

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டு களையும் பரிசுகளையும் பெற்ற தனது குறும்படமொன்றை விரித்து ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்கிற தலைப்பில், தமிழில் முழு நீளத் திரைப்படம் ஆக்கியிருக்கிறார் டி.அந்தோணி. அவரே நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்குநராக அறிமுகமாகிறார். அது பற்றி அவருடன் உரையாடியதில் இருந்து ஒரு பகுதி:
உங்களைப் பற்றிக் கொஞ்சம்..
நான் ஒரு சென்னைப் பையன். இன்ஜினியரிங் முடித்து ஐடியில் இணைந்து ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தேன். சினிமா மீதிருந்த ஆர்வம் காரணமாக, அடிக்கடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுற்றிக்கொண்டிருப்பேன்.
அங்கே ஹாலிவுட் படங்களுக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து வரும் கேட்ரிஸ் டேவிஸ் என்கிற சினிமா ஆளுமை ஆண்டுதோறும் நடத்திவரும் ‘ஹாலிவுட் 50;50’ என்கிற பயிலரங் குக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றேன்.
அதில், ‘டாப் 20’ பட்டியலில் இடம்பிடித்ததால் ஆங்கிலப் படமொன்றில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன். பயிற்சிக்குப் பிறகு நான் எடுத்த ஆங்கிலக் குறும்படங்களில் ஒன்று ‘வென் எஸ் சோ செயின் சோல்’ (Wen Es So Sein Soll). இதற்கு ஜெர்மன் மொழியில் தலைப்பு வைக்க ஹீரோயின் கதாபாத்திரம்தான் காரணம். ‘விதிப்படி நடப்பது நடக்கும்’ என்பது பொருள். இதைத்தான் இப்போது முழுநீளத் திரைப்படம் ஆக்கியிருக்கிறேன்.