

“எல்லாவற்றையும் விட, உயிர் பிழைத்து வாழ்வது மட்டுமே மிக முக்கியம்” - வரலாற்றில் ஒவ்வொரு யுத்தமும் பேரிடரும் கற்றுத்தரும் மானுடப் புரிதல் இதுவே. தாது வருடப் பஞ்சத்தைப் பற்றி நம் தலைமுறை அறிந்திருக்காவிட்டாலும் 2004இன் ஆழிப் பேரலை, 2015 இன் பெருமழை வெள்ளம், சமீபத்திய கரோனா பெருந்தொற்று என மனிதகுலப் பேரிடர்கள் கற்றுத் தந்தது ஏராளம். அந்தப் பேரிடர்களின் வரிசையில், கேரளாவில் 2018 பெருமழையின்போது சூழ்ந்த திடீர் வெள்ளத்தின் பின்னணியில், வெவ்வேறு சூழல்கள், மனிதர்களையும் அவர்களது வாழ்வின் விழுமியங்களையும் அடிக்கோடிடும் படைப்பே ‘2018 எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ’ (2018 everyone is a hero) என்கிற மலையாளத் திரைப்படம்.
‘தசாவதாரம்’, ‘கயல்’, ‘ஃபயர் மேன்’ (மலையாளம்), ‘தும் மிலே’ (இந்தி) உட்பட பேரிடர் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிகக் குறைவு. “தொன்னூட்டி ஒன்பதில் வெள்ளப் போக்கம்” என்று மலையாளத்தில் குறிப்பிடப்படும் பெருமழை 1924இல் கேரளப் பகுதியில் பெய்திருந்தாலும் அதன் தரவுகள் நம்மிடையே மிக குறைவு. ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன்னர் கேரளத்தில் பெய்த இடைநில்லா கன மழை, அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அம்மாநிலத்தையே மிதக்க வைத்த பேரிடரானது. அதன் பாதிப்பு, திடீர் வெள்ளம் சராசரி மனிதர்களுக்குக் கொண்டுவந்த துயரம், வெள்ளத் துக்குப் பிறகான அவர்களின் மனமாற்றம் என்பதையெல்லாம் வெகு நேர்த்தியாக தொட்டுச் செல்கிறது இத்திரைப்படம்.
பேரிடரில் பிணைக்கப்படும் மனிதர்கள்: படத்தின் தொடக்கத்தில் நமக்கு வெவ்வேறு கதாபாத்திரங்கள், அவர்களது குறைகள், சூழல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சொந்த கிராமத்தில் கேலிக்கு உள்ளாக்கப்படும் ஒரு முன்னாள் ராணுவ வீரர், மீனவக் குடும்பத்தில் பிறந்துவிட்டு கடலோடி வாழ்வை இழிவாகக் கருதி மாடலிங் துறைக்கு மாற நினைக்கும் ஒரு இளைஞன், கேரளத்தின் புகழ்பெற்ற ‘வள்ளம் களி’ படகுப் போட்டியைக் காண்பிக்க இரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவரும் ஒரு சொகுசு கார் ஓட்டுநர், முல்லைப் பெரியாறு அணையின் இருதரப்பு நியாயங்களையும் ஆவணப்படுத்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தி பிரிவு ஆசிரியர், மகளின் பிறந்த நாளுக்குச் செல்ல முடியாமல் பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாடு அறையில் சிக்கிக்கொள்ளும் ஒரு வானிலை அதிகாரி, வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வரும் மனைவியைப் பிரிந்த ஓர் இளைஞர், கேரளத்துக்கு அன்றாடம் ‘லோடு’ ஓட்டிச் செல்லும் ஒரு தமிழர் என பல கதாபாத்திரங்கள் வெள்ளத்துக்குள் சிக்குகின்றன.
இவர்களுடைய ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிப்புக்கு உள்ளாகின்றன, தப்பிப் பிழைக்க என்ன செய்கிறார்கள், குணத் தளவில் குறையுள்ள இவர்களே எப்படி கதாநாயகர்களாக, நாயகிகளாக மாறி மற்றவர்களையும் காப்பாற்றுகிறார்கள் என வெவ்வேறு இழைகளைக் கொண்ட மனிதர்களை வெகு நேர்த்தியாக பேரிடர் எனும் ஒற்றைத் தறியில் மனிதம் கொண்டு நெய்திருக்கிறார் இயக்குநர்.
பேருந்தும் படகும்: முதல் பாதியில் எவ்வித அலப்பறை களும் இல்லாமல் நிறுவப்படும் கதாபாத்திரங்களை, இரண்டாம் பாதியில் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தில் உடைந்து கரையும் அதீத உணர்வுகளுடன் முடிச்சிட்டு இணைத்திருப்பது கதையோட்டத்தை வலுவாக்கியிருக்கிறது.
முன்பின் அறிந்திராத முக்கியக் கதாபாத்திரங்களின் சங்கமம், சிலிர்க்கச் செய்யும் உணர்வூட்டலாக மலையாளத்தில் இதற்கு முன் அமைந்த படங்களில் ‘வைரஸ்’, ‘ட்ராஃபிக்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘கேரளா கஃபே’ ஆகியவற்றைக் கூறலாம். அவற்றுக்கு சற்றும் குறையாத நிறைவான சங்கமம் நட்சத்திர நடிகர்களால் இப்படத்தின் மாயாஜாலங்களில் ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது.
