

திண்டுக்கல் திமுக பிரமுகரான விஜயனின் மகள்தான் ‘சார்பட்டா பரம்பரை’யில் மாரியம்மாளாக நடித்துப் புகழ்பெற்ற துஷாரா விஜயன். இன்று வெளியாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னர், பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் அம்பேத்கரியம் அறிந்த, சுயசார்பு மிக்க பெண்ணாக, தன்னை உதறும் காதலனைச் சட்டை செய்யாமல் கடந்து செல்லும் தன்னம்பிக்கை மிக்கப் பெண்ணாக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.
அவரிடம், ’நிஜ வாழ்க்கையில் காதலின் பிரிவு’ இருந்ததா என்று கேட்டதும் குமுறித் தள்ளிவிட்டார். “பள்ளிக் காலத்தில் என்னைக் காதலித்து உதறிச் சென்றார் ஒருவர். அதிலிருந்து கடந்து வர மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது அவர். இவளைப் போய் உதறிவிட்டோமே என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார். எனக்கு காதலின் அரசியல் புரியும்” என்றார்.
எழுத்தாளரின் மகிழ்ச்சி! - திரைப்பட அறிமுக நிகழ்ச்சிகளில் படத்தின் எழுத்தாளர் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு பேசுவதற்குக் கூட வாய்ப்பு வழங்க மாட்டார்கள். அதற்கு நேர் மாறாக ‘தீராக் காதல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசும்போது: “இந்தப் படத்துக்கான கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், இப்படத்தின் இயக்குநர் ரோகின் வெங்கடேசனும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படம் பார்க்கப் போனோம்.
அப்போது இயக்குநர் ‘இந்த மாதிரி தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும்’ என்றார். எழுத்தாளருக்குக் கிரெடிட் தந்தால் அது நடக்கும் என்றேன். ‘நான் தருகிறேன், எழுதுங்கள்’ என்றவர், ‘திரைக்கதை - வசனம்’ என்று தனியாக கிரெடிட் தந்துள்ளார்” என்றார். ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்தான் ரோகின் வெங்கடேசன். லைகா புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகிய மூவரும் நடித்துள்ளனர் முக்கோணக் காதல் கதை இது.
தெறிக்கவிட்ட 4 வரிகள்! - சமூக வலைத் தளங்களில் இப்போது ‘ரீல்ஸ்’, ‘ஷார்ட்ஸ்’ காணொளிகள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் திரைப் பாடல்களை வைத்து செய்யப்படும் ‘ரீல்’கள் காலவோட்டத்தில் சட்டென்று முன்னோக்கி வந்து ‘ட்ரெண்ட்’ ஆகிவிடும். சமீபத்தில் உலகம் எங்கும் ஏழு லட்சம் பேருக்கும் மேல் ரீல்ஸ் உருவாக்கி 2018இல் வெளியான ஒரு படப் பாடலின் 4 வரிகளை ‘ட்ரெண்ட்’ ஆக்கி இருக்கிறார்கள். அந்தப் படம் ’இமைக்கா நொடிகள்’.
நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்து வெற்றிபெற்ற படம். அதற்கு இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். அதில் கபிலன் வைரமுத்து எழுதிய ‘விளம்பர இடைவெளி’ எனத் தொடங்கும் பாடலின் இறுதி வரிகளான ‘நான் உனதே நீ எனதா? தெரியாமலே நான் தேய்கிறேன் - இல்லை என்றே சொன்னால்..
இன்றே என் மோகப் பார்வை மூடுவேன்’ என்கிற வரிகளில் என்ன மயக்கமோ! இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா என்று தமிழர் வாழும் பல நாடுகளில் ‘ட்ரெண்ட்’ ஆகியிருக்கிறது. இது பற்றிக் கபிலன் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.