அஞ்சலி: மனோபாலா | இரண்டு தளங்களில் நட்சத்திரம்!

‘நான் உங்கள் ரசிகன்’ படப்பிடிப்பில் நளினி, ராதிகாவுடன்...
‘நான் உங்கள் ரசிகன்’ படப்பிடிப்பில் நளினி, ராதிகாவுடன்...
Updated on
2 min read

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்! அது மனோபாலாவுக்கு முற்றிலும் பொருந்தும். வெற்றிகரமான இயக்குநராக ஒரு வட்டமடித்து முடித்த பிறகு, ‘நமக்கான காலம் முடிந்தது’ என்று ஓய்ந்துவிடாமல், ஓய்வற்ற நடிகராகத் தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்தவர். தொலைக்காட்சித் தொடர், படத் தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதித்தார். நாகேஷுக்குப் பிறகு பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் வெற்றிகரமான குணச்சித்திர காமெடியனாக வலம் வந்தார்.

சந்தானமும் சூரியும் யோகி பாபுவும் இன்னபிற நகைச்சுவை நடிகர்களும் படத்தில் இருந்தாலும் ‘கும்பகோணம் காபி’யைப் போல அந்தக் கூட்டத்துக்கு நடுவே வெகுஜன ரசிக மனநிலைக்கு நெருக்கமான உணர்வை நகைச்சுவையில் தருவார். இத்தனை வயதிலும் தன்னை வைத்துச் செய்யப்பட்ட உருவக்கேலி நகைச்சுவையைக் கூட அவர் புறந்தள்ளியதில்லை. அவரைப் பொறுத்தவரை ரசிகர்கள் எப்படியேனும் சிரித்துவிட்டுத் திரையரங்கிலிருந்து வெளியே வர வேண்டும்.

கமலின் ஆதரவு: தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்ட மனோபாலாவின் இயற்பெயர் பாலசந்தர். சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் நுழைந்துவிட வேண்டும் என, பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் சென்னைக்கு ஓடி வந்தவர். அதன்பின், அரசுத் திரைப்படக் கல்லூரியில் சேர நினைத்தவருக்கு அரசு ஓவியக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு அமைந்தது.

அங்கே படித்துக்கொண்டே மனோபாலா என்கிற பெயரில் பத்திரிகைகளில் எழுதவும் செய்தார். அவற்றில் சிறுகதைகளும் அடக்கம். தங்கப்பன் மாஸ்டரிடம் கமல்ஹாசன் நடன உதவியாளராக இருந்த காலத்தில் அவரது நட்பைப் பெற்று, ‘ஆழ்வார்பேட்டை கேங்க்’கில் சேர்ந்தார். அங்கே சந்தானபாரதி, வாசு, அனந்து, பின்னால் மணி ரத்னம் என்று நண்பர்கள் சேர்ந்துவிட, கே.பாலசந்தரின் படப்பிடிப்புகள் பலவற்றுக்கு வேடிக்கைப் பார்க்கப் போனார்.

‘சேர்ந்தால்.. இவரிடம் உதவியாளராகச் சேரவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ‘முள்ளும் மலரும்’ படம் வெளியானது. அதைப் பார்த்து, ‘எடுத்தால் மகேந்திரனைப் போல் படங்களை எடுக்க வேண்டும்; அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும்’ என்று நினைத்தார். ஆனால், மனோபாலாவை, பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார் கமல்.

வாசிப்பும் பாதையும்: பாரதிராஜாவிடம் சேரும் முன்பே ஜெயபாரதியின் ‘குடிசை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி முடித்திருந்தார். பாரதிராஜாவை விட்டுப் பிரிந்திருந்த அவருடைய முதன்மை உதவியாளர் பாக்யராஜை திரும்பவும் அழைத்துக்கொண்டு வந்து சேர்த்தவர் மனோபாலாதான்.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜைக் கதாநாயகனாக நடிக்க வைக்க பாரதிராஜா முடிவு செய்தபோது, அவருக்கு ‘லுக் டெஸ்ட்’ போட்டோ எடுத்தவரும் மனோபாலாதான். பாரதிராஜாவின் பட்டறையில் மனோபாலாவுக்கு மற்றொரு நெருக்கமான நண்பர் மணிவண்ணன்.

வாசிப்பதை நேசித்த மனோபாலா, அனந்துவும் கமல்ஹாசனும் கொடுத்த உத்வேகத்தில் கலைப் படங்களை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். ஆனால், சினிமா, வியாபாரமாக இருப்பதைப் புரிந்துகொண்டவர், காதலையும் குடும்பத்தையும் மையப்படுத்திய வணிகப் படங்களை இயக்குவது என்கிற பாதையைத் தேர்ந்தெடுத்தார். மனோபாலாவின் பாதை கமலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் பல காலம் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

பாரதிராஜாவிடம் தாக்கம் பெற்ற வகையில், கிராமத்து நிலவெளியை அவரைப் போலவே சித்தரிக்க வேண்டும் என்று முயன்றார் மனோபாலா. ஆனால், திரைக்கதையைத் துண்டாடும் பாடல்களும் நகைச்சுவை எனும் குறுக்கீடும் நுழைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் அவரது படங்களில் நிரந்தர சமரசங்களாக இடம்பிடித்தன.

கதைக்காகக் காலத்தைச் செலவழிக்காமல், யாரிடம் நல்ல கதை இருந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்துவதில் பாரதிராஜாவின் பாதையைப் பின்பற்றினார். இயக்குநராக அறிமுகமான ‘ஆகாய கங்கை’ படத்தில் நண்பரான மணிவண்ணனின் கதை, வசனத்தைப் பயன்படுத்திக்கொண்டார். ஓவியக் கல்லூரியில் படித்தபோது, திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட நட்பால் நண்பர்களான ராபர்ட் - ராஜசேகரன் இருவரையும் ஒளிப்பதிவாளர்களாக அமர்த்திக்கொண்டார்.

நட்சத்திர இயக்குநர்: மனோபாலாவுக்கு முதல் வெற்றி ‘பிள்ளை நிலா’. ஒரு முழுமையான ‘ஹாரர் த்ரில்லர்’ படமாக, வணிக வெற்றிக்கான கலவை தனக்குக் கைவரப்பெற்ற கலை என்பதை இப்படத்தில் காட்டினார். அ

வரது படங்களின் ராசியான கதாநாயகியாக ராதிகா வலம் வந்தார். ரஜினியை வைத்து இயக்கிய ‘ஊர்க்காவலன்’ மனோபாலாவை முன்வரிசைக்கு நகர்த்தியது. மோகன், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் நட்சத்திரஇயக்குநராக மாறினார்.

சிவாஜி - சரோஜா தேவியை வைத்து ‘பாரம்பரியம்’ என்கிற படத்தை இயக்கினார். வணிகக் கலவையை விட்டு வெளியேறாதவராக இருந்தாலும் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ போன்ற குறிப்பிடத்தக்க ‘ஃபேமிலி டிராமா’ படங்களைக் கொடுத்த வகையில் அவர் தேர்ந்த இயக்குநராக நினைவு கூரப்படுவார்.

ஆண்டுக்குப் பத்துப் படங்களிலாவது நடித்துவிடும் மனோபாலா என்கிற நடிகரே இன்றைய தலைமுறையின் நினைவில் நின்றாலும் அவர் ஒரு நட்சத்திர இயக்குநர். அதற்கு அவர் தயாரித்த ‘சதுரங்க வேட்டை’ படமும் ஒரு சான்று.

படங்கள் உதவி: ஞானம்

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in