

அவல நகைச்சுவை (Black Humor) வகைப் படங்கள் உலக அளவில் மிகவும் பிரபலம். அபத்தமான சில தருணங்களைத் திரையில் வரும் கதாபாத்திரங்கள் எதிர்கொண்டு பெரும் ஆபத்துக்கு உள்ளாகும்போது படம் பார்க்கும் நமக்குச் சிரிப்பு வரும். அப்படி ஒரு கொரியன் திரைப்படம் வெளியாகி, அதைப் பார்த்து அப்படியே தமிழில் எடுத்துப் பெரிதும் பேசப்பட்ட படம் குறித்தே இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
‘அட்டாக் த கேஸ் ஸ்டேஷன்’ (Attack the Gas Station) என்கிற கொரியப் படம் 1999இல் வெளி யானது. இது பிரபல திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் பார்க் ஜங் வூ எழுதி, இயக்கப்பட்டது. இதில், வாழ்க்கையில் தோல்வியடைந்த நான்கு இளைஞர்கள் வருவார்கள். சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பால் ஒரு பெட்ரோல் பங்க்கைக் கொள்ளையடிக்க முடிவு செய்வார்கள்.
கொள்ளையும் அடித்துவிடுவார்கள். ஆனால் கொள்ளையடித்த பணம் மிகக்குறைவாக இருக்க, கடுப்பாகும் அவர்கள் அதே பெட்ரோல் பங்க்கை மறுபடியும் கொள்ளை அடிக்க முடிவு செய்வார்கள். ஏன் அதே பங்க்? காரணம் அவர்கள் தொழில்முறைக் கொள்ளையர்கள் அல்ல. எனவே முன்யோசனையில்லாமல் இந்த முடிவுக்கு வருவார்கள்.
ஆனால், ஏற்கெனவே ஒரு கொள்ளை நடந்திருந்ததால் அந்த பங்க்கின் மேனேஜர் உஷாராகி, பணத்தைப் பத்திரப்படுத்தி விடுவார். இது தெரியாமல், மறுபடியும் அதே பங்கைக் கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள்.
ஆனால், அங்கே போதுமான பணம்தான் இல்லையே? எனவே, அவர்களுக்குள் ஒரு திட்டம் இடுவார்கள். அங்கே வேலை செய்யும் அத்தனை பேரையும் மிரட்டி, பணயக் கைதிகள் போல உள்ளேயே சிறைவைத்துவிட்டு, இவர்களே அந்த பங்க்கின் பணியாள்கள் போல நடிப்பார்கள்.
இதனால் அங்கே பெட்ரோல் போட வரும் மக்களிடம் இருந்து பணம் வரும்தானே? பணம் நிறையச் சேர்ந்ததும் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டு ஓடலாம் என்பதே அவர்களின் திட்டம் (அவல நகைச்சுவை என்பதால் இதைப் படித்தால் சிரிப்பு வராது. பார்த்தால் மட்டுமே சிரிப்பு வரும்).