வேட்டையாடு விளையாடு 04: நேருவைக் கவர்ந்த திரைப்படம்
1. புதுமைகளின் காதலர்!
பாடல்களுக்கு நடுவில் கொஞ்சூண்டு கதை சொன்னவை அந்நாட்களின் தமிழ் சினிமாக்கள். அவற்றின் மத்தியில் பாடலே இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அந்த நாள்’. சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடித்து 1954-ம் ஆண்டு வெளியானது. வீணை மேதை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் இது.
அகிரா குரோசவாவின் ‘ரஷோமா’னின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது. செஸ், ஸ்நூக்கர், ஓவியம் என்று பல துறைகளில் வல்லுநராக இருந்தவர் எஸ். பாலச்சந்தர். 1964-ல் இவர் இயக்கி வெளியாகிய ‘பொம்மை’ படத்தின் இறுதியில் ஓடும் டைட்டில் காட்சியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் திரையில் தோன்றச்செய்து, அவர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதுமையைச் செய்திருந்தார். தமிழ் சினிமாவுக்கு கே.ஜே.யேசுதாஸ் ‘பொம்மை’ படத்தின் வழியாகவே அறிமுகமாகினார்.
‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடலில் பயன்படுத்தப்பட்டது ஒரே ஒரு இசைக்கருவிதான். அந்த இசைக்கருவி எது?
2. இன்னும் முடியாத குருக்ஷேத்திரம்
உலகமெங்குமுள்ள நடிகக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் ‘தி மகாபாரதா’. 1985-ல் ஐந்தாண்டு கால ஆராய்ச்சி, பயணங்களின் அடிப்படையில் ஒன்பது மணி நேர பிரெஞ்ச் நாடகமாக உருவாக்கப்பட்ட மகாபாரத்த்தின் திரைவடிவம் இது. மகாபாரதம் என்றாலே நம் கண்முன் தோன்றும் பிரமாண்டத்தை நீக்கி, எளிய அரங்கங்கள், உடைகள் வழியாக தர்மம், எதார்த்த வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை உருவாக்கியிருந்தார் பீட்டர் ப்ரூக். பீட்டர் ப்ரூக்குடன் சேர்ந்து இந்த நாடகத்தை எழுதியவர் பிரெஞ்சு திரைக்கதையாசிரியர் ஜீன் க்ளாட் கேரியர்.
பீட்டர் ப்ரூக்குடன் இணைந்து வடதமிழகம் வரை வந்து மகாபாரதக் கூத்துகளையும் இந்த நாடகத்தை எழுதுவதற்கு முன்பாகப் பார்த்திருக்கின்றனர். இந்த நாடகத்திலும் திரைப்படத்திலும் திரௌபதையாக நடித்தவர் பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய். உலகளாவிய கலை ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மகாபாரதம் பரவலாக இப்படைப்பின் மூலமாகவே அறிமுகமானது.
எத்தனையோ காலங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் மகாபாரதம் இன்றும் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் யுத்தமாக, மோதல்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே சர்வதேச நடிகர்களை இதில் நடிக்க வைத்த்தாக கூறியிருக்கிறார் பீட்டர் ப்ரூக்ஸ். இந்தப் படைப்பில் முக்கியமாக விடுபட்ட கதாபாத்திரங்கள் எவை?
3. நேருவைக் கவர்ந்த திரைப்படம்
வங்காளத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதை 62 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவாக எடுக்கப்பட்டது. இயக்குனர் புதியவர். ஒளிப்பதிவாளர் புதியவர். நடிகர்கள் புதியவர்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல உலக சினிமா வரைபடத்திலும் தடம்பதித்த அத்திரைப்படத்தின் பெயர் ‘பதேர் பாஞ்சாலி’. இயக்கியவர் சத்யஜித் ராய். ஒருமுறை பார்த்தவர்கள் கூட அப்புவையும் துர்காவையும் கிழவியையும் மறக்க மாட்டார்கள். விபூதிபூஷன் வங்க எழுத்தாளர் பந்தோபாத்யாயா எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை ‘அபு ட்ரையாலஜி’ யாக மூன்று படங்களாக எடுத்தார். கோல்கத்தாவுக்கு அருகிலுள்ள போரல் என்னும் கிராமத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.
