

நம் வாழ்வின் மகிழ்ச்சி, காதல், கோபம், கழிவிரக்கம், இயலாமை, வீரம், ஊடல், கூடல், பிரிவு, சோகம், நிலையாமை எனப் பல உணர்ச்சிகளுக்குமான பாடல்களை நமக்காக பாடிவிட்டுச் சென்றிருப்பவர் டி.எம். சௌந்தரராஜன். ‘தொகுளுவ’ என்னும் குடும்பப் பெயரும் தந்தை பெயரும் சௌந்தரராஜன் பெயருக்கு முன்னொட்டாக (டி.எம்.எஸ்.) அமைந்தன.
சிறுவயதிலிருந்தே இசையின்மீது தணியாத தாகத்துடன் இருந்தவர் டி.எம்.எஸ். பள்ளி இறுதிவரை மட்டுமே படித்த அவர், அதன்பின் இசையை முழுநேரம் படிக்கத் தொடங்கினார். காரைக்குடியைச் சேர்ந்த ராஜாமணியிடம் கர்னாடக இசையை ஆழமாகக் கற்ற டி.எம்.எஸ்., மேடைகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தார். அந்நாளில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடையில் பாடித் தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
நண்பரால் கிடைத்த வாய்ப்பு: 1950இல் சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் இடம் பெற்ற ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’ என்னும் பாடலைப் பாடி திரைப்படப் பின்னணிப் பாடக ரானார் டி.எம்.சௌந்தரராசன். திரைப் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் அந்தப் படத்தின் நாயகனும் டி.எம்.எஸ்ஸின் நெருங்கிய நண்பருமான பி.வி. நரசிம்ம பாரதி. அறிமுகப் பாடலே பிரபலமாக பேசப் பட்டாலும் தொடர்ந்து வாய்ப்புகள் டி.எம்.எஸ்ஸுக்கு பிரகாசமாக எதுவும் வரவில்லை.
பின்னணியில் முன்னணி! - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘தூக்கு தூக்கி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்டன. சி.எஸ்.ஜெயராமன்தான் வழக்கமாக சிவாஜி கணேசனுக்கு அதுவரை பாடிவந்தார். இந்தப் படத்திலும் அவர் பாடுவதையே சிவாஜி கணேசன் உட்பட பலரும் விரும்பினர். ஆனால் படத்தின் பாடலாசிரியர் மருதகாசி, டி.எம்.சௌந்தரராஜனுக்காக இசையமைப் பாளர் ஜி.ராமனாதனிடம் பலமான சிபாரிசு செய்தார்.
‘தூக்கு தூக்கி’ படத்தில் இடம்பெற்ற ’பெண்களை நம்பாதே’, ‘கண்வழி புகுந்து’, ‘ஏலம் ஏலம்’, ‘ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு’, ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ போன்ற பாடல்களை டி.எம்.எஸ். பாடினார். அவை சிவாஜி கணேசன் பாடியதாகவே ரசிகர்கள் கொண்டாடினர்!
இந்தக் கொண்டாட்டத்துக்கு பின்னால் அழுத்தமான ஒரு காரணம் ரசிகர்களின் மனத்தில் இருந்தது. நட்சத்திரங்களாக வளர்ந்துவிட்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவருக்கும் முன்னர் திரையில் பிரபலமான பலரும் பாடி நடித்த கலைஞர்கள். டி.எம்.சௌந்தரராஜனுக்கு முன்பிருந்தே பின்னணி பாடிய பாடகர்களின் குரல், எந்த நடிகருக்காகப் படப்பட்டதோ, அவரது குரல்போல் அல்லாமல் தனித்தே ஒலித்ததை ரசிகர்கள் கவனித்தனர். ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு சி.எஸ்.ஜெயராமன் ‘கா..கா..கா...’ பாடலைப் பாடினார். அந்தப் பாடலை சி.எஸ்.ஜெ. பாடல் என்றுதான் ரசிகர்கள் எடுத்துக்கொண்டனர். ஆக, டி.எம்.எஸ்ஸின் வரவு பின்னணி பாடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
ரஃபியின் வியப்பு: டி.எம்.எஸ்சின் பாடல்களுக்கு இசை மேதை நௌஷத் மிகப் பெரிய விசிறி. டி.எம்.எஸ். முழுமையாக இந்திப் படவுலகத்துக்கு வராதது பாலிவுட்டுக்குப் பெருத்த நஷ்டம் என்று கூறியிருக்கிறார் நௌஷத். பாலிவுட்டின் தேன் குரலோன் என்று பாராட்டப்படும் முகமது ரஃபி, ‘ஓராயிரம் பார்வையிலே’ பாடலைக் கேட்டபின், டி.எம்.எஸ்ஸை சந்தித்த போது, அவரின் குரல்வளையைச் செல்லமாகத் தடவிக்கொடுத்தபடி... “இங்கிருந்து தான் இந்தப் பாடல் வந்திருக்கிறதா?” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
நால்வருக்காக ஒலித்த ஒரு குரல்: எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல எழுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களுக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி பெரும் சாதனை நிகழ்த்திய கலைஞனாக மக்களின் மனத்தில் இடம்பெற்றி ருக்கிறார்.
நடிகர்களின் பேச்சைக் கூர்ந்து சிறிது நேரம் கவனித்துவிட்டு அதன்பின் அவர்களுக்காக பின்னணி பாடும் பாணியைப் பின்பற்றியவர் டி.எம்.எஸ். அவரின் அந்த கிரகிக்கும் தன்மையால்தான் ஜெய்சங்கருக்காக ‘நீ எங்கேஎன் நினைவுகள் அங்கே’, அசோகனுக்காக ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ போன்ற பாடல்களை அவர்களே பாடுவது போன்று பாடமுடிந்தது.
