

இதுவரை எத்தனையோ சுட்ட கதைகளைப் பார்த்தோம். உலக அளவில் பிற மொழிகளில் வெளியாகும் படங்களைச் சுட்டுப் படமாக்கும் கெட்ட பழக்கத்துக்கு முடிவு இருக்கப் போவதில்லை. என்றாலும் இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் இது.
இதில் இரண்டு ஆங்கிலப் படங்களிலிருந்து சுட்டு எடுக்கப்பட்ட கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டு எப்படி ஒரு தமிழ்ப்படம் எடுக்கப்பட்டது என்பதைக் கவனித்துவிட்டு, இப்போதைக்குக் கைகுலுக்கிக் கொள்வோம்.
2013ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்’, சைபர் குற்றம், பயங்கரவாதம், ஊழல், பழிவாங்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. ஒரு ஸ்டைலான, விறுவிறுப்பான ஆக்ஷன் படமாகப் பேசப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னரே வெளியாகியிருந்த ‘ஸ்வார்டுஃபிஷ்' (Swordfish -2001), ‘லிவ் ஃப்ரீ ஆர் டை ஹார்டு' (Live Free or Die Hard -2007) ஆகிய படங்களின் கதை இப்படத்தில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ‘ஆரம்பம்’ வெளிவந்தபோது ஆங்கிலப் படங்களை அதிக அளவில் பார்க்கும் ரசிகர்களுக்கு அது நன்றாகவே தெரிந்தது.
இவ்வளவுதான் மாற்றம்
இவற்றில் ‘ஆரம்பம்’ படத்தின் கதை பெரும்பாலும் ‘ஸ்வார்டு ஃபிஷ்’ படத்திலிருந்தே எடுத்து மாற்றப் பட்டிருக்கும். எப்படியென்றால், ‘ஸ்வார்டுஃபிஷ்’ திரைப்படத்தில் சக்திவாய்ந்த, மிக புத்திசாலியான ஒருவன்தான் நாயகன் (குற்றவாளி என்று பிறரால் கருதப்படுபவன்). அவன், அரைமனத்துடன், குற்றச் செயல்கள் செய்ய அவ்வளவாக விருப்பமில்லாத ஒரு கணினி ஹேக்கரைத் தன் குழுவில் சேர்த்துக் கொள்வான்.
அந்த ஹேக்கரின் தொழில்நுட்பத் திறமையைப் பயன்படுத்தி, நடக்கவே நடக்காது என்று கருதப்பட்ட ஒரு பெரிய வங்கிக்கொள்ளையைச் செயல் படுத்துகிறான். ‘ஆரம்பம்’ படமும் இதுவேதான்.