

மயிர் கூச்செரியும் ஹாரர் வகையறா திரைப்படங்களுக்கு என உலகம் முழுக்க பரவலான ரசிகர் கூட்டம் உண்டு. இவர்களை நம்பி ‘ஹாலோவீன்’, ‘ஃப்ரைடே 13’, ‘ஸ்க்ரீம்’, ‘ஃபைனல் டெஸ்டினேஷன்’ என ஹாலிவுட்டில் ஒரே தலைப்பில் தொடர் படங்களை வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் இடம்பிடிக்கிறது ‘சா’ (Saw) தொடர். இதுவரை 7 படங்கள் சா வரிசையில் வெளியாகியிருக்க, 8-வது படமாக அக்டோபர் 27-ம் தேதி வெளியாகிறது ‘ஜிக்சா’ (Jigsaw).
அநாமதேய அறையில் பொறியில் சிக்கிய எலிகளாகத் தவிக்கும் நபர்கள் சிலருக்கு, உயிர் பிழைக்கும் உபாயம் என்ற பெயரில் ஆபத்தான வாய்ப்புகள் தரப்படுகின்றன. அந்த மரண விளையாட்டுகளை உயிரச்சத்துடன் அவர்கள் சந்திப்பதும், தோல்வியின் விளிம்பில் சாவை ருசிப்பதும் நடக்கிறது. இன்னொரு பக்கம் வில்லனை வளைக்க போலீஸ் குழு துரத்துகிறது.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளான ஜான் க்ராமர் என்ற பொறியாளர் தனது தற்கொலை முயற்சியில் தோல்வி அடைகிறார். மரணத்துடனான போராட்டத்தில் தனக்குக் கிடைத்த வெகுமானமாக உயிர்பிழைத்துவிட்டதைக் கருதும் ஜான்க்ராமர், பின்னர் சிலருக்கு மரணத்தை அறிமுகப்படுத்தி வாழ்வின் மீதான அவர்களின் பிடிப்பைச் சோதித்துப் பார்க்கிறார். இதற்காக உச்சபட்ச சித்ரவதைகள் மற்றும் வன்முறைகளுடன் ரகம் ரகமான 57 மரண விளையாட்டுகள் இதுவரையிலான ‘சா’ படங்களில் வெளியாகி இருக்க, ‘ஜிக்சா’வில் அவற்றைத் தூக்கியடிக்கும் விதமாகத் திகில் கிளப்பி இருக்கிறார்களாம். ‘ஜிக்சா’ படத்தை இரட்டையர் இயக்குநர்களான மைக்கேல் மற்றும் பீட்டர் ஸ்பீரிக் இயக்கி உள்ளனர். வில்லன் ஜான் க்ராமர் வேடத்தில் அதே டோபின் பெல் நடித்திருக்கிறார். மரணபயத்தை ரசிக்கச் சொல்வது எத்தனை குரூரமான ஹாலிவுட் ரசனை?