கோலிவுட் கிச்சடி: மணி ரத்னத்தின் நாயகி

கோலிவுட் கிச்சடி: மணி ரத்னத்தின் நாயகி
Updated on
2 min read

சாமானிய மக்களின் மத்தியிலிருந்து எழுந்துவரும் தலைவர் கதாபாத்திரத்தில் ‘காலா’வில் ரஜினி நடித்துவருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் தோழனாக நாய் ஒன்று நடித்துவருகிறதாம். பெப்சி தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக நின்றுபோயிருந்த ‘காலா’ படப்பிடிப்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகேயுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் மாநகரக் குடிசைப்பகுதி போன்ற செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 30 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்கிறார்கள்.

திலீஸ் போத்தன் இயக்கிய ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தை ப்ரியதர்ஷன் இயக்க, பகத் பாசில் நடித்த மகேஷ் கதாபாத்திரத்தில் தமிழில் உதயநிதி நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘நிமிர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிளாக் பஸ்டராக வெற்றிபெற்றது ‘பிச்சைக்காரன்’ திரைப்படம். இந்தப் படத்தை இயக்கிய ‘பூ’ சசி, தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்குகிறார். அம்மா-மகன் பாசத்தைப் புதிய களத்தில் கொண்டுவந்த சசி, இதில் அக்கா- தம்பி உறவை மையப்படுத்தி திரைக்கதை எழுதியிருக்கிறாராம். இதில் தம்பியாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அக்கா கதாபாத்திரத்துக்கு யாரையும் இன்னும் தேர்வு செய்யாத நிலையில் படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் தற்போது நட்சத்திரத் தேர்வு நடந்துவருகிறது.

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பகத் பாசில், சிம்பு ஆகிய நான்குபேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இதில் தற்போது சிம்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படும் கதாபாத்திரத்தில் முதலில் தெலுங்குப்பட நாயகன் நானிதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நானி விலகிக்கொண்டதால் அந்த வாய்ப்பு தற்போது சிம்புவுக்குச் சென்றிருக்கிறது. இந்த நால்வருக்குமே கதாநாயகிகள் உண்டு. முதல் கட்டமாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். விரைவில் மேலும் இரண்டு கதாநாயகிகள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

தமிழில் தலைப்பு வைத்தால்தான் தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது கேளிக்கை வரிவிலக்கு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. ‘ஸ்பைடர்’, ‘ஸ்கெட்ச்’, ‘பார்ட்டி’, ‘ஜுங்கா’, ‘ஹவுஸ் ஓனர்’ என ஆங்கிலத் தலைப்புகள் அதிகமாகச் சூட்டப்பட்டு வரும் நிலையில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் புதிய படத்துக்கு‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற ஆங்கிலத் தலைப்பை அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in