

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கிய பல படங்களில் முதன்மை உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் துரை கே. முருகன். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சீரன்’. “ஊரே சேர்ந்து ஒருவரை ஒதுக்கி வைக்கலாம். அவர் பெறும் கல்வி, அந்த ஊருக்கே அவரைத் தலைவர் ஆக்கிவிடும். அதற்கு இந்தப் படத்தின் நாயகன் ஓர் உதாரணம். அவரது சொந்த வாழ்க்கைக் கதையில், அவரையே நாயகனாக நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறேன்” எனும் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
இது எங்கே நடந்த கதை? - திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வு. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இப்படத்தின் நாயகன் ஜேம்ஸ் கார்த்திக். அவருடைய அப்பா ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். எளிய விவசாயி. அதைவிட முக்கியமான அவரது அடையாளம் அந்த ஊரின் காவல் தெய்வமாகிய கறுப்பசாமிக் கோயிலில் சாமியாடியாக இருந்தார்.
இது வழிவழியாக வந்த குடும்பப் பொறுப்பு. ஊரின் பஞ்சாயத்துத் தலைவருக்குக்கூட பரிவட்ட மரியாதை கிடையாது. ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சாமியாடிக்குத்தான் அந்தக் கௌரவத்தைக் கொடுப்பார்கள். ஜேம்ஸ் கார்த்திக்கின் அப்பா, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதனால், ‘சாமியாடியாக இருக்கும் தகுதி போய்விட்டது’ என்று கூறி அவரை ஒதுக்கி வைக்கிறார்கள்.
அவர் உடைந்துபோய்விடுகிறார். என்றாலும் வைராக்கியத்துடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் குடியேறி வாழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்து, வளர்ந்து, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் தொடங்கிப் புறக்கணிப்பை மட்டுமே பார்த்து வளர்ந்த ஜேம்ஸ் கார்த்திக், படித்துப் பட்டதாரி ஆகி, சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்கிறார். அங்கே வேலைசெய்து கிடைத்த பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து சிறு தொழில் ஒன்றைத் தொடங்குகிறார்.
அது பெரிதாக வளர, இன்று 400 பேருக்கு ஊதியம் கொடுக்கும் தொழிலதிபர் ஆகிவிட்டார். தன்னையும் தன் குடும்பத்தையும் புறக்கணித்த சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, தனது அப்பாவின் பூர்விக வீட்டில் துணிந்து குடியேறுகிறார். இப்போது ஊர் அவருக்குப் பரிவட்டம் அளித்துச் சாமியாடிப் பொறுப்பையும் கொடுக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது என்பதைத்தான் படமாக்கியிருக்கிறேன்.
இது கிட்டத்தட்ட ’காந்தாரா’ படத்தின் கதைபோல் உள்ளதே? - ‘காந்தாரா’ படத்தில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இருக்கும் தெய்விகத் தருணம் எவ்வளவு இயல்பாகச் சித்தரிக்கப்பட்டதோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தப் படத்தில் ஒரு சாமானியன் சாமியாடியாக மாறும் தருணத்தைச் சித்தரித்திருக் கிறோம்.
‘காந்தாரா’வில் பூர்வக் குடி மக்களின் நிலவுரிமைதான் பிரச்சினை. இதில் சாதிய ஒடுக்குமுறை. கல்வியால் ஒருவன் உயர்ந்தால், சாதியின் பெயரால் கடைபிடிக்கப்படும் அனைத்து இழிவுகளையும் களைந்து சமூகத்தை ‘சீர்’செய்து விடலாம் என்பதைக் காட்டியிருக் கிறோம்.
நீங்களே ஓர் அறிமுக இயக்குநர்.. நாயகனும் அறிமுகமென்றால் எப்படிக் கரை சேர்வது? - சுசீந்திரன் இயக்கி வரும் ஒரு படத்தின் இணைத் தயாரிப்பாளராக ஜேம்ஸ் கார்த்திக்கைச் சந்தித்தேன். அவரிடம் கதை சொல்லச் சென்றபோது நானும் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில் நட்பு உருவானது. அவர் தனது வாழ்க்கைக் கதையைச் சொன்னார். அதில் நிறைய சினிமா தருணங்கள் இருப்பதைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கைக் கதையில் நீங்களே நடியுங்கள்’ என்றேன். ஒப்புக்கொண்டார்.
படத்தில் அவர்தான் புதுமுகமே தவிர, கதாநாயகி இனியா, ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால், அருந்ததி நாயர் தொடங்கி அத்தனை பேரும் பிரபலமான நடிகர்கள். அறிமுகப் படத்திலேயே அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, தான் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார். எந்த ஊரில் கதை நடந்ததோ அங்கேயே ஊர் மக்கள் ஆதரவுடன் படமாக்கியிருக்கிறோம்.
- ரசிகா