Last Updated : 22 Sep, 2017 10:08 AM

 

Published : 22 Sep 2017 10:08 AM
Last Updated : 22 Sep 2017 10:08 AM

தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு...

கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான்.

‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்சில் ஸ்கெட்ச் ஓவியமாகக் காட்டப்பட்டு, அது மெல்ல மெல்லத் திரைப்படமாக மாறும். இந்த ‘சேஞ்ச் ஓவ’ரின் பின்னணியில் இசைக்கப்பட்ட ஒலித்துணுக்கு, கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) ஒலித் தொகுதியிலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒன்று. நீதிமன்றக் காட்சியைத் தொடர்ந்து திரையில் விரிந்த டைட்டில் பாடல்.. ‘விக்ரம்ம்…. விக்ரம்ம்ம்ம்ம்… நான் வெற்றிபெற்றவன்… இமயம் தொட்டுவிட்டவன்.. பகையை முட்டிவிட்டவன்’ என, கமல் பாடிய இந்தப் பாடலை, ‘சைடு ஸ்பீக்கர்கள்’ பொருத்தப்பட்ட திரையரங்குகளில் கேட்டபோது, இளைஞர்கள் ஒரு சின்ன திடுக்கிடலோடு எழுந்து நின்று, விசிலடித்து ஆர்ப்பரித்துக் கைதட்டினார்கள். அது கமல், இளைராஜா ஆகிய இரு ஆளுமைகளுக்காக மட்டுமே அல்ல; ‘விக்ராம்ம்ம்ம்…’என்ற அந்தக் குரல் இரண்டாவது முறையாக எக்கோ எஃபெக்டுடன்,‘மெட்டல் வாய்ஸாக’ உலோகக் குரலில் ஒலித்தது. இதை எந்தப் பாடகரும் அப்படிப் பாடிவிட முடியாது. தமிழ் சினிமா இசையில் ஒலிகள் மட்டுமல்ல, குரலும் கணினி நுட்பத்தை உள்வாங்கி ஒலித்தது அதுவே முதல் முறை. ‘விக்ரம்’ படம் புதுமையான விருந்தாக இருக்கப்போவதற்கு அந்தப் பாடலின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்றிருந்த எலெக்ட்ரானிக் வாத்திய ஒலிகள் கட்டியம் கூறின. அதற்காகவும்தான் திரையரங்கில் அத்தனை ஆர்ப்பரிப்பு. ‘விக்ரம்ம்ம்..’ பாடலில் மட்டுமல்ல, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’பாடலிலும் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற ஒலிகளில் பெரும்பாலானவை கணினியில் உள்ளீடு (Feeding) செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) இசையிலிருந்து தொகுக்கப்பட்டவைதான்.

எதிர்பாராமல் அமைந்த பொருத்தம்

கமலிடம் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. வெகுகாலம் கழித்து நடிக்க வேண்டிய, எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து விடுவார். எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதல் ஆளாகத் தனது படங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிடுவார். அப்படித்தான் பல புதுமைகளை ‘விக்ரம்’ படத்தில் பயன்படுத்தினார். அவற்றில் கம்ப்யூட்டர் இசை முக்கியமானது.

தமிழ் அறிவியல் புனைவுக் கதைகளின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா, எழுதிய நவீன அறிவியல் தொடர்கதையில் தன் கனவுப் படத்துக்கானத் திரைக்கதையைக் கண்டு அவரை எழுத வைத்தார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்க, ‘ப்ளூ மேட்’ திரையின் பின்னணியில் பல காட்சிகளை முதல் முறையாகப் படம்பிடித்தார். இப்படிப் பல ‘முதல்’களைச் செய்த கமல், கம்ப்யூட்டர் எனும் சாதனத்தை முதன்முதலில் திரையில் காண்பித்ததும் இந்தப் படத்தில்தான். கம்ப்யூட்டர் காட்டப்பட்ட படத்தில், கம்ப்யூட்டர் இசை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது எவ்வளவு பொருத்தம்!

