Last Updated : 20 Oct, 2017 11:02 AM

 

Published : 20 Oct 2017 11:02 AM
Last Updated : 20 Oct 2017 11:02 AM

தரணி ஆளும் கணிணி இசை 05: சேம்பிள் இசையில் ஜீவன் உண்டா?

 

ல பாடல்களின் இசையும் வரிகளும் கிளறிவிடும் நினைவுகள் இனிமையானவையாக இருக்கலாம். வேறு சில, நாம் மறக்க நினைக்கும் கசப்பான நினைவுகளை நம் கண்ணீர் திரையில் ஓடவிட்டு வலியைக் கூட்டலாம். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு ‘விடை கொடு எங்கள் நாடே’ பாடலைக் கேட்கவோ பார்க்கவோ நேரும்போது, நம்மில் பலருக்கு இதுதான் உணர்ச்சி நிலை. அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எஞ்சியிருக்கும் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் தோளிலும் சுமந்துகொண்டு, அதைவிடவும் அதிகமான சுமையை மனதில் சுமந்தபடி, சாரி சாரியாகச் சொந்த மண்ணிலேயே இடம்பெயரும் காட்சியைக் கண்முன் நிறுத்திய அந்தப் பாடல் இடம்பெற்ற படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.

‘விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மரக் காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்…’

என்று அன்றைய ஈழத்தின் அவலச் சித்திரத்தைத் தன் வரிகளில் அழுத்தி எழுதிவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து. கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் மெட்டின் மூலமே உயிரின் வலியை இதில் ஒலிக்கவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். கடின மனம் கொண்டவர்கள் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தால்கூட, உள்ளத்துள் ஒரு துளி ஈரத்தையாவது கசியவிடாமல் இந்தப் பாடல் கடந்து போகாது. வாழ்க்கை முழுவதுமே போர் என்னும் புயல் வீசிக்கொண்டிருப்பதை அழுத்தமாக உணர்த்த, இந்தப் பாடலின் பின்னணியில் துதுக்(duduk) என்ற காற்றிசைக் கருவியைப் பயன்படுத்தினார் ரஹ்மான்.

karuvijpg

அந்தப் பாடல் வெளிவந்தபோது, ‘இது என்ன இசைக்கருவி?’ என்று இசைக் கலைஞர்களையும் ரசிகர்களையும் கேட்க வைத்தது. ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த ஆதி இசைக் கருவியான துதுக் ஒரு பெரிய குழல் போன்றது. இதன் ஒலியை சேம்ப்ளர் மூலம்தான் இங்கே அறிமுகமானது. ஆனால், சேம்ப்ளரில் இருந்த துதுக் இசை ஒலிகளைப் பாடலுக்குப் பயன்படுத்த ரஹ்மான் விரும்பவில்லை.

துதுக் உருவாக்கும் வலிமிகுந்த இசையை ‘லைவ்’ சவுண்டாக எடுக்க விரும்பி, அந்தக் கருவியையே இறக்குமதி செய்தார். நவீன் என்ற புல்லாங்குழல் கலைஞரை அதில் பயிற்சி எடுக்கச் செய்து, பின் வாசிக்கச் செய்து அதையே ‘விடைகொடு’ எங்கள் நாடே பாடலின் பின்னணியில் பயன்படுத்தினார். இதுபோல் சேம்ப்ளர் இசை வழியே அறியவந்த எத்தனையோ புதிய கருவிகளைத் தருவித்து ரஹ்மான் லைவ்-ஆகப் பயன்படுத்தினார்.

வந்துசேரும் புதிய இசை

‘சேம்பிள் ஒலிகளில் ஜீவன் இருக்காது’ என்ற கருத்து இசை விமர்சகர்கள் உட்பட இன்று பலரிடமும் பரவி இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. சேம்ப்ளர்களில் பதியப்பட்டிருக்கும் இசை நோட்டுக்கள் அனைத்தும் ‘லைவ்’ முறையில் கலைஞர்களை வாசிக்க வைத்து, உயர்தரமான ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டே பின்னரே சேம்ப்ளர் மென்பொருட்களில் உள்ளீடு செய்யப்படுகின்றன.

சேம்ப்ளர்கள் மூலம் நமது இந்திய பாரம்பரியக் கருவிகளின் இசை ஒலிகள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருக்கும் இசைக் கருவிகளின் ஒலிகளும் ‘லைவ்’வாக இசைக்கப்பட்டு, பின் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் இன்று சேம்ப்ளர்களாகப் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கையாளும் இசைக் கலைஞர்கள், தமது ரசிகர்களுக்கு அவர்கள் அறியாத தேசங்களின் இசையைக் கேட்கும் அனுபவத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

உண்மை நிலை

இப்படிப்பட்ட திரையிசைப் பின்னணியில்தான் கணினி ஆதிக்கத்தின் அதிகரிப்பால் லைவ் வாத்தியக் கலைஞர்கள் வேலையிழந்திருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இசைக் கலைஞர்களின் உதவியில்லாமல் கணினி தானாக ஒன்றைச் செய்துவிடுவதில்லை.

