

1. காதலை உதறிய ‘தேவதாஸி’
1948-ல் ஒரு தேவதாசியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்றுப் படம் ‘தேவதாஸி’. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்த மாணிக் லால் டாண்டன் தான் இத்திரைப்படத்தின் இயக்குநர். உடன் படித்த எல்லிஸ் ஆர். டங்கனை சினிமா எடுப்பதற்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தவர் இவர்தான். வங்க எழுத்தாளர் கிடார் சர்மா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு 1941-ல் வெளியாகிய ‘சித்ரலேகா’ படத்தின் திரைக்கதை தான் ‘தேவதாஸி’க்கு உந்துதல்.
கண்ணனும், லீலாவும் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்த இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரத்தின் தனி நகைச்சுவை டிராக் பெரிதாகப் பேசப்பட்டது. ஏழைப் பெண்ணாக இருந்து புகழ்பெற்ற தேவதாசியாக ஆகும் நாயகி, இரண்டு ஆண்களின் காதலுக்கு நடுவே தெய்வத்திடம் சரணடையும் கதை இது. இப்படத்துக்கு வசனம் எழுதிய புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?
2. இது ஒரு தோல்விக் கதை
ஹாலிவுட்டிலும் உலக அளவிலும் 75 ஆண்டுகள் ஆன பின்னரும் ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் தலைசிறந்த சினிமாக்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் வெற்றி, தோல்வி, வீழ்ச்சியை அவரது மரணத்தின் பின்னணியில் துலக்கிய படம் இது. மனிதர்கள் வெற்றியடைவதையே பேசிக்கொண்டிருந்த திரைப்படங்களின் மத்தியில் தோல்விக்கதை என்று சொல்லக்கூடிய ஒன்றை எடுக்க நினைத்ததாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸ் கூறியிருக்கிறார். நாடக இயக்குநராகப் புகழ்பெற்றிருந்த ஆர்சன் வெல்ஸ், ‘சிட்டிசன் கேன்’ மூலமாகத் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கியபோது அவருக்கு வயது 25.
அனுபவம் பெற்ற இயக்குநர்களுக்கே தரத் தயங்கும் பைனல் கட்(இறுதி வடிவத்தை எடிட் செய்யும் உரிமை) உரிமையை, ஆர்கேஓ ஸ்டுடியோஸ் நிறுவனம் இவருக்கு அளித்தது. படத்தின் நாயகனாகவும் ஆர்சன் வெல்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒளிப்பதிவில் பல புதிய உத்திகள் கையாளப்பட்ட இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் க்ரெக் டோலண்ட். திரைப்பட உருவாக்கம் குறித்து எதுவுமே தெரியாத ஆர்ஸன் வெல்ஸ் கொடுத்த சுதந்திரத்தில் க்ரெக் டோலண்ட் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக காமிராக்களையும் லென்ஸுகளையும் பிரத்யேகமாக வடிவமைத்துப் பயன்படுத்தினார். டீப் போகஸ் ஷாட்டுகளுக்காக இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம் இது. சிட்டிசன் கேன் படத்தை எடுப்பதற்கு முன்பு திரைப்பயிற்சிக்காக ஆர்சன் வெல்ஸ் 40 முறை பார்த்த திரைப்படம் எது?
3. வாழ்க்கையை மாற்றும் விபத்து
லத்தீன் அமெரிக்க சினிமா, ஹாலிவுட்டுக்குத் தந்த கொடையான இயக்குநர் அலெஜேன்ட்ரோ கொன்சாலஸ் இனாரிட்டு எடுத்த முதல் திரைப்படமான ‘அம்ரோஸ் பெரோஸ்’ உலக அளவில் இவருக்குப் புகழைத் தந்த படைப்பாகும். கான் உலகத் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் விருதைப் பெற்ற இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. மூன்று விதமான சமூகப் பின்னணியில் உள்ள தனித்தனி நபர்களின் வாழ்க்கையை ஒரு விபத்து பிணைத்து அடியோடு மாற்றவும் செய்துவிடுகிறது.
