

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நினைவு. அதை நாம் பார்த்த காலம், இடம், நம்மோடு சேர்ந்து பார்த்தவர்கள், பார்த்த திரையரங்கம், சூழல், கதையின் வெளி, அதில் நடித்த நடிகர்கள், இசை, அது உருவாக்கிய தாக்கம் எனப் பல அம்சங்கள் நினைவில் தங்குகின்றன.
ஒரு படத்தைக் கோடிக்கணக்கானவர்கள் பார்த்தாலும் அதைச் சமகாலத்தில் பதிவுசெய்து ஆவணப்படுத்துகிற திரை வரலாற்று ஆசிரியர் என்போர் வெகுசிலரே.
அவர்களில் ராண்டார் கை, வெகுஜன ரசிகர்களின் நினைவுகளைக் கிளறி, அவர்கள் தவறவிட்ட அம்சங்களையும் அறியாத தகவல்களையும் தன் தேடலின் வழியாகக் கொடுத்ததில் அசராத ஆளுமை. ‘ராண்டார் கை’யின் இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை. சினிமா வரலாற்றை எழுதும் யாரும் இவர் தந்துச் சென்றுள்ள தரவுகளைப் புறக்கணித்து முன்னேற முடியாது.
அச்சு, வானொலி, தொலைக்காட்சி, காணொளி, நாடகங்கள், திரைப்படங்கள், திரைப் பாடல்கள், சமூகம், சட்டம், கலாச்சாரம் ஆகிய பலவற்றையும் எழுதிய ராண்டார் கை, எதுவொன்றையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அணுகிய எழுத்தாளர்.
திரைப்படங்களுக்கு எழுதியவர்: 1937ஆம் ஆண்டு நெல்லூரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்த இவர், அறிவியல், சட்டம் என இரண்டு பட்டப்படிப்புகளை படித்து முடித்தது அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தில்.
பள்ளிக் காலத்தில் ‘விஷ்ணுஜித்’ என்கிற நாடகத்தை எழுதியதும் ‘பக்த ராமதாஸ்’ என்கிற நாடகத்தில் நடித்ததும் இவரின் எழுத்து, கலை வாழ்வுக்குத் தொடக்கப்புள்ளிகளாக அமைந்தன. பின்னர், 24 வயது இளைஞராக நான்கு மாதங்கள் முக்தா பிலிம்சில் ‘மகனே கேள்’ என்கிற திரைப்படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். பிறகு, வழக்கறிஞர் வி.சி.கோபால ரத்தினத்திடம் உதவியாளராகப் பணி.
அங்கே ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன், அதன் ஊழியர் ஜெமினி கணேசன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைக்க, அதை நெருக்கமான நட்பாக மாற்றிக்கொண்டார். அந்தக் காலத்திலேயே போதாமையுடன் தன்னிடம் கருத்துக் கேட்டு வரும் திரைக்கதைகளுக்குக் காட்சிகள் எழுதுதல், வசனங்கள் எழுதிச் சேர்த்தல் என ராண்டார் கையின் படைப்பாளுமை திரையுலக துறை சார்ந்து வளர்ந்தது.
பின்னால், ‘தவப்புதல்வன்’, ‘சூரியகாந்தி’, ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘இதயக்கனி’ போன்ற திரைப்படங்களில் ஆங்கில வரிகளும் இடம்பெறும் தமிழ்ப் பாடல்களுக்கு எழுத ராண்டார் கை அழைக்கப்பட்டார். முக்தா வி. சீனிவாசன் இயக்கிய ‘தேன்மழை’ தான் இவர் இறுதியாகப் பணியாற்றிய படம். 1980களில் தனது நெருங்கிய நண்பரான நடிகர் வி.கோபாலகிருஷ்ணனை வைத்து ‘இன்ஸ்பெக்டர் வாசு’ என்கிற தொலைக்காட்சித் தொடரையும் எழுதியுள்ளார்.
உலகம் சுற்றிய வாலிபர்: ‘பேட்டர்சன் & கோ’ நிறுவனத்தில் 5 ஆண்டுகள் சட்ட வல்லுநராகப் பணியாற்றி வெளியேறிய பின், எழுத்தெனும் கடல் அவரை ஆழமாக உள்வாங்கிக்கொண்டது. ‘பேட்டர்சன் & கோ’வில் பணிபுரியும்போது டொலோரெஸ் கை (Doleres guy) என்னும் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியை விரும்பி மணந்தார். திருமணத்துக்குப் பின் டொலோரெஸ் பிரபல இதய மருத்துவ நிபுணராக விளங்கிய செரியனிடம் பணியாற்றினார். மனைவி பெயரின் ஒரு பகுதியுடன் தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களைச் சற்றே இடம் மாற்றம் செய்து ‘ராண்டார் கை’ என மாற்றிக்கொண்டார்.
