Last Updated : 08 Sep, 2017 09:27 AM

 

Published : 08 Sep 2017 09:27 AM
Last Updated : 08 Sep 2017 09:27 AM

மொழி கடந்த ரசனை 47: உன் விழிகள் என்னிடம் திரும்பி வரும்

ந்திப் பட பாடலாசிரியர்களின் ‘ஜலக்’ வரிசையில் மூன்றாவதாக நாம் காண இருக்கும் மஜ்ரூ சுல்தான் பூரியின் இயற்பெயர் அஸ்ரூர் உல் ஹசன் கான் என்பதாகும். உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற ஊரில், மதப்பற்று மிக்க பஷ்ட்டுன் குடும்பம் ஒன்றில் பிறந்த மஜ்ரூ, இளம் வயதிலேயே மதராசா பள்ளிக்கு அனுப்பட்டார். இவரின் தந்தை ஆங்கில அரசில் ஒரு போலீஸ் அதிகாரியாய் பணிபுரிந்தார். இருந்தும் மஜ்ரூவை மதராசா பள்ளியில் சேர்த்தது பின்னர் அரபு, உருது பாரசீக மொழிகளில் அவர் புலமை பெற்று விளங்குவதற்கு வழிவகுத்தது.

‘ஹக்கீம்’ என்று அழைக்கப்படும் யுனானி முறை மருத்துவராக வாழ்க்கையை தொடங்கிய மஜ்ரூ, தொடக்கம் முதலே முஷாயரா என்ற உருது கவியரங்குகளில் ஆர்வம் கொண்டு அதில் கலந்து கொண்டார். மருத்துவத்தில் அடையாத வெற்றியையும் புகழையும் கவிதைகள் பெற்று தரும் என்று நினைக்கவில்லை. தனது கவிதைகளுக்காக அவர் போற்றப்பட்ட தருணத்தில், மருத்துவத்தை விடுத்து மும்பைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அறிமுகமான ஏ.ஆர் கர்தர் என்ற படத் தயாரிப்பாளர் மஜ்ரூவுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார்.

ஆனால், இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை உடைய மஜ்ரூ சினிமாவுக்கு பாடல் எழுதமாட்டேன் என மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட மஜ்ரூவின் குருவாக விளங்கியவர் பிரபல உருது கஜல் பாடகரான ஜிகர் மொராதாபாதி. அவரது தலையீட்டால் தன் முடிவைப் பின்னர் மாற்றிக் கொண்ட மஜ்ரூ, தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கு இந்தி திரைப்பட உலகின் புகழ் மிக்க பாடல் ஆசிரியராக விளங்கினார்.

‘மக்கள் கவிஞர்’ என்று போற்றப்பாட்ட மஜ்ரூ, இந்தி திரை உலகின் அனைத்து இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பணிபுரிந்தவர். இருப்பினும் ஓ.பி. நய்யார் என்று அழைக்கப்பட்ட ஓம்பிரகாஷ் நய்யாரும் மஜ்ரூவும் சேர்ந்து பணி ஆற்றிய படங்களில் அமைந்துவிட்ட சில பாடல்கள் காலத்தை கடந்து நிற்பவை. மொழி புரியாதவர்கள்கூட இன்றும் கேட்டு மெய் சிலிர்க்கும் அத்தகு பாடல்களில் ஒன்று, ‘ஜாயியே ஆப் கஹான் ஜாயேகா, யே நஜர் லௌட் கே ஃபிர் ஆயேகி’ என்று தொடங்கும் இனிமையான பாடல் 1965-ல் வெளியான ‘மேரெ சனம்’ படத்தில் இடம்பெற்றது.

உச்ச ஸ்தாயியில் அனாயாசமாகச் சஞ்சரிக்கும் திறன் பெற்ற ஆஷா போன்ஸ்லேயின் குரல், பாட்டின் தொடக்கத்தில் உள்ள முகமது ரஃபியின் சிறு ஆலாபனை, மேற்கத்திய இசையும் இந்தியப் பாரம்பரிய இசையும் சங்கமிக்கும் வித்தியாசமான ஒ.பி. நய்யாரின் இசை அமைப்பு, இவை எல்லாவற்றையும் விஞ்சும் இப்பாடல் காட்சியில் தோன்றும் ஆஷா பரேக் என்ற இந்திபட நடிகையின் எழிலார்ந்த தோற்றத்துக்குப் பெருமை சேர்ப்பதுபோல் அவரால் வெளிப்படுத்தப்பட்ட நளினமான, வெட்கமும் காதலும் இரண்டறக் கலந்த இயற்கையான நடிப்பு ஆகிய அனைத்தும் இப்பாடலை அமரத்துவமாக்கிவிட்டன.

பாட்டின் பொருள்:

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

(உங்களுடைய இந்த விழிகள்)

மீண்டும் திரும்பி (என்னிடம் வந்துவிடும்)

தொலைவுவரை என் குரல் உங்களைப் பின் தொடரும்

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

எங்கு உங்களுக்கு என் காதல் நினைவு வருகிறதோ

அங்கே ஒரு முள் உங்களைக் குத்தும் பாருங்கள்

என் அலைபாயும் முகம் நோக்கி நீங்கள் திரும்பும்

அப்பொழுது ஒரு மரக்கிளை என் பக்கம்

போகச் சொல்லி உங்கள் வழியைத் தடுக்கும்

அமைதி கிட்டாது உங்களுக்கு எங்கும் என்

அன்பான உள்ளத்தைத் தவிர,

என்னைத் தவிர எவரும் இல்லை

உங்களிடம் காதல் கொள்ள

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

(உங்களுடைய இந்த விழிகள்)

மீண்டும் திரும்பி என்னிடம் வந்துவிடும்.

ஊடல் வகைச் சார்ந்த இந்தப் பாடலை கேட்கும்பொழுது, “என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா, நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா” என்று ‘குமுதம்’ படத்துக்காக மருதகாசி எழுதிய வரிகளும், விஜயகுமாரியின் குறும்பு பார்வையும் எஸ். எஸ். ராஜேந்திரனின் அசட்டு ஆமோதிப்பு நடிப்பும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x