

இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது இசை. கேட்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பத்தை கொடுக்கவல்லது இசை ஒன்று தான். இந்துஸ்தானி இசை, கர்னாடக இசை இரண்டிலும் உள்ள இனிமை என்கிற அம்சத்தை தனதாக்கிக்கொண்டு கூடவே மேற்கத்திய இசையின் நயங்களையும் பயன்படுத்திக்கொண்ட காரணத்தால் திரையிசை வெகுஜன ரசிகர்களையும் தன் வயப்படுத்திக்கொண்டு விட்டது.
திரையிசை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய பாணியைக் கையாண்டு மக்களின் செவிகளில் இசைத்தேன் வார்த்த காரணத்தால் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, பிரதேசம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அவர்களை அடைக்க முடியவில்லை. இல்லாவிட்டால் ஒரு கண்டசாலாவும், எஸ். ராஜேஸ்வர ராவும், வி. தட்சிணா மூர்த்தியும் தமிழ் திரை இசைக்கு காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைத் தந்திருக்க முடியாது. (அவை அளவில் குறைவாக இருந்தாலும் கூட ) இந்த வரிசையில் கன்னடத் திரை உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு இசை அமைப்பாளர் எழுபதுகளில் தமிழ்ப் பட உலகில் அழுத்தமாக தனது பெயரைப் பதித்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தான் விஜயபாஸ்கர்.
பஞ்சு அருணாசலம் ஒரு திரைக்கதை வசன கர்த்தாவாக பிரபலமடைந்து வந்த நேரத்தில் எஸ்.பி. முத்துராமனின் தொடக்க காலப் படங்களுக்கு எழுபதுகளில் இசை அமைக்க கன்னடத்தில் இருந்து வந்தவர் தான் விஜயபாஸ்கர். அடிப்படையில் இவர் ஒரு தமிழர். மும்பையில் பிரபல இசை அமைப்பாளர்களாக இருந்த நௌஷத் அலி, மதன் மோகன் ஆகிய இருவரின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் .
கன்னடத் திரை உலகில் “தீம் மியூசிக்” என்கிற அம்சத்தைக் கொண்டு வந்த பெருமை இவரையே சேரும். தமிழில் எழுபதுகளில் கிட்டத்தட்ட பத்துப் படங்களுக்கு இசை அமைத்துவிட்டு மீண்டும் கன்னடத்துக்கே சென்று விட்டார் என்றாலும் அந்தப் பத்துப் படங்களின் மூலம் இவர் கொடுத்துச் சென்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நல் முத்துக்கள். அந்த முத்துக்களில் ஒன்றுதான் இந்த வாரம் நாம் காணவிருக்கும் பாடல்.
வருடம் 1975. பஞ்சு அருணாச்சலத்தின் கதை வசனத்தில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு மினிமம் பட்ஜெட் படம் பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது. நவரசத் திலகம் முத்துராமன், சுஜாதா, விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன், அசோகன், எம்.என். ராஜம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படத்தால் நடிகை சுஜாதா புகழேணியின் உச்சத்திற்கு உயர்ந்தார்.
அந்தப் படம்தான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’.
திருமணத்திற்கு முன்பே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தவறிழைத்த ஒரு பெண்ணுக்கு இனிமையான இல்லற வாழ்வு அமைகிறது. ஆனால் நிம்மதியாக வாழ முடியாதபடி அவளது கடந்த கால வாழ்வை அறிந்த அவளது தோழியின் கணவன் அவளை மிரட்டிப் பணம் பறிக்கிறான். இந்தச் சூழலில் முன்னாள் காதலன் அவளது வீட்டிலேயே கார் டிரைவராக வேலை பார்க்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர்களது இல்லத்தில் தங்களது மணநாள் கொண்டாட்டம்.
அன்பே வடிவான அவளது கணவன் அந்த நாளில் தனது இனிமையான தாம்பத்திய வாழ்வைப்பற்றி ஒரு பாடல் பாடுகிறான். அந்தப் பாடலில் அவன் மனைவிக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். அவள் மீது தான் கொண்ட அன்பும் காதலும் நிலையானது என்று அவளுக்கு உணர்த்தவேண்டும்.
இப்படியான பாடல் காட்சிக்கு பாடல் புனைவது என்றால் கவியரசரை வெல்ல யாராலுமே முடியாதே!.
அருமையாக அவர் புனைந்த வரிகளுக்கு அற்புதமாக இசைக் கோர்வைகளை விஜய பாஸ்கர் வார்த்தெடுக்க பாடலை இசைத்தவர் ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள்.
மென்மையும், அதே சமயம் இனிமையும் கலந்து எஸ்.பி.பி. அவர்கள் உச்ச ஸ்தாயியை எட்டும்போது அந்தக் குரலில் தெறிக்கும் ஒரு மணியோசை நயம் மனதை தொட்டு அசைக்கத் தவறாது. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது தலை சிறந்த பத்துப் பாடல்களை வரிசைப் படுத்தினால் கண்டிப்பாக இந்தப் பாடல் அவற்றில் ஒன்றாக இருக்கும். இனிமையான இசைக்கருவிகளில் மிகப் புனிதமான இடத்தைப் பெற்றது வீணை. தனது தாம்பத்தியத்தை புனிதமான வீணைக்கு நிகராக வைத்து பாடலை ஆரம்பிக்கிறான் அந்தக் கணவன். பாடலுக்கான முகப்பிசையில் (prelude) வயலின்கள் மத்யமஸ்ருதியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல லேசாக உயர்ந்து அப்படியே கீழிறங்கி பல்லவிக்கு இடம் கொடுக்கும் அழகே தனி.
‘சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது நாதம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை’
புனிதமான தாம்பத்திய வாழக்கை என்ற வீணை வெளிப்படுத்தும் நாதம் சந்தோஷம் என்பது. வேண்டாத சந்தேகங்கள் அதன் அடிப்படையில் வெளிப்படும் முரண்பாடுகள் போன்ற சலனங்கள் அதில் இல்லை. இப்படிக் கூறுவதன் மூலம் தன் மனதில் அப்படிப்பட்ட வேண்டாத எண்ணங்களுக்கு இடமே இல்லை என்று தனது மனைவிக்கு மறைமுகமாக நம்பிக்கையை ஊட்டி ஒரு தைரியம் தருகிறான் அந்தக் கணவன்.
விஜயபாஸ்கர் லாவகமாக முதல் வரியோடு அடுத்த வரியை கிட்டாரின் சிறு மீட்டலுடன் ரம்மியமாக நயமாக இணைத்திருக்கும் அழகே தனி.
தொடரும் இணைப்பிசையில் வயலின்களின் லாவகமான மீட்டல்களும், பின்னோடியாக தொடரும் கிட்டாரின் நயமான இசையும், குழலிசையும், தொடர்ந்து கிட்டாரின் மீட்டலுடன் பாடலுக்கு இடம் கொடுத்து ஒதுங்கும் லாவகம் மதன் மோகன் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் விஜயபாஸ்கர் என்பதை அழகாக உணர்த்துகிறது.
தொடரும் முதல் சரணத்தில் அவனது மனநிலையை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் கவிஞர். அதே நேரம் காட்சியில் இடம்பெற்ற அவனது மனைவி, கடந்த கால வாழ்வின் அங்கமாக இருந்த காதலன் இருவரின் மன உணர்வுகளையும் விஜய பாஸ்கரின் இசை உணர்த்திச் செல்வது வியக்க வைக்கிறது.
‘புதிராக மறைக்கக்கூடிய எதுவுமே இல்லாமல் ஒரு திறந்த புத்தகத்தைப்போல இருக்கும் என் வாழ்க்கை ஆசைக்கிளியான என் மனைவிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் ஒரு கூடு’ என்கிறான் அவன்.
அன்புக் கிளி என்று அவன் சொல்லி இருந்தால் அது அவனது காதலைக் குறிக்கும். ஆனால் ஆசைக்கிளி என்றால்.. ஏற்கெனவே ஒருவனின் ஆசைக்கு பலியாகி வாழ்வை இழந்து நின்ற கிளியான உனக்கு பாதுகாப்பான ஒரு கூடாக எனது வாழ்க்கையையே அமைத்துக்கொடுத்திருக்கிறேன். நீ எந்தக் கவலையும் இல்லாமல் இதில் காதல் கதைகள் பாடி எந்த உண்மையையும் மறைக்காமல் பரிமாறிக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அவளுக்கு மட்டும் புரியும் வண்ணம் உணர்த்துவதுபோல கவியரசர் படைத்திருக்கும் காவிய வரிகளுக்கு அற்புதமான இசையால் விஜயபாஸ்கர் உயிரூட்ட தனது குரலால் நமது ஆன்மாவிற்குள் கடத்துகிறார் பாலு.
‘என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கதைகள் பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை”
- என்ற வரிகளுக்கு பிறகு பல்லவியின் இறுதி வரியான ‘மணம், குணம் ஒன்றான முல்லை” என்ற வரிகளை தொட்டுக்கொண்டு காற்புள்ளிகளுக்குக் கூட கிட்டாரின் மீட்டலால் ஒரு அழுத்தம் கொடுத்து பல்லவியின் ஆரம்ப வரிகளோடு சரணத்தை முடிக்கிறார் விஜயபாஸ்கர். அடுத்தடுத்த சரணங்கள் முழுவதும் இதே அமைப்பைத்தான் பயன் படுத்தி இருக்கிறார் அவர்.
தொடரும் இணைப்பிசையில் குழலிசைக்கு பிரதான இடம் கொடுத்து கிட்டாரின் நயமான மீட்டல் இசையுடன் மனதை மீட்டுகிறார் விஜயபாஸ்கர்.
என் வாழ்வில் இவள் வந்து இணைந்ததால் இன்னும் சிறப்பாகவே என் வாழ்க்கை செல்கிறது என்று மற்றவர்களுக்கு சொல்வதுபோல அவளுக்கும் மகிழ்ச்சியையும் தெம்பையும் கொடுக்கிறான் அவன்.
இதோ கவியரசரின் காப்பிய நிகர் வரிகள்:
‘என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு
இதில் மூடும் திரைகள் இல்லை.
மணம் குணம் ஒன்றான முல்லை..’
முடிவுச் சரணத்திற்கு முன் வரும் இணைப்பிசையை முதல் இரண்டு சரணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக வயோலா, சிதார், வயலின்களின் பிரயோகங்கள் என்று தொடர்ந்து கிட்டாரின் சிறு மீட்டலுடன் சரணத்திற்கு வருகிறார் விஜயபாஸ்கர்.
தொடரும் இறுதிச் சரணத்தில் ‘என் காதலுக்கு உரிய ராணியான இவள் என்னை மணப்பதற்கு முன்பு வேண்டுமானால் வேறு ஒருவனை நினைத்திருக்கலாம். ஆனால் என்னை மணந்த பிறகு காலம் முழுவதும் இவள் மனம் எனக்கு மட்டும்தான். எங்களைப்போன்ற ஜோடி வேறு யாரும் இருக்க முடியாது’. என்று அவள் விழாவில் கூடி இருப்பவர்களுக்குச் சொல்வதைப்போல அவள் மனதிற்கு ஒரு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறான் அந்த அன்புக் கணவன்.
இதோ அந்த வரிகள்.
‘‘தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்’
என் காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இது போன்ற ஜோடி இல்லை.
மணம் குணம் ஒன்றான முல்லை’.
வீணையின் சுனாதம் போல இனிமை மேலோங்கி இருக்கும் அற்புதப் பாடல் இது.
முப்பது வாரங்களாக நான் தேர்ந்தெடுத்து உங்கள் பார்வைக்கு வைத்து நல் முத்துப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் மனதை ஆக்கிரமித்த பாடல்கள்தான்.
நன்முறையில் பகிர்ந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த ஹிந்து தமிழ் திசை நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் – பி.ஜி.எஸ். மணியன்
- பி.ஜி.எஸ்.மணியன்
திரை (இசைக்) கடலோடி தொடர் 30 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது