

சரத்பாபுவை இறுதியாக 2019, ஏப்ரல் 2ஆம் தேதி அன்று சென்னை மந்தைவெளியில் உள்ள தூய மரியன்னைக் கல்லறைத் தோட்டத்தில் இயக்குநர் மகேந்திரனின் உடல் அடக்கத்தின்போது கண்டேன். கப்பலில் பணி நேரம் முடிந்த பிறகு மாலையுடன் கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்தேன். அப்போது வாசலில் நின்றிருந்த நண்பர்கள் இயக்குநர் அமீரும் நக்கீரன் கோபாலும் அடக்கம் நடைபெறுவதாகக் கூறி என்னை விரைந்து செல்லும்படித் துரிதப்படுத்தினர்.
நான் அடக்க ஸ்தலத்தை அடைவதற்குள் மகேந்திரன் மண்மூடிப் போயிருந்தார். அவரது மண்மேட்டில் உதிரிப்பூக்களாகக் குவிந்திருந்த மாலைகளில் ஒன்றாக எனது மாலையையும் வைத்துவிட்டு மெளனமாகச் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அதுவரைத் திரையில் மட்டுமே நான் கண்டிருந்த சரத்பாபு தலைகுனிந்து மெளனமாக ஆழ்ந்த சிந்தனையில் அங்கே நின்றுகொண்டிருந்தார். குடும்பத்தினரும் மகேந்திரனுக்காகக் கூடிய கூட்டமும் கலைந்து சென்ற பிறகும் அவர் மண்மேட்டைப் பார்த்தபடியே ஆழ்ந்திருந்தார்.
இயக்குநர் மகேந்திரன் ஒரு முறை நான் மாலுமியாக இருந்த ‘பிரியதர்ஷினி’ கப்பலுக்கு என் அழைப்பை ஏற்று வந்திருந்தார். இரவு முழுவதும் உரையாடிக்கொண்டிருந்தபோது அவரிடம் கேட்டேன், “உச்ச நடிகர்கள் பலரும் உங்கள் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கையில், தொடர்ந்து சரத்பாபுவை மட்டுமே வைத்துப் படமெடுத்த காரணம் என்ன?”.
அவர் சொன்னார், “சரத்பாபுவை யாருக்குத்தான் பிடிக்காது சோமு! நமது உற்ற நண்பரைப் போன்ற தோற்றமும், அடுத்த வீட்டுக்காரர் போன்ற இணக்கமும் கொண்ட மனிதர் அவர். அவரது உயரமும் நிறமும் நம்மிடமிருந்து அவரை அந்நியப்படுத்தினாலும் ஒரு இனம்புரியாத அணுக்கத்தை அவையே ஏற்படுத்தும் அதிசயம் அவரிடம் இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து என் படங்களில் பயன்படுத்தினேன்" என்றார்.
பாலசந்தரின் ‘பட்டினப்பிரவேச’த்தில் அறிமுகமாகியிருந்த போதிலும் அவருக்குத் தமிழகத்தில் முகவரி அளித்தவை மகேந்திரனின் திரைப்படங்கள்தான். அவரது ‘முள்ளும் மலரும்’ படத்தில் தொடங்கி, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘அழகிய கண்ணே’, ‘மெட்டி’ என மகேந்திரனின் மன்றத்தில் சரத்பாபுவின் ராஜபாட்டை தொடர்ந்தது. இன்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் வியப்பும் பொறாமையுமாக அண்ணாந்து பார்க்கும் சரத்பாபுவின் உயரம் அது!
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் தனது மனைவியின் துன்புறுத்தல் தாளாமல் தனது தோழியின் வீட்டில் புகலிடம் தேடும் சரத்பாபுவின் கதாபாத்திரம். அவரது இளைப்பாறல் குறித்து தனது தங்கையான சுஹாசினியுடன் உணவு மேசையில் அவர் பேசும் வசனம், “Women are the stronger sex in a household. ஆனா, அது அவங்களுக்குத் தெரியறதில்ல”. தனது இளைப்பாறலை நியாயப்படுத்தாமல், அதேவேளையில் தனது வழிப் பிறழ்வு தவிர்த்திருக்கப்பட வேண்டியது என்று தனது மனைவியைக் குறித்து நாசூக்காகக் குறிப்பிடும் காட்சியில், அலட்டலோ மிகையோ இல்லாத ஆழமான நடிப்பு நினைவில் நிற்கிறது!
‘மெட்டி’யில் பொறுப்பான அண்ணனாகட்டும் ‘உதிரிப்பூக்களில்’ தனது முன்னாள் காதலிக்காக விஜயனிடம் அடி வாங்கும் காதலனாகட்டும் சரத்பாபுவைத் தவிர வேறு யார்தான் இப்படிப் பொருந்திப்போயிருக்க முடியும்! ‘முள்ளும் மலரும்’ படத்தில் முள்ளாக ரஜினியையும் மலராக சரத்பாபுவையும் படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை மகேந்திரன் சித்தரித்திருப்பார்.
