

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் படம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் பற்றிப் பார்ப்போம். 1983இல் வெளியாகி உலகம் எல்லாம் பரவலாகப் பேசப்பட்டது ‘ஸ்கேர்ஃபேஸ்’ (Scarface). இதில் டோனி மாண்டானா என்கிற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அல்பசீனோ நடித்திருப்பார். இன்றும் மிக முக்கியமான ‘கேங்ஸ்டர்’ திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பெற்றுவிடும் படம் இது.
1980இல் கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான அகதிகள் வந்தனர். அதில் ஒருவனாக டோனி மாண்டானா அமெரிக்கா வந்து இறங்குகிறான். அவனுடன் மேன்னி என்கிற நண்பனும் வருகிறான். அமெரிக்காவுக்கு வருகையில் டோனியை யாருக்குமே தெரியாது.