

கான்சாஸ் நகரத்திலிருந்து நியூயார்க் மாநகரத்துக்கு வருகிறான் ஸ்லெவின் என்கிற இளைஞன். வந்தவன், தனக்குத் தெரிந்த நண்பனான நிக்கியின் வீட்டில் தங்குகிறான். ஆனால், நிக்கியின் வீட்டுக்கு ஸ்லெவின் வந்தபோது அவன் வீட்டில் இல்லை.
எங்கே சென்றான் என்பதும் தெரியவில்லை. அப்போது ஒரு ரவுடி கும்பல் திடீரென்று நிக்கியின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருக்கும் ஸ்லெவின் வயிற்றில் ஒரு குத்துவிட்டு, அவன்தான் நிக்கி எனக் கருதி அவனை அப்படியே துப்பாக்கி முனையில் கடத்திக்கொண்டுபோய், தங்களுடைய தலைவன் முன்னால் நிறுத்துகின்றனர்.
அந்த தாதாவிடம் நிக்கி கடன் வாங்கி சூதாடியிருந்தான். அதைக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். நிக்கிக்குப் பதிலாக, இக்கதையின் ஹீரோவான ஸ்லெவினைத் தவறாகக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். ஸ்லெவின் ‘நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை’ என்று சொல்லியும் தலைவன் தாதா கேட்பதாக இல்லை.