இதற்கெல்லாம் உச்சமாக ‘பாமா விஜயம்’ படத்தில் வரும் ’வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் பாலய்யா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் ஆகிய நான்கு நடிகர்கள் தோன்றிப் பாடுவார்கள். அவர்கள் நான்கு பேருக்குமே டி.எம்.எஸ்ஸின் குரல் அவ்வளவு பாந்தமாகப் பொருந்தியிருக்கும். அதுதான் டி.எம்.எஸ்.ஸின் இசையால் வசமாக்கும் உத்தி! டி.எம்.எஸ்ஸுடன் பாடியவர்களில் பேரினிமையைக் கூட்டியது பி.சுசீலாவின் குரலிணை.
குறைந்த ஸ்ருதியிலும் இனிமை: டி.எம்.எஸ்ஸின் கணீரென்ற குரல், உச்சரிப்பு நேர்த்தி போன்றவை அவருக்கான பலம். அதே சமயம், எல்லா பாடல்களையும் உச்சகட்ட ஸ்ருதியில் தான் டி.எம்.எஸ்ஸால் பாடமுடியும் என்று பலர் விமர்சிக்கவும் செய்தனர். இதற்கான பதிலாக, இளையராஜாவின் இசையிலும் டி.ராஜேந்தரின் இசையிலும் குறைந்த ஸ்ருதி அளவில் இவர் பாடிய பாடல்களும் மிகவும் பிரபலமடைந்திருக்கின்றன.
நகலிசையையும் நேசித்த பண்பு: எழுபதுகளில் தோன்றி எண்பதுகளில் பரவலான மெல்லிசைக் குழுக்களின் வருகையை ஆதரித்த பிரபலமான பின்னணிப் பாடகராகத் திகழ்ந்தவர் டி.எம்.எஸ். அவரே நேரடியாகவும் நிகழ்ச்சிகளை இந்தியாவின் பிரபல மேடைகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் வழங்கினார். தன்னுடைய குரலை நகலெடுத்துப் பாடும் கலைஞர்களையும் பாராட்டுவார்.
மிகவும் பிடித்துவிட்டால் சன்மானம் கூட வழங்குவார். வடசென்னை மெல்லிசைக் குழுக்களில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களைப் பாடும் மதன்குமார் என்னும் பாடகரைப் பாராட்டி, தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி, அவருக்கு அணிவித்து மகிழ்ந்த குழந்தை உள்ளம் கொண்டவர் டி.எம்.எஸ்.!
பாடகரால் மலர்ந்த கவிஞர்கள்: திரைப் பாடல்களுக்கு இணையாக பக்தி இசைப் பாடல்கள், குறிப்பாக முருகன் பாடல்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர் டி.எம்.எஸ். புகழ் வாய்ந்த பாடலாசிரியர்களின் பாடல்களையும் பாடியிருக்கிறார். யார் என்றே தெரியாத பிரபலமடையாத பலரின் பாடல்களையும் டி.எம்.எஸ். பாடிப் பிரபலப்படுத்தி இருக்கிறார். ‘இசையால் வசமாகா இதயம் எது..
எது.. எது?’ என மூன்று முறை எதிரொ லிக்கும். அதன்பின், அதற்கான பதிலாக ‘இசையால் வசமாகா இதயம் எது? இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ் இசையால் வசமாகா இதயம் எது?’ என்னும் இந்தப் பாடலை கீதப்ரியன் என்பவர் எழுதினார். டி.எம்.எஸ். பாடியஇந்தப் பாடலுக்குப் பின்தான் கீதப்ரியன் என்னும் பாடலாசிரியரை உலகம் கண்டுகொண்டது.
எழுதியவர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். வார்த்தைகளும் அதன் கருத்தும் பிடித்துவிட்டால் அதற்கான இசையை அவரே அமைத்து பாடும் வழக்கம் கொண்டவர் டி.எம்.எஸ். ஒருமுறை அவருக்கு வந்த தபாலில் ஒரு கடிதம் வந்திருந்தது. அதில், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்று தொடங்கி ஒரு நீண்ட கவிதை இருந்தது. எழுதியவரின் பெயரும் முகவரியும் இருந்தது.
அந்தக் கவிதை வரிகளில் இருந்த தெய்வாம்சத்தைப் பார்த்ததும் உடனே இசை சேர்த்துப் பாடிய டி.எம்.எஸ்., அந்தப் பாடலை வானொலி நிலையத்தில் சென்று பாடினார். அதோடு மறக்காமல், ‘அந்தப் பாடல் வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கும் நாளையும் அந்தப் பாடலை எழுதியதற்கான சன்மானத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு’ அதை எழுதிய கவிஞருக்கு கடிதம் எழுதினார் டி.எம்.எஸ். அவர்தான் பின்னாளில் தமிழ்த் திரைப்படங்களில் தனக்கெனத் தனித்த ராஜபாட்டையை உருவாக்கிக் கொண்டுப் பயணித்த கவிஞர் வாலி.
பாடி, நடித்துப் புகழ்பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் திரையுலகில் நுழைந்து, பாடகராக புகழின் உச்சத்தைத் தொட்ட டி.எம்.எஸ்., சில படங்களில் கதாநாயகனாக நடித்து அந்தக் கனவைப் பூர்த்தி செய்துகொண்டார்.
- ravikumar.cv@hindutamil.co.in