

மேயாத மான் என்ற பெயரில் மெல்லிசைக் குழு நடத்தும் வைபவ், தனது கல்லூரித் தோழியான பிரியா பவானிசங்கரை ஒருதலையாகக் காதலிக்கிறார். கடைசிவரை காதலைச் சொல்லாமல், போதையில் புலம்புகிறார். காதலிக்குத் திருமணம் நிச்சயமானதை அறிந்து, தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அதிர்ச்சியடையும் நண்பர்கள், காதலி மூலமாகவே அவரைக் காப்பாற்றுகின்றனர். இதற்கிடையே, வைபவ் தங்கை இந்துஜாவுக்கு தனது அண்ணனின் நண்பன் விவேக் பிரசன்னா மீது ஒருதலைக் காதல் மலர்கிறது. தங்கையின் காதலுக்காக நண்பனிடம் தூது செல்கிறார் வைபவ். இந்தக் காதல்கள் என்ன ஆனது என்பது மீதி கதை.
வழக்கமான ஒருதலைக் காதல் கதையை நட்பு, பாசம் கலந்து வித்தியாசமான திரைக்கதையுடன் நகைச்சுவைப் படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார். வடசென்னை மக்களின் நேசம் கலந்த வாழ்வை, எதார்த்தத்தை மீறாத அழகியலோடு, திரையில் படரவிட்டிருப்பதன் மூலம் முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார்.
தொடக்கக் காட்சியில் வைபவ், வணிகவியல் ஆசிரியரை சிக்க வைப்பதற்காக, அவரது வீட்டுக் கட்டிடத்தையே தற்கொலைக்குத் தேர்ந்தெடுப்பது, போதையில் ஷேக்ஸ்பியர் கவிதைகளை உளறுவது, திருமண மேடையில் ‘கோலங்கள்’ சீரியல் பாடலைப் பாடுவது என படம் நெடுக சிரிப்பு பட்டாசு வெடிக்கிறது. நிதானித்து சிரிப்பதற்குள், அடுத்த நகைச்சுவை வந்துவிடுகிறது.
சோகம் தோய்ந்த முகம், அரை போதை உளறல், காதலின் தவிப்பு என ‘இதயம் முரளி’யாகவே மாறி இருக்கிறார் வைபவ். காதலில் உருகும்போதும், தங்கையின் காதலுக்காக இறங்கிப் பேசும்போதும், நண்பர்களிடம் சண்டை போடும்போதும் நேர்த்தி. அதிலும் தனது நண்பன் - தனது தங்கை இடையிலான காதலை அவர் உணரும் தருணமும், அதை வெளிப்படுத்தும் விதமும் அருமை. நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்வதுபோல, உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ள பிரியா பவானிசங்கர் கண்ணியமான அழகோடு, அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
வழக்கமாக, ஒரே பாணியில் நடிப்பை வழங்கிவரும் விவேக் பிரசன்னாவுக்கு இது மாறுபட்ட, பெயர் சொல்லும் படம். கிரிக்கெட் விளையாடும்போது, ஒரு இடத்தில் அடிபட, காலில் கட்டு போடுவது தொடங்கி, கிளைமாக்ஸ் காட்சி வரை நகைச்சுவையிலும், குணச்சித்திரத்திலும் தூக்கி சுமக்கிறார். அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, இயல்பான நடிப்பு, உணர்வுகளை உள்வாங்கி வசனம் பேசுவது என ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். நண்பனின் தங்கை என்பதால் அவரது காதலை நிராகரிக்கும்போதும், நண்பனின் அறிவுரைக்குப் பிறகு காதலை ஏற்கும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வைபவ் தங்கையாக வரும் இந்துஜா, ‘ஏரியா கெத்து’ காட்டுவதும், அண்ணனின் காதலியைப் பார்க்க ஏங்குவதும், அண்ணனின் நண்பனைக் காதலித்து மருகுவதுமாக ஆச்சர்யமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும், ‘‘தங்கச்சி, தங்கச்சின்னு சொல்லிகிட்டு என்னை தொடாத’’ என சீறுவதிலும், ‘‘அவன் தங்கச்சின்னு சொல்றதுதான் பிரச்சினையே’’ என அண்ணனிடம் வெறுப்பில் சொல்வதும்.. பக்கா பக்கத்துவீட்டுப் பெண்!
சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமாரின் இசை, விது அயன்னாவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பாடல்கள் பரவாயில்லை ரகம்.
நீளும் காட்சிகளை வெட்டி, திரைக்கதையின் லேசான தொய்வுகளை சரிசெய்திருந்தால், ‘மேயாத மான்’ இன்னும் வேகமாக துள்ளி ஓடியிருக்கும்!