

ஹாலிவுட் படம் ஒன்றி லிருந்து சுட்டு, மராத்தி யில் படமாக்கிய பின், தமிழில் முறையாக அதை ரீமேக் செய்த படத்தைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். 1993இல் ‘ஃபாலிங் டௌன்’ (Falling down) என்கிற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. அப் படத்தின் கதையில் ஹீரோ மைக்கேல் டக்ளஸ் ஓர் எளிய குடிமகன்.
திடீரென வேலையை இழந்ததால் மன அழுத்தத்தில் இருப்பார். ஒரு நாள் பெரிய டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொள்வார். அந்தக் கூட்ட நெரிசலில் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவருக்குக் கோப மூட்ட, வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்குவார். ஒரு பொதுத் தொலை பேசி பூத்துக்குச் சென்று, விவாகரத்தான மனைவியுடன் பேச விரும்புவார்.
மகளின் பிறந்தநாளுக்குச் செல்வது அவரின் திட்டம். ‘காயின்’ போட்டுப் பேச உரிய சில்லறை இருக்காது. எனவே, ஒரு கடைக்குச் சென்று டாலர் நோட்டைக் கொடுத்து சில்லறை கேட்பார். அந்தக் கடையின் உரிமையாளர் ஒரு கொரியக்காரர். நேட்டிவ் அமெரிக்கரான டக்ளஸைப் பார்த்து ‘சில்லறை இல்லை; வேண்டுமானால் ஏதாவது வாங்கு, சில்லறை தருகிறேன்’ என்று மரியாதை இல்லாமல் சொல்ல, டக்ளஸின் கோபம் தூண்டப்படும்.