

அ
கதா கிறிஸ்டியின் விறுவிறு மர்ம நாவலாக 1934-ல் வெளியானது, ‘மர்டர் ஆன் த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’. 1974-ல் அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக வெளியாகி த்ரில்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது இன்னும் ஸ்டைலிஷான மீட்டுருவாக்கத்தில் புதிய ஹாலிவுட் தழுவலாக நவம்பர் 10 அன்று வெளியாகிறது ‘மர்டர் ஆன் த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’.
கொட்டும் பனிக்காலத்தில் ஐரோப்பாவின் குறுக்காக ஓடும் நீராவி ரயிலில் கதை நடக்கிறது. மலைச்சரிவு அருகே பாலம் ஒன்றைக் கடக்கும் ரயில் திடீரென நின்றுவிடுகிறது. வெளி மனிதர்கள் அரவமற்ற அந்த இடத்தில், ரயிலின் பணக்காரப் பயணி ஒருவர் தாழிட்ட கூபே அறைக்குள் கொலையாகிறார். சக பயணிகளில் எவரோ ஒருவர்தான் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்ற வகையில் பேராசிரியர், சிப்பந்தி, உதவியாளர், மருத்துவர், ஒரு கேங்ஸ்டர் எனப் பிரதான பயணிகளில் பலரும் விசாரணை வளையத்தில் சிக்குகிறார்கள். அகதா கிறிஸ்டியின் ஆஸ்தான துப்பறிவாளர் ஹெர்குல் பொய்ரோ களமிறங்கி, சக பயணிகள் மீது படியும் சந்தேக நிழல், அதற்கான பின்னணி, கிடைக்கும் தடயங்கள் அடிப்படையில் முடிச்சுகளை அவிழ்க்க முயல்கிறார். இறுதியில் வலுவான ஆதாரங்களுடன் கொலைக் குற்றவாளியை அடையாளம் காண்கிறார்.
நாவலாக மட்டுமன்றி சினிமா, டிவி தொடர்கள் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட கதையை, பிரத்யேகத் திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை உள்ளிட்டவற்றால் மீண்டும் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய பட உருவாக்கத்துக்காக உழைத்திருக்கிறார்கள். ஹெர்குல் பொய்ரோ வேடத்தில் படத்தின் இயக்குநர் கென்னத் பிரனக் வருகிறார். ஜானி டெப், டெய்ஸி ரிட்லி, ஜூடி டென்ச் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கின்றனர்.
அகதா கிறிஸ்டியின் இந்த நாவல் தமிழிலும் மொழிபெயர்ப்பாக வாசிக்க கிடைக்கிறது. அகதா நாவலின் தழுவலில் ஆவியைப் புகுத்தி, பி.வாசுவின் இயக்கத்தில் கன்னடத்தில் (சிவராஜ்குமார்) ஓடிய மற்றும் தமிழில் (ராகவா லாரன்ஸ்) ஓடாத ‘சிவலிங்கா’ என்ற பெயரிலான படங்களைப் பார்த்திராத ரசிகர்களுக்கு, இந்த ஹாலிவுட் ஆக்கம் சுவாரசியமான அனுபவமாக இருக்கலாம்.