

கழிவுநீர் தெருவெங்கும் ஓடும் மிகவும் பின்தங்கியக் குடியிருப்புப் பகுதிதான் நமது கதாநாயகனுடைய வாழ்விடம். கெட்டவனாக வலம் வரும் அவனுக்கு இரக்கம் என்பதே கிடையாது. எப்படியாவது அடுத்தவர்களைத் துன்புறுத்தி, திருடி, வன்முறையில் ஈடுபட்டு வாழ நினைப்பவன். அவனுடன் இன்னும் மூன்று பேர் இருக்கின்றனர்.
அந்த மூவரும்கூட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்தான். அவர்களில் ஒருவன் திருட்டில் ஈடுபடும்போது ஒரு கொலை செய்துவிடுகிறான். அப்போது எழும் பிரச்சினையில் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவளது காரை அவசர அவசரமாகத் திருடிக்கொண்டு அங்கிருந்து நாயகன் தப்பிக்கிறான்.
அப்போதுதான் தெரிகிறது, காரின் பின் இருக்கையில் கைக்குழந்தை ஒன்று குறுகுறுவென்று விழித்துகொண்டு கால்களையும் கைகளையும் ஆட்டியபடி படுத்திருப்பது! அந்தக் குழந்தையின் தாய் சாகவில்லை. போலீஸின் உதவியோடு தனது குழந்தையைத் தேடத் தொடங்குகிறாள். அதேவேளை, நாயகன் அந்தக் குழந்தையைத் தனது இருப் பிடத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறான்.