

சுயநலத் தேவைகளுக்காக, ஒருவரை இன்னொருவர் தெரியாத இரண்டு நபர்கள் ஒரு திருமணத்தில் தற்காலிகமாக இணைந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கதைக் கருவில் அமைந்த ஓர் ஆங்கிலப் படத்தையும் அதையே அடியொற்றி எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ஒன்றையும் பார்ப்போம்.
பிரபல இயக்குநர் பீட்டர் வெய்ர் (Peter Weir) இயக்கிய ‘கிரீன் கார்டு’ என்கிற படம் 1990இல் வெளியானது. அமெரிக்காவில் வாழும் ஜார்ஜ் ஒரு ஃபிரெஞ்சு இளைஞன். அவனது விசா காலம் முடியப்போகிறது.
இருந்தும் அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கிறான். இந்த வேளையில் ப்ராண்ட்டி என்கிற அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கு நட்பு உருவாகிறது.
இருவரும் ஒரு அபார்ட்மெண்ட்டில் சேர்ந்து வாழ நினைக்கிறார்கள். ஆனால், அங்கோ திருமணமானவர்களுக்கே இடம் கொடுக்கப்படும். இதற்காக ‘கிரீன் கார்டு வெட்டிங்’ செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். இதன்படி, இருவரும் பெயருக்குத்தான் திருமணம் செய்துகொள்வார்களே தவிர, கணவன் மனைவி என்கிற உண்மையான தாம்பத்ய பந்தம் இருக்காது.
இந்தத் திருமணத்தால் இருவருக்கும் என்னென்ன தேவையோ அது நிறைவேறியபின், அவரவர் வழியில் சென்றுவிடலாம்.இருவரும் முறைப்படி திருமணத் தைப் பதிவுசெய்துகொள்கின்றனர். ஆவணங்கள் தயாராகின்றன.
ப்ராண்ட்டி அவள் விரும்பிய அபார்ட் மெண்ட்டில் இந்த ஆவணங்களை அளித்து, திருமணமானதைக் காட்டிக் குடிபோகிறாள். ஆனால் ஜார்ஜ் அவளுடன் தங்குவதில்லை. கணவன் எங்கே எனக் கேட்பவர்களிடம், ‘அவர் வெளிநாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபட் டிருப்பதாக’ப் பொய் சொல்கிறாள்.