நிருபர் டைரி: மயக்கம் போட்ட சூர்யா

நிருபர் டைரி: மயக்கம் போட்ட சூர்யா
Updated on
1 min read

நீ

ங்கள் இயக்கிய கதாநாயகர்களில், கதாபாத்திரத்துக்காகத் தன்னை அதிகம் வருத்திக்கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று ஒருமுறை கௌதம் மேனனிடம் கேட்டபோது சட்டென்று ‘சூர்யா’ என்றார்.

கௌதம் மேனன் - சூர்யா கூட்டணியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற முதல் படம் ‘காக்க காக்க’. இந்தப் படத்தின் தொடக்கம் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை படமாக்கியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவும் வில்லனாக நடித்த ஜீவனும் பழைய கடல் பாலத்தின் மேல் சண்டைபோடும் காட்சி அது. ஜீவனை அடித்துக் கொன்றுவிட்டு, சூர்யா கோபத்துடன் கேமராவை நோக்கி நடந்து வரவேண்டும். பாலத்தின் மேலேயே கேமராவை வைத்து இதைப் படமாக்க முடியவில்லை. காரணம் கடல் அலைகளின் சீற்றத்தால் தண்ணீர் மேலேவரை மூர்க்கத்தனமாக மோதித் தெறித்தபடி இருந்திருக்கிறது. இதனால் கேமராவைச் சற்றுப் பின்னால் தள்ளிவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்’ என்றவுடன் பாலத்தில் கோபமாக நடந்து வந்த சூர்யாவைத் திடீரென்று காணவில்லை. பதறிய படக்குழு அவருக்கு என்னவானது என்று வேகமாக ஓடிச்சென்று பார்த்தபோது, சூர்யா மயக்கமடைந்து பாலத்தின் மேலே விழுந்து கிடந்திருக்கிறார். அவர் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால்கூட சூர்யாவுக்கு என்னவாகியிருக்கும்? அங்கே கத்திபோல் நீட்டிக்கொண்டிருந்த கம்பிகளைப் பார்த்து படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறது. சூர்யாவை மீட்டு, மருத்துவரை வரவழைத்து ஏன் இந்தத் திடீர் மயக்கம் என்று கேட்டிருக்கிறார்கள். காட்சி சரியாக வர வேண்டுமே என்று எதிரியைக் கொன்றொழித்த கோபத்தைக் கொண்டுவருவதற்காக மிகவும் டென்ஷனாகி இருக்கிறார் சூர்யா. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து மயக்கமாகி கீழே விழுந்திருக்கிறார். காட்சிக்காக ஏன் இவ்வளவு வருத்திக்கொள்கிறீர்கள் என்று இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் சூர்யாவை உரிமையுடன் கடிந்துகொண்டிருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கக் காட்சியில் நடித்தபோது இன்னொரு சம்பவம். ஏரியில் கட்டப்பட்ட கெஸ்ட் அவுஸின் ஜன்னலை உடைத்துக்கொண்டு சூர்யா தண்ணீரில் விழும் காட்சி. வில்லன் துப்பாக்கியால் சுட்டதும் சூர்யா இப்படித் தண்ணீரில் விழவேண்டும். இதை இலங்கையில் ஒரு ஏரி செட் போட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சியில் தனக்கு டூப் எல்லாம் வேண்டாம் என்று மறுத்து எட்டு முறை ஜன்னலை உடைத்துக்கொண்டு தண்ணீரில் விழுந்து நடித்திருக்கிறார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in