என் பாடல்கள் பேசட்டும்! - பார்வதி மீரா பேட்டி

என் பாடல்கள் பேசட்டும்! - பார்வதி மீரா பேட்டி
Updated on
3 min read

இதழாளர் ஞாநியின் ‘பரீக் ஷா’, ’ஸ்லேட்’ ஆகிய நாடகக் குழுக்களில் பங்கெடுத்தவர் கவிஞர் பார்வதி மீரா. அரங்க அனுபவத்துடன் ஊடகத் துறையில் நுழைந்து பொதிகைத் தொலைக்காட்சியின் ‘என்னைக் கவர்ந்தவர்கள்’, ‘நம் விருந்தினர்’ போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக வலம்வந்தார்.

பின்னர், விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். கவித்துவம் மிகுந்த வரிகளுக்காகக் கவனிக்கப்பட்டு வருபவை இவரது திரையிசைப் பாடல்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தில் இவர் எழுதியுள்ள ‘கண்டோம் சொதந்திரம்’ என்கிற பாடல், ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

ஊடக, நாடகத் துறையிலிருந்து மெட்டுக்குப் பாட்டெழுதப் போன பின்னணியைக் கூறுங்கள்.. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு விரும்பிய வேலையைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி உண்டு. கேமரா கூச்சம் கிடையாது. நடிக்க வரும். அதனால் ஒரே நேரத்தில் பத்திரிகையில் எழுதுவது, தொலைக்காட்சி தொகுப்பாளராக பல துறை ஆளுமைகளை நேர்காணல் செய்வது, நவீன நாடகம் நடிப்பது என்று ஈடுபாட்டோடு அனைத்தையும் செய்தேன்.

மெட்டுக்குப் பாடல் எழுத வருகிறது என்பதைத் தாமதமாகவே அறிந்துகொண்டேன். அறிவுமதி என்கிற பெரும் ஆளுமை நான் எழுதிய பாடல் வரிகளையெல்லாம் பாராட்டி உச்சி முகர்ந்த பிறகு, ஏன் திரைப் பாடல்கள் எழுதக் கூடாது என்கிற எண்ணம் எழ, திரைத்துறையில் நுழைந்தேன்.

கவிஞராக இருப்பதும், பாடலாசிரியராக இயங்குவதும் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன? - ஏழாம் வகுப்பில் மகாகவி பாரதி, மு. மேத்தா ஆகிய இருவேறு தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்தது கவிதையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு முறை பள்ளியில் ‘கவிதை எழுதுக’ என்று பாடப் புத்தகத்தில் இருந்ததால் நான் மும்முரமாக எழுதினேன். ஆசிரியர்கள், சக மாணவர்களின் பாராட்டுகள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டின.

பின்னர் கல்லூரி வாழ்வில், பேராசிரியர் வசந்தாள் ‘கவிதைகள் எழுதினால் நாலு பேருக்குக் காட்டுங்க மக்களே..அப்போதுதான் அவை புடம் போடப்படும்’ என்று கடிந்து கொண்டார். அறிவுமதியின் ‘நட்புக் காலம்’ என்கிற புகழ்பெற்ற தொகுப்பை என் நண்பர்கள் பலருக்குப் பரிசளித்தேன்.

அப்போது இதே நட்பு சார்ந்த கவிதைகளை ஒரு பெண் பார்வையிலிருந்து யாரேனும் எழுதினால் புதிய கவிதைகள் கிடைக்கும் என்கிற பேச்சு எழுந்தது. அப்படித்தான் ‘இப்படிக்கு நானும் நட்பும்’ என்கிற எனது முதல் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் பிறந்தன. அதற்குப் பிறகு ‘இது வேறு மழை’, மாதவிடாய் பற்றிய ’அந்த மூன்று நாட்கள்’ என்று அடுத்தடுத்து தொகுப்புகளை வெளியிட்டேன்.

