

கடந்த 2004இல் ‘மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ்’ (Maria Full of Grace) என்கிற ஸ்பானிய மொழிப்படம் வெளியானது. ஜோஷுவா மார்ஸ்டன் இயக்கிய இப்படம், உலகெங்கும் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமை களைப் பற்றியும் போதைப்பொருள்களைக் கடத்தும் ‘மியூல்’ (Mule) என்பவர்களைப் பற்றியும் விரிவாகப் பேசியது.
மியூல்கள் எவ்வாறு போதைப்பொருள்களைக் கடத்துவார்கள்? போதை மாத்திரைகளை ‘லாடெக்ஸ்’ (latex) என்று சொல்லப்படும் பொருளால் செய்யப்பட்ட ஆணுறைகள், கையுறைகள் போன்றவற்றில் வரிசையாக அடுக்குவார்கள்.
அதை சீல் செய்வார்கள். பின்னர், மியூல் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீல் செய்யப்பட்ட லாடெக்ஸ்களைக் கடிக்காமல் எப்படி விழுங்க வேண்டும் என்று பயிற்சி கொடுப்பார்கள்.
கடத்தல் தொடங்கும் நாளில், அந்தப் போதைப்பொருள் எந்த நாட்டுக்குச் சென்றுசேர வேண்டுமோ, அதற்கு ஏற்பவும் விமானப் பயணத்தின் நேரத்தைக் கணக்கிட்டும் விழுங்க வைப்பார்கள். இப்படி விழுங்கப்பட்ட போதைப் பொருள் செரிமானம் ஆகும் முன்னர் அவர்கள் போய் இறங்க வேண்டும்.