அந்தத் திரைப்படம், இரு முதன்மைக் கதாபாத்திரங்களின் ‘உள், வெளி, மோதல் - முரண்களை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சித்தரித்த (Compare and contrast of character study) திரை எழுத்துக்கு ஒரு செவ்வியல் இலக்கணம்! அவர்களுக்கு இடையேயான பனிப்போரில் சிக்கிய பெண்ணாக ஷோபா அனைத்துக் குடும்பப் பெண்களையும் தனது நடிப்பில் வார்த்திருப்பார்.
அந்தப் பனிப்போரைத் தனக்குச் சாதகமாக்க முனையும் ஒரு ஊழியர், காளியைப் பற்றிய தவறான சித்தரிப்பை சரத்பாபுவிடம் விவரித்து, காளியின் இடத்தில் தனது தம்பியை நுழைத்துவிட முயல்வார். அப்போது மென்மையாகவும் உறுதியாகவும், “நமது ஆபீஸ்ல தம்பியே இல்லாதவங்க யாராவது இருக்காங்களா? இல்ல.. நான் காளியப் பத்தின உண்மையான விவரங்கள தெரிஞ்சுக்க விரும்புறேன்!” என்று சொல்வார். அந்தப் பதிலில் பாலுமகேந்திராவின் கேமரா அந்த ஊழியரின் வெளிறிய முகத்தை அண்மையில் காட்டியிருக்கும்.
சொற்சிக்கனமும் காட்சி நேர்த்தியும் கலந்த கண்கொள்ளாக் காட்சி அது! திருக்குறள் ‘அரசியல்’ இயலில், ‘வெருவந்த செய்யாமை’ அதிகாரத்தில், ‘கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்/ நீங்காமை வேண்டுபவர்’ திருக்குறளை வாசிக்கும்போதெல்லாம் இந்தக் காட்சி எனது மனதில் வந்து போகும்! கடற்படை அதிகாரிகள் பயிற்சியின்போது எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ‘Be firm, yet polite’ என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்தக் காட்சியைக் கருதிக் கொள்வேன்.
அதே போன்று காளியின் பணியிடை நீக்கத்தின்போது, அவர் கையிழந்த காரணத்தால் பணிநீக்க ஆணையை சரத்பாபு வழங்குவார். அப்போது எரிமலையாக, உணர்ச்சிப் பிழம்பாகக் காளி தனது ஆற்றாமையும் இயலாமையும் கண்ணீராக வெளிப்பட, தன்மான உணர்வு மேலோங்கிய நிலையில் “ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாக்கூட இந்தக் காளிங்கிறவன் பொழச்சிக்கிருவான் சார்... கெட்ட பய சார் இந்தக் காளி” என்று வெடித்துச் சீறுவார்.
பொறுமையும் நிதானமுமாகத் தான் காளியை வேலையில் நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சிகளைக் காளியிடம் எடுத்துரைக்கும்போது பார்வையாளனின் அனுதாபம் காளியின் மீது குவிந்திருக்கும் வேளையிலும் அவரது தரப்பு நியாயத்தைப் பார்வையாளனுக்கு உணர்த்திவிடுவார். கொஞ்சம் பிசகினாலும் எதிர்மறைக் கதாபாத்திர உணர்வைக் கொடுத்துவிடும் இக்காட்சியில் சரத்பாபுவைத் தவிர வேறு யாரேனும் நடிப்பால் அவரது குணச்சித்திரத்துக்குச் சிறப்பு சேர்த்திருப்பார்களா? எனக்குத் தோன்றவில்லை.
‘முள்ளும் மலரும்’ படத்தின் இறுதிக் காட்சியில், உற்றாரும் ஊராரும் கொடுத்த துணிவால் உந்தப்பட்டு, அண்ணனை ஒரு கணம் மறந்து, தன் கரம் பற்றிய சரத்பாபுவை மணமுடித்து, அவரது கையைப் பற்றிக் கொண்டு மலையேறிக் கொண்டிருப்பார் ஷோபா. அப்போது, சிறு வயது முதல், தன்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் அண்ணனின் நினைவுகள் மனதில் நிழலாட, ஒரு கணத்தில் சரத்பாபுவின் கையை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது அண்ணனின் தோள் சேர்ந்து தேம்பித் தேம்பி அழுவார்.
அண்ணன் - தங்கை பாசப் போராட்டத்தின் நடுவே அமைதியாகவும் நிதானமாகவும் அப்போராட்டத்தின் ஊற்றுக்கண் நாம்தானே என்கிற குற்றவுணர்வில் தலை கவிழ்ந்து அத்தருணத்தில் மெளன சாட்சியாக, ஒரு ‘perfect foil’ ஆக நிற்பார். அந்தத் தருணத்தில் தமிழ் நிலத்தின் அண்ணன் - தங்கையாக ரஜினியும் ஷோபாவும் ஜொலிப்பார்கள். அதற்கு சரத்பாபுவின் ஆழ்ந்த அமைதியே சாளரமானது.
மகேந்திரன் அடக்கம் செய்யப்பட்டு மண் காயாத அன்றும் அவர் அப்படித்தான் என்னருகில் ஆழ்ந்த அமைதியுடன் நின்றிருந்தார். போய் வாருங்கள் சரத்பாபு! வானுலக வீட்டில் உங்கள் இயக்குநர் நண்பர் உங்களை எதிர்கொண்டு வரவேற்பார்.
படங்கள் உதவி: ஞானம்