இத்தாலிய - அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான ஃபிராங்க் காப்ரா (Frank Capra) எனும் திரை ஆளுமையைப் பற்றி தொடக்கத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரை, அமெரிக்க அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக வாங்கப்பட்டது. மேலும் ஃபிராங்க் காப்ரா பற்றிச் சொற்பொழிவாற்ற உலகின் பல நாடுகளுக்கு இவரை அனுப்பியது அன்றைய அமெரிக்க அரசு.
அதன்பிறகு சினிமா வரலாற்றையும் ஆளுமைகளையும் எழுதுவதில் முழு மூச்சாக இறங்கினார் ராண்டார் கை. ‘தி இந்து’, ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘டெக்கான் க்ரானிக்கல்’, ’அண்ணா நகர் டைம்ஸ்’ போன்ற பல இதழ்களில் எழுதினார்.
வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், ஆவணப் படங்கள், விளம்பரப் படங்கள், பெரு வணிக ஊடகத் தொடர்பு ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் கணிசமான அளவில் எழுதினார். இவை போக 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்திய - ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘டேல்ஸ் ஆஃப் காமசூத்ரா பெர்ஃபியூம்ட்டு கார்டன்’ (Tales of the Kamasutra perfumed garden) என்கிற படத்துக்கு 1999இல் கதை, வசனம் எழுதியுள்ளார்.
இதுவே ‘பிரம்மச்சாரி’ என இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெற்றியைக் குவித்தது. கூடுதலாகத் தனது க்ரைம் நாவலைத் தழுவி ‘பாரடைஸ் பீக்’ என்கிற சிங்களப் படத்துக்கும் இவர் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். நமீதா ஆங்கிலத்தில் நடித்த ‘மாயா’ என்கிற படத்துக்குத் திரைக்கதை எழுதியதும் இவர்தான். ஸ்டெல்லா மேரி, லயோலா, புதுக்கல்லூரி என வெவ்வேறு கல்லூரிகளில் இவர் சிறப்புப் பேராசிரியராகக் காட்சி ஊடக மாணவர்களுக்கு சினிமா வரலாற்று வகுப்புகளை எடுத்துள்ளார்.
தகவல் களஞ்சியம்! - சினிமா வரலாற்றை எழுதுவதில் மற்ற வரலாற்றாசிரியர்களுக்கு இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. திரையுலகில் ஒரு கலைஞராகப் பல கலைப் பிரிவுகளில் இயங்கியதே அது. ஒரு படத்தின் ஆக்கம், வெளியீடு, அதன் பிறகான தாக்கம் எனப் பலவற்றைச் சமகால சமூகத்தின் நிகழ்வுகளுடன் பொருத்தி எழுதினார். தனிமனிதத் தகவல் களஞ்சியம் என்கிற எல்லைக்குச் சென்று, ‘தி இந்து’வில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் தரவுகளாக விளங்குகின்றன.
இன்னொரு பக்கம் ராண்டாரின் பிறமொழி ஆளுமை, இசைஞானம், திரையிசை பற்றிய தேர்ந்த அறிவு ஆகியன, திரை வரலாற்றைக் கூடுதல் சுவாரஸ்யத்துடன் எழுதிட அவருக்கு உதவின. தெலுங்கு இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ், பி. பானுமதி, கே.எஸ். பிரகாஷ், நாகேஸ்வர ராவ் ஆகியோருடனும் தமிழில் எம்.எஸ்.வியுடனும் நட்பிலிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் திரையிசைப் பாடல்களையும் குறிப்பிடப்பட்ட ராகங்கள் பற்றிய அலசல் கட்டுரைகளையும் அவரால் தொடர்ந்து எழுத முடிந்தது. பேசும்படத் தொடக்க யுகத்தின் முக்கிய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கனுடன் நட்பிலிருந்தார்.
பழுத்த முதுமையில் டங்கன் சென்னை வந்தபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்து, அவரை அழைத்துக்கொண்டு போய் அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்க வைத்தார். இருக்கும்வரை எழுதிக்கொண்டிருந்த இவர், தேசிய ஆவண காப்பகத்துக்காக ‘வி.எச்.எஸ்’ காலத்தில் எடுத்த காணொளி பேட்டிகள், பல தொடக்க கால சினிமா ஆளுமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் மாபெரும் திறப்புகள். அங்கதமும், சுவாரஸ்யமும், சங்கீதமும் கலந்தே கட்டமைக்கப்பட்ட அவரின் மொழி நடை வாசிப்பை ஊக்கப்படுத்தும் சிறப்பைக் கொண்டது.
சென்னை மாநகரம், அன்றைய திரையரங்குகள், ஸ்டுடியோக்கள் பழைய திரைப்படங்கள், பிரபலங்கள் பற்றி இவர் கடைசியாக எழுதிய ‘Memories of Madras : Its Movies, Musicians & Men of Letters’ புத்தகம், ஒரு வரலாற்றுப் பெட்டகம். அவரின் எழுத்துகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டால் அடுத்த தலைமுறையினருக்குப் பயன் தரும். வரலாறு வாழ்த்தும்.
- tottokv@gmail.com