எனக்குக் கவிதைகள், பாடல் போல் அல்ல. இரண்டும் வெவ்வேறு. சூழலும் மெட்டும் தெரிந்தவுடன் பாடல் வரிகளைச் சரசரவென எழுதி விடுகிறேன். கவிதை அப்படியல்ல. அதை வடிக்க உந்துதல் தேவைப்படுகிறது. இன்னொரு நபரின், கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவது நாம் நாமாக இருப்பதைக் காட்டிலும் எளிமையாக இருக்கிறதோ என்னவோ! 2022 இல் என் தந்தை மறைந்த பிறகு நிறையக் கவிதைகளை எழுதினேன்.

பல இதழ்களில் அவை வெளிவந்தன. தற்சமயம் அப்படியொரு வலிமையான உந்துதல் இல்லாமலும் கவிதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். இது தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இன்று பாடலாசிரியர்களுக்கான இடம் தமிழ் சினிமாவில் இருக்கிறதா? - இருந்தும் இல்லாமல் இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், யூடியூப் பார்வைகள் நிறைய வர வேண்டும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிகம் இடம்பெற வேண்டும், நான்கு நிமிடங்களுக்கு மேல் பண்பலை வானொலியில் போட மாட்டார்கள் என்பதால் ஒரு பல்லவி ஒரு சரணத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நிதர்சனங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் இயங்க வேண்டியிருக்கிறது. உச்சியில் இருக்கும் புகழ்பெற்ற திரைத்துறை ஆளுமைகள் மனது வைத்தால் மட்டுமே இந்நிலை மாறும்.

அது போக இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் அவர்களது பெயர் உச்சரிக்கப்படுகிறது. பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அதில் பாடும் பாடகர்களும் இதனால் பயனடைகிறார்கள்.

ஆனால் பாடலாசிரியர்கள் நிலை? ஒரு திரைப்படத்தில் பாடல் எழுதி வெளியானதும் மகிழ்வதோடு நின்று விடுகிறது. பல நேரம் ‘லிரிக் வீடியோ’ என்று சொல்லப்படும் வரிகளுடன் கூடிய காணொளி வெளியிடப்படும் போது, நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் இவர்களையெல்லாம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘டேக்’ செய்பவர்கள்.

அதில் பாடலாசிரியரைக் கண்டு கொள்வதில்லை. திரை விமர்சனத்திலும் அரிதாகவே பாடல் வரிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் தெரிந்தேதான் பலரும் இங்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கிறோம், ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்றெல்லாம் தத்துவம் பேசிக்கொண்டே.

‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் படத்தின் ’தீம்’ பாடலை எழுதிய அனுபவம் எப்படியிருந்தது? - பெண் பாடலாசிரியர்களைப் பொது வாகக் காதல் பாடல்களுக்குத்தான் பலரும் அணுகுவார்கள். நானும் அதிகம் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். (கிளப் பாடல், கல்லூரி பிரிவு பச்சார விழா பாடல் உள்பட நான் எழுதிய ஒன்பது பாடல்கள் வெளிவரவேயில்லை என்பது வேறு விஷயம்) ஆனால் இந்தப் படத்தில் இந்திய சுதந்திரம் சார்ந்த, படத்தின் சாரத்தைச் சொல்லக்கூடிய பாடலை இயக்குநர் பொன்குமார், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் என்னை நம்பிக் கொடுத்தனர்.

அடக்குமுறைக்கு ஆள்பட்ட வெள்ளந்தி மக்களின் பாடல். இது போன்ற பாடல்கள் எனக்குக் கிடைப்பதெல்லாம் வரம். தற்போது ‘கண்டோம் சொதந்திரம்’ பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

தற்போது எழுதி வரும் படங்கள்? - அண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மல்லிப்பூ’ பாடல் புகழ் மது என் வரிகளைப் பாடியிருக்கிறார். கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ‘ஹிருதயம்’ மலையாளப் படத்தின் இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப்போடு பணிபுரிகிறேன். இன்னும் பல படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். அவை பற்றியெல்லாம் பேச வேண்டாம், பாடல்களே பேசும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in