிக்குப் பிறகு நிஸாம் பஷீரும் இணைந்திருக்கும் திரைப்படம் இது. பிருத்விராஜ் நேர்காணல்களில் சொன்னது போலவே இப்படம் குற்றம், நகைச்சுவை, புலனாய்வு, குடும்பம் என பல வகைமைகள் கலந்த புதுமையான களத்தில் இயங்குகிறது.
கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் ராஜீவன் நுழைய, அங்கு ஏற்கெனவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் மூவர், அவனை கண்கட்டி கடத்துவது என நேரத்தை வீணடிக்காமல், நேரடியாக படம் துவங்கிவிடுகிறது. அந்த துவக்கப் புள்ளியில் இருந்து நாயகனின் சிக்கலான குடும்ப வாழ்வு, அலுவலக வெறுமை, மகள்களின் மீதான பாசம் என தலைகீழ் இயக்கத்தில் காட்சிகள் விரிகின்றன.
பரபரப்பான திருப்பங்கள், கணவன் - மனைவி அகச் சிக்கல்கள், அவர்களோடு தொடர்பான ஒரு வங்கிக் கொள்ளை, துரத்தும் காவல் துறை என முதல் பாதியை மிகவும் அட்டகாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் யுக்தி இல்லாமலே கதையும், கதையின் ஆதார சிக்கல்களும் நமக்கு நேரடியாகவே புரிய வைக்கப்படுகிறது.
முதல் பாதியின் விறுவிறுப்பான எழுத்தும், நேர்த்தியான ஒளிப்பதிவும், அட்டகாசமான படத்தொகுப்பையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பின்னணி இசை ஓரளவுக்கு உதவி செய்த போதிலும், பாடல்கள் வேகத் தடையாகிப்போனது சோகம். இவற்றை விட சண்டைக்காட்சி அமைப்புகள் சிறப்பு. குறிப்பாக மின்தூக்கி சண்டைக்காட்சியில் வடிவமைப்பும் படத்தொகுப்பும் வெகு பிரமாதம்.
இரண்டாம் பாதியில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளாலும், படத்தின் களம் மற்றும் நிறம் தொடர்பின்றி மாறிக்கொண்டே வருவதாலும் கதைப்போக்கின் கவனம் சிதறுகிறது. கூடுதலாக, ஷங்கர் படம் போலவே ஒரு சமூக கவனக்குவிப்பையும், அரசியல் நையாண்டியையும் சேர்த்திருப்பது சரிவர பொருந்தி அமையாமால் போய்விடுகிறது.
படத்தின் நீளம் இன்னொரு குறை. தேவையற்ற இந்தி, ஆங்கில (ஆம்) பாடல்களையும், துரத்துதல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக செதுக்கப்பட்ட படைப்பு நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். பேருந்து சண்டைக்காட்சியும் துரத்தலும் ஓர் உதாரணம்.
அளவான, அழுத்தமான பிருத்விராஜின் நடிப்பைக் காட்டிலும், குறைவான திரி இருப்பில் பிரமாதமாக அசத்தியிருக்கிறார் மீராவாக வரும் பார்வதி திருவோத்து. இவர்கள் தவிர, குழந்தை நட்சத்திரங்கள், திக்குவாய் காவலராக வரும் ஹக்கீம் ஷாஜகான், அசோகன் ஆகியோர் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள். அதேசமயம் தேசிய விருது வாங்கிய நடிகையான பீனா சந்திரன் சின்ன கதாபாத்திரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.
காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் உணவுச் சங்கிலியின் தொடர்பை பற்றியும், தாவரயுண்ணியானது ஊனுண்ணியாக மாற வேண்டிய கட்டாயம் பற்றியும் சொல்லும் காட்சி சிறப்பு.
ஒலி வடிவமைப்பு இப்படத்துக்கு ஆகப் பெரிய துணை. ஒவ்வொரு முறை கதவு தட்டப்படும் காட்சி ஒரு திருப்பத்தை ஒலி வழியாக கடத்தியிருப்பது நேர்த்தி. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் ரமீஸின் புதுமையான படத்தொகுப்பும் தொழில்நுட்ப உச்சபட்ச பங்களிப்புகள் எனலாம். பாடல்களும், சூப்பர் ஹீரோத்தனமான சண்டைக் காட்சிகளும் படத்தின் நீளத்தை சற்றே சோதிக்கின்றன.
இணையத் தொடர்பு இல்லாது இருப்பதே உண்மையான சுதந்திரத்தின் நவீன விளக்கத்தை அழகாக கையாண்டிருக்கிறார்கள். படத்தின் நீளத்தையும் தொய்வான இரண்டாம் பாகத்தையும் சரிசெய்திருந்தால் ஸ்ரீராம் ராகவானின் ‘அந்தாதுன்’ போலவே அமைந்திருக்க வேண்டிய உச்சத்தை இப்படம் இழந்திருக்கிறது.
குறிப்பாக, உண்மை ஊர்ந்து சென்று சேர்வதற்கு முன்னர், பொய்கள் பறந்து சென்று சேர்த்துவிடும் சமூக வலைதள அவலங்களைக் காட்டிய ‘ஸ்டோலன்’ இந்தி படம் போலவே இப்படமும் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது. அதற்காகவும், தொழில்நுட்ப ரசவாதத்துக்காகவும் மட்டுமே சற்றே சீரற்று இயங்கும் இப்படத்தை பரிந்துரை செய்யலாம்.