தம்பியை இயக்குநர் ஆக்கிய அண்ணன்! - யுவராஜ் கணேசன் பேட்டி

யுவராஜ் கணேசன்
யுவராஜ் கணேசன்
Updated on
2 min read

கோடம்பாக்கத்தில் பிஸியான போஸ்டர் டிசைனராக புகழ் பெற்றிருப்பவர் யுவராஜ் கணேசன். இவரது டிஜிட்டல் தூரிகையில் ஒளிராத நட்சத்திரங்களோ, பட நிறுவனங்களோ இல்லை. வடிவமைப்பு என்பதைத் தாண்டி, தற்போது படத் தயாரிப்பிலும் குதித்திருக்கிறார். குறட்டைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் அந்தப் படம் ‘குட் நைட்’. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

திரையுலகில் தடுக்கி விழுந்தால் டிசைனர்கள். போட்டி நிறைந்த இத்துறைக்குள் இவ்வளவு பிஸியாக இருக்கும் ரகசியம் என்ன?

போஸ்டர் டிசைன் என்பதே படத்தின் கதையை மக்களுக்குப் பிடிக்கும் விதத்திலும் எளிதாகப் புரியும் விதத்திலும் சொல்வதுதான். நான் இங்கே படம் இயக்க வேண்டும் என்று வந்தவன். திரைக்கதை எழுதும் ஆர்வம்தான் என்னை இங்கே கூட்டி வந்தது.

அதனால்தானோ என்னவோ நானும் எனது டீமும் வடிவமைக்கும் டிசைன்கள் மக்களுடன் சட்டென்று ‘கனெக்ட்’ ஆகிவிடுவதாகத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பாராட்டுவார்கள். ஒரு படத்தின் கதையில் இருக்கும் எந்தப் புள்ளியை போஸ்டர் டிசைனாக மாற்ற வேண்டும் என்பதிலேயே எனது நோக்கம் இருக்கும். இதை ரகசியமென்று சொல்வதைவிட, ரசனை என்பேன்.

யுவராஜ் கணேசன்
யுவராஜ் கணேசன்

ஒரு டிசைனர் தயாரிப்பாளர் ஆன பின்னணியைக் கூறுங்கள்..

படம் தயாரிக்கும் திட்டம் எப்போதும் இருந்ததில்லை. என்ன வேலை செய்தாலும் அதைச் சினிமாவில் செய்ய வேண்டும் என வந்தபோது, இங்கே ‘சர்வைவல்’ பெரிய பிரச்சினை என்பதை உணர்ந்தேன். அப்போதுதான், கல்லூரியில் தொடங்கி எனக்கு ஆர்வம் மிகுந்திருந்த டிசைன் துறை கைகொடுத்தது. இதற்கிடையில் என்னைப் போலவே சினிமா இயக்கத்தின் மீது கனவுடன் சென்னை வந்தார் எனது தம்பி. அவர் எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதை என்னை ஈர்த்தது.

இது நடுத்தர வர்க்கத்தின் கதை. இக்கதாபாத்திரங்கள் அனைவரும் நம் அனைவரது வீட்டிலும் இருப்பவர்கள். அதனால், இதை எளிதாக ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகக் கொண்டு வந்துவிட முடியும் எனத் தோன்றியது. எனது கனவை ஒத்தி வைத்துவிட்டு, தம்பிக்குத் திரையுலகில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் வயது வேறுபாடின்றி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு திரைப்படமாக இது வரும் என்று தோன்றியதால் துணிந்து தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

‘குட்நைட்’ படத்தின் கதை என்ன? ‘ஜெய் பீம்’ மணிகண்டனை தேர்வு செய்ய என்ன காரணம்?

நடுத்தர வர்க்க குடும்பங்களில் அன்றாட வாழ்க்கை என்பது மிகவும் சுவாரசியமாக, கொண்டாட்டமாக, பல வேளைகளில் திண்டாட்டமாக இருக்கும். அப்படியொரு குடும்பத்தில் அவர்களுக்குத் தெரியாமல் ஒரு கேன்டிட் கேமரா வைத்துப் படமாக்கினால் எப்படியிருக்குமோ அப்படியொரு சுவாரஸ்யம் கொண்ட கதை. இதில் குறட்டை என்பது ஒரு சின்ன இழைதானே தவிர, இதற்குள் பொதிந்திருக்கும் உணர்வுகள் பார்வையாளர்களைச் சிலிர்க்க வைக்கும்.

இந்தக் கதைக்கு மணிகண்டனும் ரமேஷ் திலக்கும் வேண்டும் என் பதில் தம்பி உறுதியாக இருந்தார். ஏனென்றால் இயற்கையான நடிப்பு இந்தக் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மிக அவசியம். அதை இவர்கள் மட்டுமல்ல, அத்தனை பேரும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.

படக்குழு பற்றி?

முதல் நாளில் தொடங்கி இது படமாக்கப்படும் விதத்தைப் பார்த்து, இதற்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பைக் கொடுக்கலாம் என்று ‘ஷாட் பை ஷாட்’ நேசித்து அனைவரும் வேலை செய்தார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பங்களிப்பைக் கூற வேண்டும்.

‘ஜெய் பீம்’ போன்ற ஒரு பெரிய படத்துக்கு எவ்வளவு உழைப்பைக் கொடுத்தாரோ அதைவிட அதிகமாகவே இதற்குக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன், எடிட்டர் விக்ரமன் என இப்படத்தைச் செதுக்கித் தந்திருக்கிறார்கள். இனி மக்கள் கொண்டாட வேண்டியது மட்டும்தான் பாக்கி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in