சமகால மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களான டோவினோ தாமஸ், இந்திரன்ஸ், ஆஸிப் அலி, வினீத் சீனிவாசன், லால், நரேன், கௌதமி நாயர், தன்வி ராம், ஷிவதா, அபர்ணா பாலமுரளி, கலையரசன் (தமிழ்) என நீள்கிறது பட்டியல். இவர்கள் ஏற்ற அனைத்துக் கதாபாத்திரங்களிலும் யாருமே நட்சத்திர உணர்வை நமக்கு ஏற்படுத்தவில்லை என்பது தனிச் சிறப்பு. இவர்களோடு ராக்கெட் எனப் பெயரிடப்பட்ட ஒரு பேருந்தும் மேரி மாதா என்று பெயரிடப்பட்ட ஒரு படகும் கூட கதாபாத்திரங்களாக நம்மைக் கவனிக்க வைக்கின்றன.
இயக்குநரின் ஆளுமை: ஏற்கெனவே ‘ஓம் சாந்தி ஓசன்னா’, ‘ஒரு முத்தச்சி கதா’, ‘சரஸ்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, நடிகர், எழுத்தாளர் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் தன் திறமையை மெருகேற்றி, அகில் பி தர்மராஜன் உடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கும் நான்காவது படம் இது. வெறுமனே கடந்து போகக்கூடிய ஒரு தட்டையான ஆவணமாக இல்லாமல், திரைமொழிக்கு உண்டான மாயக் கணங்களைச் சரியான இடைவெளியில் திரைக்கதை நெடுக உருவாக்கியிருப்பது இயக்குநரின் திறமை.
ஒட்டுமொத்த கேரளத்தையும் திடீர் கனமழை தாக்கியிருந்த போதிலும் கதையின் சம்பவங்கள் ஒரு கிராமத்துக்குள் நிகழ்வதாகச் சுருக்கித் தொகுத்துத் தந்திருப்பது கச்சிதம், குறிப்பாக, கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர் ஒருவரை, மெத்தச்சன், வின்சென்ட் (லால் - நரேன்) இருவரும் காப்பாற்றும் காட்சி, கர்ப்பிணி ஒருவரை ஹெலிகாப்டரில் காப்பாற்றும் காட்சி, ஓட்டு வீட்டுக்குள் சிக்கியிருக்கும் குடும்பத்தை நாயகன் அனூப் காப்பாற்றும் காட்சிகள் ஆகியவற்றைப் பெரிய திரையில் பதற்றத்துடன் பார்க்க வைத்திருப்பது நல்ல திரை அனுபவம்.
படத்தின் தொடக்கத்தில் காட்டப் படும் தேவாலயக் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிலுவை, கதையின் பிற்பகுதியில் வேறொரு தளத்தில் காட்டப்படுவதும், மின்சார இணைப்பு கம்பிகளின் பயன், கடற்புறத்தில் இருந்து நகருக்குள் கொண்டு வந்து சேர்க்கப்படும் படகுகள் என எல்லாமே காட்சிக் கற்பனையின் உச்சங்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நகைச்சுவை சரியாக எடுபடவில்லை என்ற குறையை மன்னித்துவிடலாம்.
அகில் ஜார்ஜின் அசாத்திய நேர்த்தியுடன் கூடிய ஒளிப்பதிவு, மூர்க்கமாகப் பெருகியோடும் வெள்ள நீரின் குரலையும் அது வடிந்து சடசடக்கும் பணிவையும் விஷ்ணு கோவிந்தின் ஒலி வடிவமைப்பு நம்மை வெள்ளக் காட்டுக்குள் அழைத்துப் போய்விடுகிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக உதவி இருக்கிறது மோஹன்தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு.
கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் குணாம்சம் ஆகியவற்றை நிறுவும் காட்சித் துணுக்குகளை சரியான வரிசையில் தொகுத்திருக்கும் சாக்கோவின் படத்தொகுப்பு எந்த உத்திக்குள்ளும் சிக்காத இயல்புடன் இருக்கிறது. படத் தலைப்பின் வடிவமைப்பில்கூட கதையின் பின்புலத்தை நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
இது இந்தியப் படைப்பு: பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் கேரளப் படங்களுக்கு மத்தியில், தொழில்நுட்பப் பிரிவில், ஒலி வடிவமைப்பில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் என இப்படம் பிசிறு தட்டாமல் வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோரின் படங்களை எல்லா தலைமுறைகளும் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் பிரம்மாண்டமும் ஃபேண்டஸியும். அந்த மாயாஜாலத்தை தாண்டி கதாபாத்திரங்களின் உள்ளேபுதைந்திருக்கும் அடிப்படை மனிதஉணர்வுகளும் அவற்றின் அடிப் படையாக இருக்கும் மனிதநேயமும்தான் உண்மையான பிரம்மாண்டம் எனக் காட்டி இருப்பார்கள்.
இந்த மையப்புள்ளியை தான் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பும் முன்வைக்கிறார். இரு இணை கோடுகளான கலையும் வணிகமும் எப்போதாவதுதான் ஒரு மையப்புள்ளியில் இணையும். அந்த இணைப்பைச் சாத்தியப்படுத்தி ரசிகர்களின் பாராட்டையும் வணிக வசூலையும் ஒரே புள்ளியில் இணைய வைத்து இருக்கிறது ‘2018’. இதை நேர்த்தியான மலையாள சினிமா எனச் சுருக்க வேண்டியதில்லை. ஒரு இந்தியப் படைப்பு என விரித்துக் கூறலாம்.
கதாபாத்திரங்களின் உள்ளே புதைந்திருக்கும் அடிப்படை மனித உணர்வுகளும் அவற்றின் அடிப் படையாக இருக்கும் மனித நேயமும்தான் உண்மையான பிரம்மாண்டம்.
- tottokv@gmail.com