

நாயகன் நாயகன் மீது தவறாகக் குற்றம்சாட்டி அவனை ‘பிரேம்’ செய்தல் என்கிற கதைக் கருவைக் கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதுபோன்ற குறிப்பிட்ட ஒரு வேற்றுமொழிப் படத்தின் கதை, கதாபாத்திரங்கள் ஆகியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு, காட்சிகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ரிச்சர்ட் கியர் நடித்து ஹாலிவுட்டில் 1997இல் வெளியான படம் ‘ரெட் கார்னர்’ (Red Corner). அதில் ரிச்சர்ட் கியர் ஒரு பெரிய தொழிலதிபர். அமெரிக்காவி லிருந்து சீனாவுக்கு வியாபாரரீதியாக ஒரு பயணம் மேற்கொள்வார். அவருக்கு சீன தேசம் புதியது.
அந்தக் கலாச்சாரம், மொழி ஆகியவை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அப்போது சீனாவில் ஒரு ராணுவத் தளபதியின் மகளைக் கொன்றுவிட்டதாக அவர் மீது கொலைப்பழி சுமத்தப்படும். அவர் எதிர் பார்த்துச் சென்றிருந்த வியாபார ஒப்பந்தமும் அவரது எதிரிக்கு வழங்கப்பட்டுவிடும்.
அப்போது ரிச்சர்ட் கியருக்காக ஒரு பெண் வழக்கறிஞர் ஆஜராவார். முதலில் ரிச்சர்ட் கியர் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல், சிறுகச்சிறுக அவர் மீது பின்னப்பட்டுள்ள சதிவலை யைத் தெரிந்துகொண்டு உதவத் தொடங்குவார். இறுதியில் இந்தச் சதிக்குப் பின்னாலிருக்கும் வில்லன்கள் என்ன ஆனார்கள்? ரிச்சர்ட் கியர் நாடு திரும்பினாரா என்பது படத்தின் கதை.