

ஒரு சிறுவன், தனது வீட்டைவிட்டு வெளியே வந்து நெடும்பயணம் மேற்கொள்கிறான். அப்போது, அவன் எதிர்கொள்ளும் உலக அனுபவம் எப்படி இருக்கும்? துடுக்குத்தனம், புதிய மனிதர்களிடம் முதலில் பயம், அதன் விளைவாக மனதுக்குள் இருக்கும் பிடிவாதத்தை நயமாக வெளிப்படுத்துவது, மற்றவர்களைத் தனக்கு உதவுமாறு செய்யும் சாமர்த்தியம், தனக்குப் பிடித்துவிடும் புதிய மனிதர்களிடம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வில் நம்பிக்கை வைப்பது என இவையெல்லாமே அவனிடம் வெளிப்படும்.
தனக்குக் கிடைத்த அனுபவங்களி லிருந்து கற்றுக்கொண்டு தன் உணர்வு களை இவ்வாறெல்லாம் வெளிப்படுத்தும் அகி என்கிற சிறுவனின் கதைதான் ‘நந்தலாலா’படம். அகி வீட்டை விட்டு வெளியேறியது போலவே, மனநலக் காப்பகத்தில் பல வருடங்களைக் கழிக்க நேர்ந்த ஒருவன், முதன்முறையாக வெளியுலகத்தை அனுபவிக்கிறான்.
இதுபோன்ற சூழலில் எதிர் கொள்ளும் மனிதர்களிடம் அவனுடைய எதிர்வினைகள் எப்படி இருக்கும்? பார்க்கும் விஷயங்களிலெல்லாம் ஒரு ஜாக்கிரதையான அணுகுமுறை; புதிய மனிதர்களிடம் ஒதுக்கமும் பயமும், அதே நேரம், தனது மனதில் இருக்கும் விஷயத்தை அடைவதில் இருக்கும் பிடிவாதம், ஒரு மனிதனை நம்பிவிட்டால் அவனது அருகாமை தரும் பாதுகாப்பு உணர்வை அனுபவித்தல், நினைத்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யும் குழந்தைத்தனம் என பாஸ்கர் மணி என்கிற மனநலம் பாதிக்கப்பட்டு அந்நிலையிலிருந்து மீண்ட மனிதன் இவன் தான் அகியுடன் படம் முழுக்கப் பயணம் செய்பவன். இந்த இருவரும் எதிர்கொள் ளும் அனுபவங்கள்தான் ‘நந்தலாலா’ படத்தின் திரைக்கதை.
உலகப் புகழ்பெற்ற இயக்குநர் தகேஷிகிடானோ இயக்கி, 1999இல் வெளியான ஜப்பானியப் படமான ‘கிகுஜிரோ’ திரைப்படத்தில் உள்ள முதன்மைக் கதாபாத்தி ரங்களும் மிகப் பெருவாரியான காட்சிகளும் அப்படியே ‘நந்ததலாலா’வில் இடம்பெற்றன. ‘நந்தலாலா’ பட இயக்குநர் மிஷ்கினுக்கு தகேஷி கிடானோவை மிகவும் பிடிக்கும். அந்த வாஞ்சையால் ‘கிகுஜிரோ’விலிருந்து பாதிக்கப்பட்டு இக்காட்சிகள் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கலாம்.
ஆனால் ‘கிகுஜிரோ’வில் இருந்து எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில், சில காட்சிகள் தமிழில் அப்படியே வருவதால், படத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும் காரணிகளாகவும் அவை இருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, புல்லட்டில் வரும் அந்த இரண்டு நபர்கள். ‘கிகுஜிரோ’வில், அந்த புல்லட் ஆசாமிகளுக்குத் தகுந்த காரணம் இருக்கிறது.