நிருபர் டைரி: வெட்டி ஒட்டிய திறமை!

நிருபர் டைரி: வெட்டி ஒட்டிய திறமை!
Updated on
1 min read

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2006-ல் வெளியான படம் ‘சரவணா'. 'பத்ரா' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் மறுஆக்கம் அது. சிம்புவை வைத்துத்தான் மறுஆக்கம் என்று முடிவானவுடன், பலரும் அவர் படப்பிடிப்புக்குச் சரியாக வரமாட்டார் அவரைத்தான் கதாநாயகனாகப் போட்டிருக்கிறீர்களா என்று பலரும் கே.எஸ்.ரவிகுமாரைத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்கள்.

“அந்தக் கதைக்குச் சிம்பு மட்டுமே பொருத்தமாக இருப்பார். அவரால் மட்டுமே இப்படம் சாத்தியம், சொன்ன தேதிக்குள் படத்தை முடித்துக் காட்டுகிறேன் பாருங்கள்” எனக் கே.எஸ்.ரவிகுமாரும் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் பதில் கூறியவர், சொன்னபடியே முழுப்படத்தையும் முடித்துவிட்டார்.

எப்படி இந்த அதிசயம் நடந்தது?

தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்று, அதைத் தெலுங்கு தயாரிப்பாளரிடம் கொடுத்து, நிஜப்படத்தின் நெகடீவை வாங்கியிருக்கிறார். அதில் வரும் ரயில் செல்லும் காட்சிகள், கார்கள் துரத்தும் காட்சிகள் என அனைத்தையும் அதிலிருந்து வெட்டி, அப்படியே தமிழ்ப் படத்தில் இணைத்திருக்கிறார்.

தயாரிப்பாளருக்கு ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம் எனக் கேட்க "கார்கள் அதே கலரை உபயோகித்து சிம்பு ஓட்டி வருவது போன்றவற்றை எடுத்தேன். மற்ற துரத்தல் காட்சிகள் அனைத்தையும் தெலுங்கு படத்திலிருந்து வெட்டி, இதில் ஒட்டிவிட்டேன். சினிமாவில் அனைத்துமே சாத்தியம் தான்" என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். சொன்ன தேதியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப் பொருட்செலவில் படம் எடுத்துத் தரும் இயக்குநர்களின் பட்டியலில் கே.எஸ்.ரவிகுமார் தொடர்ந்து இடபெற்றுவருவதற்கு இதுபோன்ற சமயோசித புத்திசாலித்தனமே காரணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in