சத்யஜித் ராய், பல பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் தனது எல்பி ரெக்கார்டுகளின் சேகரிப்புகளைக் கூட விற்றும் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் எடுத்த இப்படத்தின் படப்படிப்பு வேலைகள் ஐந்து வருடங்களுக்கு நீண்டது. மேற்கு வங்காள அரசின் நிதியுதவி கிடைத்தபிறகே படவேலைகள் முடிவடைந்தன. இப்படத்துக்கு இசையமைத்தவர் சிதார் மேதை ரவிஷங்கர். இத்திரைப்படத்தை வெளியான பிறகு பார்த்த அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு செய்த முயற்சியால் கான் திரைப்பட விழாவுக்குச் சென்று சிறந்த மானுட ஆவணத்திற்கான விருதைப் பெற்றது.
விளம்பரத்துறையில் பணியாற்றிய சத்யஜித்ரே தொழில்முறைப் பயணமாக லண்டன் சென்றபோது சினிமா எடுக்கத் தூண்டிய திரைப்படம் எது?
4. உலகை கலக்கிய திரைப்பட வகை
வறண்ட நெடிய பாலை நிலங்கள், பணத்துக்காக குற்றவாளிகளைக் கொலை செய்ய அலையும் ஈரமேயில்லாத கண்களைக் கொண்ட கவ்பாய் வீரர்கள், மவுத் ஆர்கன் இசை, குதிரைகள் என்றவுடன் வெஸ்டர்ன் படங்கள் நமக்கு ஞாபகத்தில் வரும். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் மிசிசிபி நதிக்கு மேற்கே குடியேறிய வெள்ளையர்களின் வாழ்க்கை, பூர்வகுடிகளுடனான மோதல்களைக் களனாக கொண்ட கதைகள் இவை. ஹாலிவுட்டில் 1920-களில் வெஸ்டர்ன் திரைப்படங்கள் ஒரு வகைமையாகப் பெரும் புகழைப்பெற்றன.
1960-களில் ஸ்பாகர்ட்டி வெஸ்டர்ன் என்ற பெயரில் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கவ்பாய் படங்கள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பார்க்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் புகழ்பெற்ற மேற்கத்திய கவ்பாய் படங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் வெஸ்டர் திரைப்படங்களை எடுப்பதில் முத்திரை பதிப்பவராக காலம் சென்ற இயக்குனர் கர்ணன் இருந்தார். கங்கா, ஜம்பு, எங்கள் பாட்டன் சொத்து போன்ற திரைப்படங்கள் புகழ்பெற்றவை.
ஸ்பாரகர்ட்டி வெஸ்டர்ன் வகைமையில் எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி பரதன் இயக்கிய மிகப்பெரும் வெற்றிபெற்ற மலையாளத் திரைப்படத்தின் பெயர் என்ன?
5. உலகின் சிறந்த இரு படங்கள்
தோல்வியுற்ற தனிவாழ்க்கை; அமரத்துவம் வாய்ந்த கலை; இதற்கு சினிமா உதாரணமாக இருந்தவர் நடிகர், இயக்குனர் குருதத். வசந்த் குமார் சிவசங்கர் படுகோன் என்ற இயற்பெயரைக் கொண்ட குரு தத், இந்தி சினிமாவின் அழியாக் காவியங்களான ப்யாசா, காகஸ் கே பூல் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்தவர். பாலிவுட் வணிக சினிமா வடிவத்துக்குள்ளேயே கலாபூர்வமான சாதனைகளைச் செய்ததாக நினைவுகூரப்படுகிறார்.
இவர் இயக்கி நடித்த பியாசா, காகஸ் கே பூல் ஆகிய படங்களின் பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. ’காகஸ் கே பூல்’ தான் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமும் கூட. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த குரு தத் 1959-ல் எடுத்த காகஸ் கே பூல் பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஆனால் 1980-களுக்குப் குரு தத்தின் மரணத்துக்குப் பிறகு இந்திய அளவில் எடுக்கப்பட்ட காவியங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.
உலகளவில் எடுக்கப்பட்ட 100 சிறந்த படங்களில் இரண்டாக இவர் எடுத்த பியாசாவும் காகஸ் கே பூலும் இடம்பெற்றுள்ளன. 39 வயதில் மறைந்து போன குரு தத் பிறந்த ஊர் எது?
