

இன்றைக்குத் தமிழ் சினிமா பல திசைகளை நோக்கி விரிந்துவிட்டது. மிகை உணர்ச்சிகள் பகடிக்கு உரியதாகி விட்டன. வசன காலத் திரைப்பட வகைமை வழக்கொழிந்து விட்டது.
எனினும் ஏழு பத்தாண்டுகளைக் கடந்து இன்றும் தவிர்க்க முடியாத திராவிட இயக்க சினிமா ‘பராசக்தி'. ஃபிரான்சில் ’புதிய அலை' திரைப்பட இயக்கம் எழுச்சிபெறும் முன்பே ‘திராவிட சினிமா' தமிழ்த் திரையில் எழுந்தது சினிமா சரித்திரம்.
இந்தப் புகழில் அப்படத்தின் வசனகர்த்தா மு.கருணாநிதிக்குப் பாதிப் பங்கென்றால் மீதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு. மு.கருணாநிதியின் நூற்றாண்டு கடந்து சென்றுள்ள வேளையில் முக்கியத்துவம் பெறும் 1120 பக்க பெரிய ஆய்வு நூலாக வாசகரை இது மிரட்டினாலும் தகவல்களையும் வரலாற்று ஆவணங்களையும் தேடித் தேடிக் கொட்டிக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். 390 பக்கங்களில் ஆய்வு முடிந்துவிட்டாலும், அதன் பின்னர் வருவது ஓர் அருங்காட்சியகம் எனலாம்.
பராசக்தியைச் சுற்றிய ஆவணங்கள், அவற்றின் ஒளிநகல்கள், காட்சிகளின் புகைப்படங்கள், பராசக்தி பற்றி அவர் எடுத்துக்காட்டிய பத்திரிகை விமர்சனங்களின் முழுவடிவம், சிவாஜி, கலைஞர், பெருமாள், இயக்குநர் பஞ்சுவின் கணேசன் பற்றிய பார்வை என்று பலப்பல கட்டுரைகள் முத்தாய்ப்பாக, பராசக்தி கதை வசனம் பாடல்களின் வரிவடிவம் என தகவல்கள் ஏராளம். தேடிச் சேர்த்த மூல ஆவணங்களை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்டிருப்பது ஆய்வு நூலின் நோக்கத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறது.