

‘ஏழிசை வேந்தர்’ என்று கொண்டாடப்பட்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவர் சிறுவனாக இருந்தபோது, வீட்டின் அருகில் ஓடும் உய்யக்கொண்டான் ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, பாடல்களைப் பாடிப் பழகுவார். அதைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி ஒருவர், “இவரது குரலில் என்ன தங்கச் சுரங்கமா இருக்கிறது?” என்று வியந்துபோய் பாராட்டியுள்ளார்.
சிறுவனாக இருந்தபோதே இப்படியான பாராட்டுகளைப் பெற்ற பாகவதர், பின்னாளில் தமிழ்ச் சினிமாவின் முதல் உச்ச நட்சத்திரக் கதாநாயகனாக உயரம் தொட்டது தனிவரலாறு. ரஸிக ரஞ்சனி சபா நடத்திய ‘ஹரிச்சந்திரா’ நாடகத்தில் லோகிதாசனாக சிறு வயதில் மேடையேறிய பாகவதர், கூட்டத்தை ஈர்க்கும் ராஜபார்ட் நடிகராக நாடகத்திலும் அதில் கிடைத்த புகழின் வழியாக சினிமாவிலும் கால் பதித்து, வரிசையாகப் பல வெற்றிகளைக் கண்ட நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார்.
1934இல் வெளியான ‘பவளக்கொடி’ தொடங்கி, ‘நவீன சாரங்கதாரா’, ‘அம்பிகாபதி’, ‘ஹரிதாஸ்’, ‘அம்பிகாபதி’, ‘திருநீலகண்டர்’, ‘அமரகவி’ என மொத்தம் 14 படங்களில் நடித்தார். அவற்றில் ஹரிதாஸ் 110 வாரங்கள் ஓடியது. 133 பாடல்களைத் தனித்தும், 30 பாடல்களைப் பிறரோடு இணைந்தும் பாடினார்.
தோற்றம், நடிப்பு, பாட்டு என எல்லா அம்சங்களிலும் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக வலம்வந்த பாகவதரின் வாழ்வில் திடீரென இருள் சூழ்ந்தது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செயப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டனிலுள்ள பிரிவியூ கவுன்ஸிலில் மேல்முறையீடு செய்து, 1947 ஏப்ரல் 25 அன்று நிரபராதிகள் என விடுதலையானார்கள். தமிழ் சினிமாவின் தொடக்கக் காலத்திலேயே பல சாதனைகளைப் படைத்திட்ட எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் கள ஆய்வுகள் வழியாகத் திரட்டியிருக்கிறார் கார்முகிலோன்.
அவற்றை சரியான வரிசையில் தொகுத்து எழுதி, பொது வெளியில் பலரும் அறிந்திராத, பல விடுப்பட்ட பக்கங்களை சுவாரசியமான செய்திகளோடு ‘எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கைச் சரித்திரம்’ என்கிற நூலாகத் தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் கார்முகிலோன்.
பாகவதரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தொடக்க காலத் தமிழ் சினிமாவின் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் தேவையான பல தகவல்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. மேலும் எம்.கே.டி என்கிற நட்சத்திர நாயகனை மனித நேயமிக்க மனிதராகவும் நமக்கு அறிமுகம் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறது.
எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கைச் சரித்திரம்
முனைவர். கார்முகிலோன்
பக்கங்கள்: 212 விலை: ரூ.300
வெளியீடு: மின்னல் கலைக்கூடம், சென்னை.
செல்: 98414 36213
- மு.முருகேஷ்