

சினிமா எனும் கலை: பல்வேறு சிறு நாடுகளில்கூட சினிமா, கலையாக மாறி உலகின் கவனத்தை அவர்களின் பக்கம் திருப்பியிருக்கிறது. உதாரணம், ஈரான். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், சினிமா ஏன் கலையாக மாறாமல் இருக்கிறது என்கிற கேள்வியின் பின்னாலுள்ள காரணங்களைக் கூர்ந்து அவதானித்து அலசுகிறது இக்கட்டுரைத் தொகுப்பு.
தற்காலத் தமிழ் சினிமாவின் போக்கினை திரை விலக்கிக் காட்டும் 68 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கலையையும் வணிகத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து நல்ல சினிமாவைக் கொடுக்க விரும்பும் யாரும், தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதியுள்ள இந்நூலிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
l அருண் மோ, பக்கங்கள் 272, விலை ரூபாய்: 300/-
ஃபோகஸ்: பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுவரும் சினிமா தொழில்நுட்ப நூல் வரிசையில் மூன்றாவது புத்தகம் இது. திரையில் தோன்றும் பிம்பங்களில் எதன் மீது நாம் முதன்மையாகக் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவது ‘கேமரா ஃபோகஸ்’.
அத்தொழில்நுட்பத்தை வெகு எளிமையாகச் சொல்லித் தருகிறது இச்சிறு மொழியாக்க நூல். உரிய படங்களுடன் விதவிதமான ஷாட்களில் ஃபோகஸ் என்கிற தொழில்நுட்பம் எவ்வாறு துலங்குகிறது என்பதை விளக்கி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபோகஸ் வகைகளையும் கவனப்படுத்தியிருப்பது சிறப்பு.
பக்கங்கள்56, விலை ரூபாய் 60/-
அரசியல் பார்வையில் அண்மைக் காலத் தமிழ் சினிமா: தற்காலத் தமிழ் சினிமாவில் முற்போக்கும் வியாபாரம், அரசியல் பகடியும் வியாபாரம், சமூகப் பொறுப்புணர்வும் வியாபாரம், அதிகார அத்துமீறலும் வியாபாரம் என்றாகிவிட்டதை சமரசமில்லாமல் விமர்சனம் செய்கிறது இந்நூல்.
இருப்பினும் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகையும் அவர்கள் ஏற்கெனவே வணிக ரீதியாக நிறுவப்பட்டிருக்கும் சட்டகங்களைத் திரைக்கதையின் அரசியல் வழியாக எவ்வாறு உடைக்கத் தொடங்கியுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
l மணி ஜெயப்பிரகாஷ்வேல், பக்கங்கள் 80,விலை ரூபாய் 110/-
இம்மூன்று நூல்களும் பேசாமொழி பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: 098406 44916
ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத் தொகுப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை யாரைப் பற்றி எழுதினாலும் ஷாஜியின் லயம் மிகுந்த மொழியும் அதன்பின் இயங்கும் மனித மனமும் வாசகர்களுக்குப் பல பாதைகளைத் திறந்து விடுபவை.
சிறு வயது முதல் தாம் அவதானித்துக் கேட்ட இசையின் தாக்கம் தன்னை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என அவர் தனது ரசிக மனத்தின் சித்திரத்தை வரையும்போது அது வாசகனின் நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. இத்தொகுப்பில் அவர் இதுவரை எழுதியுள்ள 48 பெருங்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
l ஷாஜி, பக்கங்கள்: 600, விலை ரூபாய்: 660/-
திரையில் இலக்கிய எதிரொலி: திருக்குறள், ஔவையார் பாடல்கள், கம்பராமாயணம் தொடங்கி திருமந்திரம், பட்டினத்தார் பாடல்கள் வரை, காலத்தால் மூத்த இலக்கியப் பிரதிகளிலிருந்து, நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் பாடல்களுக்குப் பாடுபொருள்கள் எவ்வாறு இடம் பெயர்ந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரை பொருத்தமான சூழலுக்கு ஏற்ற இலக்கிய வரிகளின் சாரத்தை எளிமைப்படுத்திக் கொடுத்த திறனை ஆசிரியர் சிலாகித்திருக்கிறார்.
l ஆசிரியர் சீ.ப. சீனிவாசன், பக்கங்கள் 168, விலை ரூபாய் 200/-
இந்த இரு புத்தகங்களும் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: 9940446650