ஓடிடி உலகம்: உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை..

ஓடிடி உலகம்: உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை..

Published on

பிரதேசங்களால் பிரிந்திருக்கும் நம்மை உணர்வுகளால் இணைக்கும் புள்ளி சினிமா. இறப்பையும் மறைந்து போனவர்கள் பற்றிய மண்ணின் நம்பிக்கைகளையும் பிரதிபலித்தது ‘கோக்கோ’ என்கிற மெக்ஸிகோ நாட்டின் அசைவூட்டத் திரைப்படம்.

இறப்பையும் அதன் கொண்டாட்டங்களையும் பதிவு செய்திருக்கும் வெகு சில இந்தியப் படங்களில் மலையாளத்தில் வெளியான ‘ஈ.ம.யா’, தமிழில் ‘மதயானைக் கூட்டம்’, ‘ஏலே’, ‘நெத்தியடி’, கன்னடத்தில் ‘திதி’, தெலுங்கில் ‘c/o காஞ்சரப்பாலம்’, இந்தியில் ‘ராம்பிராசாத் கி தெஹ்ர்வி’ போன்ற ரத்தினங்களின் வரிசையில் கொண்டாட வேண்டிய மற்றுமொரு எளிய தெலுங்குப் படைப்பு ‘பலகம்’. அதன் பொருள் சுற்றம்.

‘உன்னுடைய குடும்பம் பற்றிய அவதானிப்புகள், உள்ளூர் அனுபவங்கள் கொண்டு எழுதிய உனது கதை என்பது, உன்னுடையது மட்டுமல்ல; அது உலகளாவிய கதையாக, அனுபவமாக மாறிவிடுவது ஒரு சந்தோஷ ஆச்சர்யம்!" என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா. அப்படி, தெலங்கானாவில், பல்லெட்டூரு எனும் சிற்றூரில் வாழும் குடும்பமொன்றில் நிகழும் ஒரு முதியவரின் இறப்பும் அது சார்ந்த நிகழ்வுகளும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர் மாந்தர்களையும் பற்றியதே இதன் கதை.

கார்களும் ஜீப்புகளும் பறக்க, பூமி அதிர, பௌதிக விதிகளுக்குள் அடங்காத சண்டைக் காட்சிகளோடு காட்டப்படும் படு செயற்கையான தெலுங்குப் படங்களுக்கு நடுவே, ஒரு சிறிய, இயல்பான கிராமத்தையும் அங்கு வாழும் மனிதர்களையும் கதாநாயகனாக ஆக்கியிருப்பது திரைக்கதையின் சிறப்பு.

நிறைவேறாத ஆசைகளுடன் ஒரு பெரியவர் இறந்துவிடுகிறார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூடிடும் அவருடைய சொந்த பந்தங்கள், அவர்களுக்கிடையிலான பிணக்குகளோடு ஒரு காதலையும் இணைக்கிறது திரைக்கதை. இந்த இணைப்பு வெகு இயல்பான நகைச்சுவையின் ஊடாக அழுத்தமான உணர்வுகளையும் கடத்துகிறது. அந்த ஊரின் காக்கைகளுக்கும்கூட கதையில் இடமுண்டு. புவியியல் எல்லைகளைத் தாண்டி எல்லாருக்கும் தொடர்புடையதாக மாறிவிடும் மாய வித்தைதான் இப்படத்தின் ஈர்ப்பான அம்சம்.

இப்படத்தின் இயக்குநர் வேணு எல்தந்தி தெலங்கானாவில் மாநிலத்தில் உள்ள சிரிசிலா என்கிற சிறு கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர். அங்கே பத்தாவது வகுப்பு வரை படித்து, காய்கறிக்கடை நடத்தி, நாடகங்களில் நடித்தவர். பின்னர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தவர். அவரிடமிருந்து இப்படியொரு அபூர்வமான படத்தை தெலுங்குத் திரையுலகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மெல்லிய அங்கதத்துடன் காதல் கதையாக தொடங்கி, மிகச் சரியான விகிதத்தில் நகைச்சுவை சாரம் மிகுந்த பாடல்களையும் இணைத்துக்கொண்டு, குடும்ப உறவுகளின் பிணக்குகளை உண்மைக்கு நெருக்கமாக ஒரு பூச்சரம்போல் கோத்துத் தந்திருக்கிறது, இக்கச்சிதமான கலவையின் உச்சமாக, உயிரை உருக்கிக் கரைய வைக்கும் ஒரு தேர்ந்த கிளைமாக்ஸ் பாடல் காட்சியைச் சித்தரித்த விதத்தில் தனித்து ஒளிர்கிறது. தெலுங்கு மண்ணின் பாரம்பரிய இசைக் கலைகளான ‘புர்ர கத’, ‘ஷார்த்த கத’ ஆகியவற்றைத் திரைக்கதைக்குள் கையாண்ட விதம் ரசனைமிகுந்த ரசவாதம்.

சைலியாக வரும் ப்ரியதர்ஷி, சந்தியாவாக வரும் காவ்யா கல்யாண்ராமைத் தவிர நடித்துள்ள மற்ற அனைவரும் புதுமுகங்கள்! முக்கியக் கதாபாத்திரங்களான சுதாகர் ரெட்டி, கொட்ட ஜெயராம், மகளாகவே வாழ்ந்து காட்டியிருக்கும் ரூபலட்சுமி ஆகியோருடன் இயக்குநர் வேணு டெய்லர் நர்சியாகவும் வந்து கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி, புகுந்து புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

சுந்தரத் தெலுங்கின் தெலங்கானா வட்டார வழக்கை அதன் ஆதார அழகுடன் பதிவு செய்திருக்கிறது படம். பீம்ஸ் செஸிரோலிவின் உயிரோட்டமான இசை, ஆச்சார்யா வேணுவின் மீறல்கள் ஏதுமற்ற இயல்பான ஒளிப்பதிவு, மதுவின் படத்தொகுப்பு ஆகியவை கதைக் களத்துக்கு மேலும் உயிரூட்டியிருக்கின்றன.

160க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகளைக் கொண்ட தெலங்கானாவின் பாரம்பரிய இசை வாணர்களான கொமுரம்மா - மொகுலையா பாடியுள்ள ‘தொடுதோ..’ பாடல் உள்ளம் தொட்டு ஊடுருவிச் செல்கிறது.

நன்றாக இல்லையென்றால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களே என்றாலும் கைவிடுவது, நன்றாக இருந்துவிட்டால் சின்ன பட்ஜெட் திரைப்படங்களைக் கொண்டாடுவது என்கிற குணத்தில் தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் தேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் ஒரு வட்டார வழக்கு, வழிபாடு, உணவு,, பாரம்பரியம் ஆகியன மாறுபடும் இத்திருநாட்டில் இன்னும் சொல்லப்படாத பிராந்தியக் கதைகள் ஏராளம் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வரும் எதிர்கால முயற்சிகளுக்கு ஊக்கமாக நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க வைத்திருக்கிறது விருதுகளுக்கு தகுதியுள்ள ‘பலகம்’

- டோட்டோ | tottokv@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in