

ஆ
மிர் கான் தயாரிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மல்யுத்தக் கலையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘தங்கல்’ படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஜாய்ரா வாசிமுக்கு இதில் முதன்மைக் கதாபாத்திரம். படத்தின் ட்ரைலருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. ஆமிர் கான் மாறுபட்ட தோற்றத்தில் ஒரு ‘கேமியோ’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை மெஹர் விஜ்ஜும் மற்றொரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்க ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து, பாடகியாக வேண்டுமென்ற கனவை சுமந்து அலைக்கழியும் ஓர் இளம்பெண்ணின் கதை. அந்தக் கனவைச் சுமப்பவராக வரும் ஜாய்ராவை ஊக்குவிக்கும் அமீர்கான், பிரபலமான ரியாலிட்டி ஷோ ஒன்றின் நடுவராக வந்து கலகலக்கவும் கொஞ்சம் கண் கலங்கவும் வைக்க இருக்கிறாராம். ஜாய்ராவின் பாடகி கனவுக்கு எதிராக எல்லா வகையிலும் குறுக்கே வருகிறார் அவரது தந்தை. தடைகளை மீறி சமூக ஊடகங்களில் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், ரகசியமாகப் பாடல் வீடியோக்களை பதிவுசெய்து, ஒரு வைரல் சூப்பர் ஸ்டாராக ஜாய்ரா எப்படி உருவாகிறார் என்பதை உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவை ததும்பவும் காட்டவிருக்கிறது இந்த ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’.
இசை முக்கியத்துவம் கொண்ட படமாக வெளியாகவிருக்கும் இதில், ஏழிலிருந்து எட்டு பாடல்கள் இடம்பெறும் என்று ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். ‘குலாம்’, ‘தாரே ஜமீன் பர்’, ‘தங்கல்’ பாடங்களில் பாடியிருந்த ஆமிர் கான், இந்தப் படத்தில் எந்தப் பாடலையும் பாடவில்லை. ஆனால் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் இசையில் உருவான ‘மேய்ன் கவுன் ஹூன்’ என்ற பாடல், இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
“அளப்பறியத் திறமை இருந்தும் வெளித்தெரியாத பல நிஜ சீக்ரெட் சூப்பர் ஸ்டார்களுக்கு தன்னம்பிக்கை தந்து அவர்களை பாலிவுட்டுக்கு இந்தப் படம் அறிமுகப்படுத்தும்” என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அத்வைத் சந்தன்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருந்தாலும், சமூக நோக்கில் தரமான கதைகளைக் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமீர் கான் தயாரித்திருக்கும் எட்டாவது திரைப்படம் இது. ‘லகான்’, ‘தாரே ஜமீன் பர்’, ‘தங்கல்’ போன்ற பெரிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டா’ருக்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது வரும் தீபாவளி தினத்தில் தெரிந்துவிடும்.