

உள்ளாட்சியில் அதிகாரத்தைப் பிடிக்க, ஒரு சிறு நகரத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள சில குடும்பங்களின் கதையைக் காட்டுவதுபோல், மாநில அளவில், கடந்த கால, தற்கால அரசியலின் களத்தை நினைவூட்ட முயன்றுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். இணையத் தொடர்களின் தனித்துவம் அவற்றின் சுதந்திரமான கதை சொல்லும் முறை. ஆனால், ‘செங்களம்’ என்கிற இணையத்தொடர் ஒரு வணிக சினிமாவுக்குரிய சட்டகத்துடன் ஒவ்வொரு எபிசோடாக நகர்ந்து செல்கிறது.
ஜீ 5 ஓடிடி தளத்தின் ஒரிஜினல் வரிசையில் வெளியாகியுள்ள இத்தொடர், விருதுநகரின் உள்ளாட்சி அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை கதைக் களமாக்கியிருக்கிறது. விருதுநகர் நகர்மன்றத் தலைவர் பதவியை தங்களது ஏகபோக நாற்காலியாக 40 அண்டுகளாக கைவசம் வைத்திருக்கிறது ஒரு குடும்பம். அப்பதவியில் எப்பாடு பட்டாவது ஒட்டிக்கொண்டிருந்த தலைவர், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பின் இறந்துவிடுகிறார்.
அதன்பிறகு யாரை அந்த இடத்தில் அமர வைப்பது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறார் அக்குடும்பத்தின் பெரியவரான சிவஞானம். என்றாலும் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவரது முடிவுக்கு அவருடைய மருமகள் சூர்யகலா ஆப்பு வைக்கிறார். தன்னுடைய தோழி நாச்சியார் உதவியுடன் பல தகிடு தத்தங்கள் செய்து, நகர்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது கணவர் அமர்ந்த நாற்காலியில் உட்காருகிறார்.
ஆனால் அதுவும்கூட நிலைக்காமல் போகிறது. சூர்யகலா இல்லாத இடத்துக்கு அவருடைய தோழி நாச்சியார் வருகிறார். அதை அவர் எப்படிச் சாதித்தார்.. சூர்யகலா எதற்காக யாரால் கொல்லப்பாட்டார், அதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதெல்லாம் மீதிக் கதை.
முதல் மூன்று தொடக்க எபிசோட்களை பார்க்கும் பொறுமை அமைந்துவிட்டால், நான்காவது எபிசோடிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்கும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடரில் வரும் கதாபாத்திரங்கள், அரசியல் கொலை, குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்ததுபோல் இருக்கிறதே என்று உணர்ந்தால் அதுதான் இத்தொடரின் பலமும் பலவீனமும். வசனங்கள் ரசிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளன.
கலையரசன், வாணி போஜன் ஆகியோர் ரசிக்கும் விதமாக நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். வாணி போஜன் தனது முந்தைய கதாபாத்திரங்களை மறக்கடிக்கும் விதமாக உடல்மொழியில் காட்டும் வேறுபாடும் முகபாவங்களும் அட போட வைக்கின்றன.
குடும்பப் பெரியவர் சிவஞானமாக நடித்துள்ள சரத் லோகிஸ்தா சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே ‘கிங் மேக்கர்’ ஆக நடிப்பது எடுப்பட்டுள்ளது. நாச்சியாராக வரும் ஷாலியின் துரோக நடிப்புக் கச்சிதம். இவர்களுடன் விஜி சந்திரசேகர், வேலராமமூர்த்தி ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
வாரிசு அரசியல், அதில் நட்பு, துரோகம், குடும்ப சென்டிமென்ட் என கலந்துகட்டி அரசியல் த்ரில்லர் தர முயன்றிருந்தாலும் இணையத் தொடருக்கான திரைக்கதையாக்கத்திலிருந்து வெளியே நிற்கிறது இத்தொடர்.