

ஜப்பானில் புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் கேகோ ஹிகாஷினோ (Keigo Higashino). அவர் எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஜப்பானியப் படமும், அதை அப்படியே காட்சிக்குக் காட்சி தமிழில் கொண்டுவந்த ஒரு படத்தைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
2002இல் கேகோ ஹிகாஷினோ ‘இந்த விளையாட்டின் பெயர் கடத்தல்’ (The Name of the Game Is Kidnap) என்கிற நாவலை எழுதினார். அடுத்த ஆண்டே ‘கேம்’ என்கிற (Game) என்கிற பெயரில் திரைப்படமாக அது வெளியானது.
ஷுன்ஷுகே சகுமா என்பவன் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிவான். நிறுவனத்தில் அவனுக்கு நல்ல பெயர். மிகவும் பிரபலமானவன். அப்போது, அந்த ஊரின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுக்கான விளம்பர ‘புராஜெக்ட்’ அவனுக்குக் கிடைக்கிறது. அதில் சில ஆண்டுகள் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் ஷுன்ஷுகேவுக்கு, இறுதி நிமிடங்களில் அந்தப் பிரமாண்ட புராஜெக்ட் மறுக்கப் படுகிறது.
இதனால் மிகுந்த கோபமடையும் ஷுன்ஷுகே, அப்படி அந்த புராஜெக்டை மறுத்த பணக்காரரான கட்ஷுதோஷியின் வீட்டுக்குக் கோபத்துடன் செல்கிறான்.
அவருடன் சண்டையிட வேண்டும் என்பதே அவன் நோக்கம். அப்போது அந்த வீட்டிலிருந்து தப்பிக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளைப் பின்தொடர்கிறான். அப்போதுதான் அது கட்ஷுதோஷியின் மகள் ஜுரி என்பது புரிகிறது.