‘அம்ரோஸ் பெரோஸ்’சின் அர்த்தம் ‘மோசமான காதல்கள்’. மெக்சிகோவின் சமூக, அரசியல் சூழலை ஆழமாகப் பிரதிபலித்த இத்திரைப்படத்தைத் தொடர்ந்து டிரையாலஜியாக ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’ ஆகிய திரைப்படங்களை எடுத்தார் இனாரிட்டு. 2014-ல் இனாரிட்டு இயக்கிய பேட்மேன் ஆர் தி அன்எக்ஸ்பெக்டட் விர்ச்சு ஆப் இக்னொரன்ஸ் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். இவர் இயக்கத்தில் லியானார்டோ டி காப்ரியோ நடித்துச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம் எது?
4. கமல் ஹாசனை கவர்ந்த படம்
இந்திய மாற்று சினிமா இயக்கத்தில் எளிய சினிமா பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அர்த்தமுள்ள திரைப்படங்களை எடுத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி. நீதித் துறையில் உள்ள ஊழலைச் சித்தரிக்கும் ‘ஆக்ரோஷ்’, இரண்டு முரண்பாடான கொள்கைகள் கொண்டவர்களின் காதலுக்குள் வரும் பூசலைச் சொல்லும் ‘அர்த் சத்யா’ உள்ளிட்ட திரைப்படங்கள் முக்கியமானவை. ‘அர்த் சத்யா’ படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் பின்னர் அமரர் ஓம்பூரி நடித்தார். அதுவே அவரது பிற்கால நடிப்பு வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்தது.
நிஹ்லானி 1994-ல் இயக்கிய திரைப்படம் ‘த்ரோகால்’. ஒரு தேசத்தையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கும் உளவியல் யுத்தம்தான் இப்படம். பின்னர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து தமிழில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ இப்படத்தைத் தழுவித்தான் எடுக்கப்பட்டது. ‘த்ரோகால்’ வழியாக பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளரின் கணிப்பொறியில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்தப் படத்தில் அறிமுகமாக இயலவில்லை. அந்த இசையமைப்பாளர் யார்?
5. பால.கைலாசம் விட்டுச்சென்ற படைப்புகள்
இந்தியாவின் ஆலயக் கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலையைப் பேணும் விஷ்வகர்மாக்களின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிப் பேசும் தமிழ் ஆவணப்படம் ‘வாஸ்துமரபு’. தமிழில் ஆவணப்பட இயக்கம் என்பது இன்னும் பரவலாகாத நிலையில் 1991-ல் பால.கைலாசம் உருவாக்கிய அழகிய ஆவணப்படம் இது. இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான வி.கணபதி ஸ்தபதியின் பார்வையில் இந்த ஆவணப்படம் இந்தியாவின் கட்டிடக் கலை மரபு குறித்துப் பேசுகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள், கும்பகோணத்தில் நீடிக்கும் வெண்கலச் சிற்ப வார்ப்புகள் என இன்றும் உயிர்ப்புடன் தொடரும் கட்டிடக் கலை மரபைப் பேசும் படம் இது. கலைஞனுக்கும் அவன் ஈடுபடும் கலைக்குமுள்ள ஆன்மிக உறவையும் கட்டிடக் கலையிலிருக்கும் கணித நுட்பங்களையும் ஆவணப்படுத்திய படமும்கூட. வெளி, ட்வைஸ் டிஸ்கிரிமினேட்டட் உள்ளிட்ட சிறந்த ஆவணப்படங்களை எடுத்த பால.கைலாசம் 2014-ம் ஆண்டு காலமானார். இவருடைய தந்தை பிரபலமான தமிழ் இயக்குநர்களில் ஒருவர். அவர் யார்?
விடைகள்: 1. பி.எஸ். ராமையா 2. ஜான் போர்ட் இயக்கிய ‘ஸ்டேஜ் கோச்’. 3. தி ரெவனென்ட 4. ஏ.ஆர். ரஹ்மான் 5. கே. பாலசந்தர் |