இசைஞானியிடம் ஓர் இளைஞர்

எந்த வகைப் பாடலாக இருந்தாலும் அதில் இசையின் துடிப்பை பொங்கிவரும் ஒரு நீரூற்றைப்போல உணரச்செய்துவிடும் ‘இசைஞானி’யின் படைப்பாற்றல். அதிலிருந்து விலகாமல், ஆனால் திடீரென்று ராஜாவின் இசை டிஜிட்டலாக மாறி ஒலித்ததைத் தமிழகம் ஆச்சரியமாகக் கேட்டு ரசித்தது. அடுத்து ‘புன்னகை மன்னன்’படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையிலும் பின்னணி இசையிலும் ராஜா நவீன இசையைத் தந்து ஆச்சரியப்படுத்திபோது, அவரிடம் ஆர்.எஸ். திலீப்குமார் என்ற இளைஞர், கீபோர்ட் பிளேயராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர்தான் இன்றைய ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘புன்னகை மன்னன்’ படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற புதுமையான ஒலிகளை ராஜா எப்படி உருவாக்கினார்? ரஹ்மான் பயன்படுத்திய ‘ரோலேண்ட் எஸ்770’(Roland S770) என்ற சேம்பிளர் கருவியிலிருந்து தேர்வுசெய்து அவற்றை தன் கற்பனைக்கு ஏற்ப மாற்றினார். சேம்பிளர் என்பது பல வாத்தியக்கருவிகளின் ஒலி மாதிரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும் புராசஸர் கொண்ட ஒரு ஹார்டுவேர் கருவி. இப்படி சேம்பிளர் கருவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிகளை நம் கற்பனைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அந்த ஒலிகளை எப்படி அணுகுவது? அதற்குள் நுழைய (input) பாலம் போன்ற ஒரு ஊடகம் தேவை. அந்தப் பாலம்தான் ‘மிடி’ கீபோர்டு.

அது என்ன ‘மிடி கீபோர்டு? ‘மிடி’ கீபோர்டு என்பது இசைக்கருவிபோல் காட்சியளிக்கும் ஒரு டம்மி கீபோர்டு. இதை வாசித்தால் ஒலி வராது. ஆனால் இதைக் கேபிள் மூலம் சேம்பிளர் உடன் இணைத்து, சேம்பிளரின் நினைவகத்தில் (Memory card) பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வகை வாத்திய ஒலியையும் எளிதில் அணுகி, உங்கள் கற்பனைக்கு ஏற்ப வாசிக்கவும் மாற்றி அமைக்கவும் முடியும். ‘மிடி’ கீபோர்டில் ஒரு ‘பியானோ’வில் இருப்பதுபோல் கருப்பு-வெள்ளை கட்டைகள் (Keys) இருக்கும். இந்தக் கட்டைகளில் தன் விரல்களை இழையவிடும் இசை அமைப்பாளர், எப்போதும்போல் தனது கற்பனையின் ஜாலத்தைக் காட்டுகிறார்.

இசையமைப்பாளர் கம்போஸ் செய்த ஒலி மாதிரிகளை, சேம்பிளரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வாத்தியமாகவும் ஒலிக்கச் செய்யலாம். பியானோ பட்டன்களின் வழியே நீங்கள் தவில் வாசிக்கலாம், வயலின் வாசிக்கலாம். கிட்டார் வாசிக்கலாம். இப்போது கூறுங்கள் ‘மிடி’ கீபோர்டு (MIDI-Musical Instrument Digital Interface) இசையுலகத்துக்கு அறிவியலின் ஆச்சரியமான பரிசுதானே. ஆக ‘மிடி’ கீபோர்டை கணினி இசையின் வரம் என்று வர்ணிக்கலாம்.

வாத்திய ஒலிகள் சேமிக்கப்பட்ட ஒரு கணினி (சேம்பிளர்) இருந்தால் போதுமா…கணினி இசையை உருவாக்க கற்பனைத் திறன் தேவைப்படாதா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும்முன் இசைஞானி கூறுவதைக் கேளுங்கள், “இன்றைய இளம் இசையமைப்பாளர்களே… கம்ப்யூட்டர் இசையைத் தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்”. ஏன் இளையராஜா இப்படிப் பேசினார்…

ரகசியம் மேலும் உடையும்

தொடர்புக்கு tajnoormd@gmail.com

----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘வம்சம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். இதுவரை 20-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளைச் சிதைக்காமல், கதைக்கான இசையை நவீனம் குழைத்துத் தருவதில் வல்லவர். அடிப்படையில் மல்டி மீடியா பட்டதாரியான இவர், ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் தொடங்கி ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். திரைப்படங்களுக்கும் விளம்பரங்களுக்கும் இசையமைத்தாலும் இன்னொருபக்கம் நவீனத் தமிழ்க் கவிதைகள், திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆகிய சங்க இலக்கியப் பாடல்களுக்கும் இசையமைப்பதில் அதிக ஆர்வமுடன் இயங்குபவர். இசையைச் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்திவருவதற்காக திராவிடர் கழகத்தின் ‘பெரியார் விருது’ பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x