இன்று எல்லா இசையமைப்பாளர்களும் லைவ் ஆர்கெஸ்ட்ரா பயன்படுத்தவே ஆசைப்படுவார்கள். அப்படி இசையமைக்கும்போதுதான் அந்தப் பாடலின் தரம் உயர்ந்து, அவரும் பெரிதாகப் பேசப்படுவார். ஆனால், இன்று பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே லைவ் ஆர்கெஸ்ட்ரா ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு லைவ் ஆர்கெஸ்ட்ரா முறை ஒத்து வருவதில்லை. காரணம் பட்ஜெட். உண்மையில் பெரிய இசையமைப்பாளர்களிடம் பணியாற்றும் இசைக் கலைஞர்கள், அங்கு வாங்குகிற சம்பளத்தையே சிறிய பட்ஜெட் படங்களுக்கும் நிர்ணயம் செய்துவிடுவதால், இவர்களைப் பயன்படுத்துவதைவிட, கணினியை நாடி விடலாம் என்ற எண்ணம் வருவதும் இயற்கைதானே? அந்த இடத்தில்தான் சேம்ப்ளர்கள் பலருக்குக் கைகொடுக்கின்றன.

ஈஸ்ட் வெஸ்ட் இசை மென்பொருள் தொகுப்புகள்தாம் இப்போது சேம்ப்ளர் சந்தையில் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. வி.எஸ்.டி. ப்ளகின்ஸ் (VST plugins) என அழைக்கப்படும் சேம்ப்ளரை இன்று பயன்படுத்தாத இசையமைப்பாளர்களே இருக்க முடியாது எனலாம். கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய இசையைத் தொகுத்திருக்கிறது இந்த வி.எஸ்.டி. நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது இந்தியப் பாரம்பரிய இசைக் கருவிகளின் ஒலிகளையும் இசை மென்பொருள் தொகுப்புகளாக உருவாக்கியிருக்கிறது. இதற்காக இந்தியாவின் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த வி.எஸ்.டி பிளக் –இன் மென்பொருளை நமது தமிழ் சினிமா உட்பட உலகமே தற்போது பயன்படுத்துகிறது.

midijpgrightதரம் குறையாத லைவ் இசை

லைவ் ஆர்க்கெஸ்ட்ரா என்று குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தரத்துக்குச் சற்றும் குறையாமல் இருக்கும் இந்த மென்பொருளில் உள்ளிடப்பட்டிருக்கும் வாத்திய ஒலிகள். இந்தத் தரமும் நேர்த்தியும் இந்த மென்பொருளுக்குள் எப்படி வந்தது தெரியுமா?

நாம் பொதுவாக ஐம்பது இசைக் கலைஞர்களை வைத்துக்கொண்டு ஒரு லைவ் ஆர்க்கெஸ்ட்ரா செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மென்பொருளுக்காக நூறு கலைஞர்கள் வாசித்திருப்பார்கள். அதைக் கேட்கிறபோது ஒலி அப்படியே காதுக்குள் இறங்கி, மனசுக்குள் பிரம்மாண்டமாய் நிறைவதை உணர முடியும். ஆனால், இங்கும் ஒரு வித்தை இருக்கிறது. எல்லா இசையமைப்பாளர்களாலும் இந்த மென்பொருளை முழுமையாகக் கையாண்டுவிட முடியாது. உதாரணமாகக் கடையில் விற்கிற ஒரே மாதிரியான மசாலா பொடிதான். ஆனால், வீட்டுக்கு வீடு சுவை மாறுகிறது அல்லவா?

அப்படித்தான் இதைக் கையாள்கிற இசையமைப்பாளருக்கு திறமையும் தேவைப்படுகிறது. ஒரு புல்லாங்குழலோ வயலினோ கீபோர்டில் இசைக்கப்படுகிறது என்றாலும் கூட, நடுவில் ஃபெர்பாமென்ஸ் டூல்(performance tools) என்றொரு சாஃப்ட்வேரும் தேவைப்படுகிறது. இதைப் பயன்படுத்தும்போதுதான், இந்த இசை அப்படியே லைவ் ஆர்கெஸ்ட்ரா போல முழுமை அடைகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சில இசையமைப்பாளர்கள் இந்த மென்பொருளை மிக நேர்த்தியாகக் கையாள்கிறார்கள். அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் அலசுவோம்.

(ரகசியம் தொடர்ந்து உடையும்)
தொடர்புக்கு: tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x