

ஒரு பயந்தாங்கொள்ளி கதாநாயகன், காதலியின் கரம்பிடிப்பதற்காக துணிச்சல்காரனாக மாறுவதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘கதாநாயகன்’.
தாலுகா ஆபீஸில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் விஷ்ணு விஷால். சாலையைக் கடப்பது, கூட்டமான பேருந்தில் பயணிப்பது என சப்பையான விஷயங்களுக்குகூட பயந்து நடுங்குபவர். பக்கத்து வீட்டுப் பெண் கேத்ரின் தெரசா மீது காதல் வயப்படுகிறார். அவரோ, ‘‘பெற்றோருடன் வந்து பெண் கேள்’’ என்கிறார். அடுத்த நாளே அவரது வீட்டில் ஆஜராகும் விஷ்ணுவுக்கு அதிர்ச்சி. விஷ்ணு ஒரு அட்டைக்கத்தி வீரன் என்பதை ஏற்கெனவே அறிந்த கேத்ரினின் அப்பா, ‘‘வீரனுக்குதான் பெண்ணைக் கொடுப்பேன். உன்னைப் போன்ற கோழைக்கு அல்ல’’ என்று கூறி திருப்பி அனுப்புகிறார். கூனிக்குறுகும் விஷ்ணு விஷால், ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தாரா, இல்லையா? என்பது மீதிக் கதை.
தமிழ் சினிமா இதுவரை சித்தரித்த நிழல் உலக தாதாக்கள், ரவுடிகளைக் கிண்டலடித்த விதம் உயர் தரமான நகைச்சுவை விருந்து. ஆனால், மது அருந்திய பிறகுதான் பத்து ரவுடிகளை அடித்து வீழ்த்த கதாநாயகனுக்கு தைரியம் வருவதாகக் காட்டுவதை ஜீரணிக்கமுடியவில்லை. மேலும், நக்கலடிக்கும் கதாபாத்திரங்களை சிறுபான்மையினராகக் காட்டியதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை நுழைத்திருக்கிறார் இயக்குநர் த.முருகானந்தம். இரண்டு கேங்ஸ்டர் கும்பல்கள், விஷ்ணு - சூரி நகைச்சுவை, விஜய் சேதுபதியின் கவுரவ வேடம் என படத்தில் தனித்தனியாக பல டிராக்குகள் ஓடுகின்றன. அவற்றை இணைக்க இயக்குநர் பகீரதப் பிரயத்தனம் செய்தும், முழுமையான திரைக்கதையாகத் திரையில் விரியவில்லை.
சில தமிழ்த் திரைப்படக் காட்சிகள், பாடல்களை நினைவுபடுத்தி சிரிக்கவைத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், எந்த புதுமையும் இல்லாததால், வெறும் ‘கிச்சுகிச்சு’ காட்சிகளாக நகர்கின்றன. ஒருகட்டத்தில், மற்ற காட்சிகள் தரும் அயற்சியால், இந்த நகைச்சுவையே பரவாயில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர் ரசிகர்கள். முதல் பாதியில் விஷ்ணு - கேத்ரின் காதல் காட்சிகள், பாடல்கள் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன.
இரண்டாம் பாதியில் இந்த சித்ரவதை தொடராமல் ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சூரி, இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் விஜய் சேதுபதி ஆகியோர் காப்பாற்றி விடுகின்றனர். ஓஷோவின் கருத்துகளை விளக்கும் மருத்துவராக வரும் விஜய் சேதுபதி அதிக கைதட்டல் அள்ளுகிறார். இருட்டிலேயே அமர்ந்துகொண்டு சிகரெட் புகைத்தபடி சிவப்புநிற காண்டஸா வின்டேஜ் காரில் வரும் ‘சிங்கம்’ தாதா, அவர் புகைத்துவிட்டுப் போடும் சிகரெட்டை காலால் மிதித்து அணைக்கும் அவரது வலது கையான அருள்தாஸ், இறுதியில் ‘மைக் மோகனாக’ வந்து கர்ண கொடூர குரலால் தாக்குதல் நடத்தும் பாடகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் படத்தின் இறுதிவரை சிரிக்க வைக்கிறார்கள். குறும்பும் நக்கலும் கொப்பளிக்கும் வசனங்கள் ஓரளவு ஈர்க்கின்றன. ஷான் ரோல்டனில் இசையில் ‘உன் நினைப்பு பேபி’ பாடல் கவர்கிறது.
கேலி, கிண்டல், நையாண்டிப் படம்தான் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கும் இயக்குநர் அதை முழுமையாகத் திரையில் கொண்டுவரத் தவறியதால், காமெடியன் ஆகிவிட்டான் ‘கதாநாயகன்’.